Published:Updated:

`என்னைச் சந்திக்க நிச்சயம் வருவான்’ - சுதந்திரத்தைக் காப்பாற்றிய துணை நடிகை கண்ணீர்

`என்னைச் சந்திக்க நிச்சயம் வருவான்’ - சுதந்திரத்தைக் காப்பாற்றிய துணை நடிகை கண்ணீர்
`என்னைச் சந்திக்க நிச்சயம் வருவான்’ - சுதந்திரத்தைக் காப்பாற்றிய துணை நடிகை கண்ணீர்

 அவ்வளவு எளிதில் குழந்தை சுதந்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் கடந்த சுதந்திர தினத்தன்று வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தைதான் இந்தச் சுதந்திரம். 

சுதந்திரதினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா மீட்டெடுத்ததோடு, சுதந்திரம் என்று பெயரிட்டார். கால்வாயில் நீண்ட நேரம் கிடந்ததால் சுதந்திரத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதந்திரத்தை மீட்ட துணை நடிகை கீதாவுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அந்தக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாக கீதா கூறினார். அதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்கினார். 

 சுதந்திரத்தை தத்தெடுப்பது தொடர்பான விதிமுறைகளை கேட்டறிந்த கீதா, சில காரணங்களுக்காகப் பின்வாங்கியுள்ளார். தற்போது சுதந்திரம் அண்ணா நகரில் உள்ள தொட்டில் திட்டத்தில் இருந்துவருகிறார். சில தினங்களாக சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட சுதந்திரம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் கீதா அங்குச் சென்று சுதந்திரத்தைப் பார்த்தார். 

அவரிடம் பேசினோம். 

 சுதந்திரம் எப்படியிருக்கிறார்?

 ``அவர் நலமாக இருக்கிறார். கடந்த மூன்று தினங்களாக சளி தொல்லையால் சிரமப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக இருக்கிறார். முகம் பார்த்துச் சிரிக்கிறார். அதைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது"

 சுதந்திரத்தை எப்போது தத்தெடுக்கப்போகிறீர்கள்? 

 (சற்று நேரம் அமைதிக்குப் பிறகு) ``தத்தெடுக்க சில விதிகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதையெல்லாம் பின்பற்றுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சில சிக்கல்கள் உள்ளன. எனவே, சுதந்திரத்தை நான் தத்தெடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும்"

தத்தெடுப்பதில் உங்களுக்கு எந்தமாதிரியான சிக்கல்கள் உள்ளன?

 ``சுதந்திரத்தைக் காப்பாற்றிய நாள் முதல் அவன்தான் என்னுடைய பேரக்குழந்தையாகக் கருதிவருகிறேன். அவனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்தால் என்னையறியாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்று கவனித்துவந்தேன். அவனைத் தத்தெடுக்க நான் விரும்பியதும் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்தனர். ஆனால், அவர்கள் சொல்லும் விதிமுறைகளை என்னால் பின்பற்ற முடியவில்லை. அதுவும் சுதந்திரம்தான் எனக்கு தத்து பேரனாக கிடைப்பான் என்பதும் உறுதியில்லை என்று சொல்கிறார்கள். அவனுக்காகத்தான் நான் தத்தெடுக்கிறேன். குழந்தைகள் இல்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இன்னும் அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனால்தான் அவனைத் தத்தெடுக்கவில்லை"

சுதந்திரத்துக்கு சமீபத்தில் என்ன கிஃப்ட் கொடுத்தீர்கள்? 

 ``வழக்கமாக அவனைச் சந்திக்கச் செல்லும்போது எல்லாம் என்னால் முடிந்த பரிசுகளை வாங்கிச் செல்வேன். எழும்பூர் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் டிரஸ் வாங்கிக் கொண்டு சென்றேன். பதற்றத்தில் அதை பஸ்சிலேயே விட்டுவிட்டேன். இதனால் இந்த முறை அவனுக்கு நான் எந்தப் பரிசும் கொடுக்கவில்லை. புத்தாண்டையொட்டி அவனைச் சந்திக்கச் செல்வேன். அப்போது அவனுக்கு டிரஸ் வாங்கிக் கொடுப்பேன். பச்சிளம் குழந்தையாக அவனைக் கால்வாயிலிருந்து மீட்ட நாளிலிருந்து இன்றுவரை அவன் நினைவுகளோடு வாழ்ந்துவருகிறேன். மேலும், என்னிடம் அவன் வளர்வதைவிட வேறு எங்கு வளர்ந்தாலும் அவன் நலமாகவும் சிறப்பாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக அவனுக்கு விவரம் தெரியும் போது நான் உயிரோடு இருந்தால் என்னைச் சந்திக்க நிச்சயம் அவன் வருவான்"