Published:Updated:

ஆட்டம், பாட்டம், நூலகம்!

ஆட்டம், பாட்டம், நூலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டம், பாட்டம், நூலகம்!

ஆட்டம், பாட்டம், நூலகம்!

மைதி என்றதும் நினைவுக்கு வரும் இடங்களில் முக்கியமானது, நூலகம். ஆனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வட்டார நூலகம், அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலை, உற்சாகப் புயலில் சுழன்றது. அட்டையில் உருவான யானையின் தந்தங்களை ஊதிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தொங்கிக்கொண்டிருந்த காகிதப் பட்டாம்பூச்சிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் நிறைய குழந்தைகள். ‘வாசக சாலை’ அமைப்பு, குழந்தைகளுக்காக நடத்தும் நிகழ்ச்சியில்தான் இந்த உற்சாக வெள்ளம்.

‘‘எல்லோரும் உட்காருங்க... கதை ஆரம்பிக்கப்போகுது’’ என்றதும், சேட்டையில் இருந்தவர்கள் ஓடிவந்து உட்கார்ந்தார்கள். ‘‘முதல்ல நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச கதை, பாட்டு எல்லாம் சொல்வீங்களாம். அப்புறம், உங்களுக்குக் கதை சொல்ல ஒருத்தர் வருவாராம்’’ என்றதும், சில சுட்டிகள் முன்வந்து அழகாக கதை சொன்னார்கள்; பாட்டு பாடினார்கள்.

ஆட்டம், பாட்டம், நூலகம்!

சற்று நேரத்தில் கடலுக்குள்ளிருந்து வரும் அலைபோல, ‘ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்’’ என்ற குரல் கேட்டது. அந்தக் கால அரேபிய பயணிபோல மீசையும் தாடியும்  மினுமினு ஆசையுமாக ஆழி வெங்கடேசன்.
‘‘பிள்ளைகளா நான்தான் சிந்துபாத். நாடு நாடாக சுற்றிவந்து பல சாகசங்களைச் செய்த பயணி, வியாபாரி. உங்களுக்கு 1001 இரவுக் கதைகள் தெரியுமா? நாட்டில் உள்ள பெண்களை எல்லாம் அழிக்கணும்னு அக்கிரமம் செய்த ஒரு கலீபா (அரசர்) மனதை மாற்ற, ஒரு பெண் சொன்ன சாகச கதைகள். அதில் ஒண்ணு சொல்லப்போறேன்’’ என்றபடி சிந்துபாத் கதையைச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிந்துபாத் கப்பலில் பயணம் போனபோது, அங்கிருந்த சுட்டிகளே மாலுமிகளாகவும் பயணிகளாகவும் மாறினார்கள். காட்டுக்குள் போனபோது, யானைகளாகவும் நரிகளாகவும் மாறினார்கள். இப்படி, கதை கேட்க வந்திருந்த சுட்டிகளே, கதாபாத்திரங்களாக மாற, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உற்சாகத்தில் அந்த நூலகமே கப்பலாக மாறியது. 

ஆட்டம், பாட்டம், நூலகம்!

நிகழ்ச்சி முடிந்து சிந்துபாத்திலிருந்து மாறிய ஆழி வெங்கடேசன், “ஒரு கதையை நிகழ்த்தும்போது, அதன் வழியே குழந்தைகளின் கற்பனை உலகம் விரிவடைகிறது. அதில் அவர்களின் எண்ணங்களை கொண்டுவருகிறார்கள். கதைகளின் வழியே மனிதநேயம், பிற உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் பல குணங்களைப் பெறலாம்’’ என்றார்.

‘வாசக சாலை’ அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மிதுன், “எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பாலமாக இருந்துவரும் வாசக சாலை, சிறார்களுக்கு இலக்கிய நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. பெரியவர்களிடம் இலக்கியத்தை எடுத்துச்செல்வதுபோல சிறார்களிடம் எடுத்துச்செல்வது எளிதல்ல. அவர்களின் உலகத்தைப் புரிந்து அதற்கேற்ப அவர்களுக்கு இலக்கியத்தை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கான செயற்பாட்டில் தொடர்ந்து இயங்கிவரும் கதை சொல்லிகள், கலைஞர்களுடன் இணைந்து, ‘குழந்தைகளுக்கான கொண்டாட்டம்’ என்ற பெயரில் சிறார் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்’’ என்றார்.

ஆட்டம், பாட்டம், நூலகம்!

‘‘ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை, இந்த ஆழ்வார்பேட்டை நூலகத்தில் நிகழ்ச்சி நடக்கும். தமிழின் சிறந்த கதை சொல்லிகள், நாடக கலைஞர்கள் இங்கே வந்து குழந்தைகளுக்கு கதை சொல்லப்போகிறார்கள். சென்னையில் உள்ள பெற்றோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள். அவர்களின் உற்சாகமும் கற்பனைதிறனும் வளரட்டும்’’ என்றார், வாசக சாலையின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான அருண்.

ஆட்டம், பாட்டம், நூலகம்!

ஆழ்வார்பேட்டை நூலகரான சக்திவேல், “குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று வாசக சாலை அமைப்பு சொன்னபோது, எங்கள் நுலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உடனடியாக ஒப்புதல் அளித்தோம். இன்று கதைகள் கேட்கும் குழந்தைகள், நாளை கதைப் புத்தகங்களைத் தேடிவருவார்கள். நூலகம் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்’’ என்றார்.

ஆட்டம், பாட்டம், நூலகம்!

நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்திருந்த நாடகவியலாளர் கருணா பிரசாத், “உலகம் முழுக்க குழந்தைகளிடம் கதை சொல்லும் பாணியை வளர்த்தெடுக்கவேண்டிய காலகட்டத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கியமானது. நூலகங்கள் குழந்தைகளுக்கு அறிமுகமாகும், நல்ல நூல்கள் அறிமுகமாகும், மனிதர்கள் அறிமுகமாவார்கள். இந்த மாதிரியான வடிவங்கள் பள்ளி நூலகங்களிலும் தொடரவேண்டும்” என்றார்.

என்ன சுட்டீஸ்... நூலகத்துக்குச் சென்று கதை ரயிலில் பயணிக்கலாமா?

- ச.ராம் சங்கர், படங்கள்: ஆ.வள்ளி சௌத்திரி