Published:Updated:

அன்புச் செல்லமே...

அன்புச் செல்லமே...
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புச் செல்லமே...

அன்புச் செல்லமே...

அன்புச் செல்லமே...

செல்ல மகனுக்கு...

உனக்கு ரொம்பவும் பிடிச்ச உன் அம்மா எழுதுவது...

ஒரு விடியற்காலையில் உன்னோட முதல் 'ங்ஙா' சத்தத்தைப் பாதி மயக்கத்தில் கேட்டது இப்போ நடந்த மாதிரியே இருக்கு. அதுக்குள்ளே என் தோள் உயரத்துக்கு வளர்ந்துட்டே. இன்னும் சில வருடங்களில் என் தோளைத் தாண்டி வளர்ந்துடுவே. அப்போ, அம்மா உன்னை அண்ணாந்துப் பார்த்துத்தான் பேசணும். அந்த நாளை நினைச்சுப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு செல்லம்.

நாலு நாள் முன்னாடி வரை, காலையில் கண் விழிச்சதிலிருந்து நைட் தூங்குற வரை, ‘அம்மா என் ஷூ எங்கே?', ‘அம்மா என் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தியா?'னு அம்மாவைத் தேடுவே. ஆனால், ஒரு சின்ன சண்டைக்கு அப்புறம் என்கிட்ட கோவிச்சுட்டு நாலு நாளாக என்னோடு பேசாம இருக்கே. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா தங்கம்.

அன்புச் செல்லமே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உன் ஃப்ரெண்ட்ஸோடு கிரிக்கெட் விளையாடிட்டு நேரம் கழிச்சு வந்து, ஹோம்வொர்க் எழுதாமலே தூங்கும்போதெல்லாம் நான் உன்கிட்ட கோவிச்சுட்டு இருக்கேனா? அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ் உடம்புக்கு நல்லதுன்னு என்கரேஜ் பண்ணியிருக்கேன். ஆனால், உன்னோட ஸ்மார்ட்போன் அடிக்‌ஷனை என்னால் பொறுத்துக்க முடியலைடா செல்லம். வாட்ஸ்அப்லயே வார்த்தைகளைப் பார்த்த உனக்கு, இந்தக் காகித லெட்டரே அதிசயமா இருக்கும். இப்படி எழுதவும் காரணம் இருக்கு.

கண்களைக் கொஞ்சமும் சிமிட்டாமல் ஸ்மார்ட்போனை பார்த்துக்கிட்டே இருந்தால், சின்ன வயசுலேயே கண்கள் உலர்ந்து, பார்வை மங்கிடும். வேலைக்குப் போய் 12 வருஷம் கழிச்சு, தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்த்தால் கழுத்து வலி வந்துச்சு எனக்கு. நீயோ ஸ்மார்ட்போனும் வளைந்த கழுத்துமா உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கும்போது, 12 வயசுலேயே உனக்குக் கழுத்து வலி வந்துடுமோன்னு பயமா இருக்குடா பட்டு. அதனால்தான், அன்னிக்கு உன்னை அதிகமாவே திட்டிட்டேன்.

சொன்னால் சரியாகப் புரியும் வயசு உனக்கு இல்லைன்னாலும் டிரை பண்றேன். நீ அம்மா வயித்துல உருவான நாளிலிருந்து, என் நாக்குக்குப் பிடிச்ச சாப்பாட்டை ஒருநாளும் சாப்பிட்டதில்லை. உன் ஆரோக்கியத்துக்கு எது நல்லதோ அதையே சாப்பிட்டேன். எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கேரட்டைச் சாப்பிட ஆரம்பிச்சேன். நீ பிறக்கிற நேரத்துல, உனக்கு மூச்சுத்திணறல் வந்துட்டதால், அவசர அவசரமாக என் வயிற்றைக் கிழிச்சு ஆபரேஷன் செஞ்சுதான் உன்னை எடுத்தாங்க. நான் படுக்கையிலிருந்து எழுந்துக்கவே அடுத்தவங்க உதவி தேவைப்பட்டது.

ஆபரேஷன் செஞ்ச அடி வயித்துல உணர்ச்சியே இருக்காது. நீ பிறந்ததும் உடம்புல ஹீமோகுளோபின் குறைச்சல், கால்சியம் குறைச்சல்னு எனக்கு நிறைய பிரச்னைகள். ஆனாலும், சாப்பாட்டு நேரத்துல ஆபீஸிலிருந்து வண்டியில் வீட்டுக்கு வந்துடுவேன். மடியிலே உன்னைப் படுக்கப் போட்டு பால் கொடுத்துட்டே மதிய சாப்பாட்டைச் சாப்பிடுவேன். டாக்டர்ஸே ஒரு வருஷம் பால் கொடுத்தா போதும்னு சொன்னப்பவும்,   நீ பிளே ஸ்கூலுக்குப் போகிற வரை தாய்ப்பால் கொடுத்து வளர்த்தேன்.

எல்லாம் எதுக்காக? நீ ஆரோக்கியமா இருக்கணும்னுதானே தங்கம்? நான் என் ரத்தத்தையே தாய்ப்பாலா கொடுத்து வளர்த்த அந்த ஆரோக்கியத்தை, நீ ஸ்மார்ட்போன் பார்த்துக் கெடுத்துக்கிடலாமா? அதைப் பார்த்து எப்படி சும்மா இருக்கிறது? அதான் கோபப்பட்டுட்டேன்.

என்னை மாதிரிதான் ஒவ்வோர் அம்மாவும் குழந்தைகளிடம் கோபப்படறது, அவங்க நல்லதுக்குத்தான். நான் சொன்னது உனக்குப் புரியும்னு நம்பறேன். இதோ... உன்னோட கிரிக்கெட் கிட் பக்கத்துல இந்த லெட்டரை வைக்கிறேன். நீ மறுபடியும் அம்மாகிட்ட வந்து பேசுவேன்னு எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

உனக்குப் பிடித்த கேரட் அல்வாவுடன் காத்திருக்கும்

உன் அம்மா

- ஆ.சாந்தி கணேஷ், ஓவியம்: பாலன்