Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

காவல் துறையினரிடம் இருக்கும் அம்மாவுடைய பொருள்களை விடுவிக்கக் கோரி தான்யா முறையீடு செய்திருந்த மனு மும்பை நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. கைப்பற்றிய மாள்விகாவின் பொருள்களையெல்லாம் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. தான்யா, வருணுடன் சென்று அதையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வந்தாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தான்யா அனைத்தையும் அலமாரிக்குள் வைத்துவிட்டு, டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்றாள். அவளைத் தொடர்ந்து வருண் சமையலறைக்குள் சென்றான். அவன் அங்கே சென்று அவளை அணைத்துக்கொண்டு சில நிமிடங்கள் நின்றான். தான்யா ஷெல்ஃபிலிருந்து தேயிலை இருக்கும் ஜாடியை எடுத்தாள். வருண் கொறிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஷெல்ஃபை ஒரு நோட்டம் விட்டான். அப்போது பச்சை நிறத்தில் வாசபி (wasabi) வாசனைகொண்ட கொட்டைகள் இருந்த ஜாடி கண்ணில்பட்டது. மாள்விகாவுக்கு வாசபி பிடிக்குமென அவனுக்குத் தெரியும். அவன் வாசபி கொட்டைகளிலிருந்த ஜாடியை எடுத்தான்.

‘`காலாவதியாகும் தேதியைப் பார், அம்மா புதிய ஸ்டாக்கை இன்னொரு பக்கத்தில் வைத்திருப்பார்’’ என்று பேசிக்கொண்டே புதிய ஜாடி ஒன்றை எடுத்தாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

வருண் சிரித்துக்கொண்டே புதிய ஜாடியை வாங்கிக்கொண்டான்.  டீ குடிப்பதற்காக டேபிள் அருகில் உட்கார்ந்தாள் தான்யா. அவள் தன்னை அடக்கிக்கொள்ள முயற்சி செய்தாலும் அதையும் மீறிய விசிம்பல் அவளிடமிருந்து கேட்டது. அவள் அழுகைக்கேற்ப அவளது தோள்கள் குலுங்கின. அவளை நோக்கிச் சென்ற வருண், அவளைப் பின்புறமாக நின்று அணைத்துக்கொண்டு, கழுத்தின் பக்கவாட்டில் முத்தமிட்டான்.
தான்யா திரும்பி அவனை மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, “நீ என்னை விட்டுவிட்டு ஒருபோதும் போகமாட்டாய் என வாக்குறுதி கொடு, வருண்” என்றவள், அவனது உதட்டில் முத்தமிட்டாள். வருணும் அவளை முத்தமிட விரும்பினான். ஆனால், அது சரியான தருணமா என அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவனுடைய இக்கட்டான நிலைமையை தான்யா புரிந்துகொண்டதுபோல அவனை அவள் தன் பக்கம் இழுத்து முத்தமிட்டு, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். ஈருடல் ஓருடல் ஆனது. தான் இதுவரை பட்ட சிரமங்களையெல்லாம் மனதிலிருந்து அகற்றுவதற்கும், மறப்பதற்கும் வருணோடு இணைந்திருக்கும் இந்த சந்தர்ப்பம் உதவும் என நினைத்தாள். அப்படியே இருவரும் தூங்கிப் போனார்கள்.

மாலை மணி ஆறு, வருணின் போன் சிணுங்க அவன் விழித்துக்கொண்டான்.

‘`வருண், நீ எங்கே இருக்கிறாய்? நீ ஃப்ரீயாக இருக்கும்போது என்னைக் கூப்பிடு, உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்’’

‘`ஓகே, டாட். அரைமணி நேரம் கொடுங்கள்”

குளித்து முடித்து, இருபது நிமிடங்களுக்குப் பிறகு, தான்யாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மூன்றாவது தளத்தில் ஒருவர் அபார்ட் மென்டுக்குள் செல்வதைப் பார்த்த அவன் ஒரு கணம் தயங்கினான். அவர்களது கண்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள அந்த மனிதர் அவசரமாக அப்பார்ட்மென்டுக்குள் சென்றார். தலையை அசைத்துக்கொண்டே வருண் அவனுடைய காரை நோக்கிச் சென்றான்.

மும்பை

வெளிநாட்டு சட்ட அமலாக்க அமைப்பு இந்தியாவில் புலன் விசாரணை செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், மைக் ஹென்ரிக்ஸின் அலுவலகம் அமைச்சகத்தைத் தொடர்புகொள்ள, அவர்கள் சி.பி.ஐ-யை அணுகும்படி கூறினார்கள்.

ஏ.டி.எம் கொள்ளை பற்றியும், அதனுடனான காட்டன் ட்ரையில் தொடர்பு பற்றியும் எஃப்.பி.ஐ இந்தியாவில் விசாரிக்கப்போவது அறிந்து, சி.பி.ஐ மகிழ்ச்சியடைந்தது. டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸுடன் கலந்தாலோசித்து அவர்களோடு இணைந்து வேலை செய்ய சைபர் குற்றப் பிரிவைச் சேர்ந்த உதவி கமிஷனரான திபங்கர் ஷோமை தேர்ந்தெடுத்தனர்.

இந்திய அரசு வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுமோ என ஏட்ரியன் கவலைப்பட்டார். அவர் மும்பைக்கு விமானம் ஏறுவதற்குமுன்பாக அவரைச் சந்தித்த சி.பி.ஐ டைரக்டர் அவரிடம், “மிஸ்டர் ஸ்காட், ஆச்சர்யமான செய்திகளை யெல்லாம் இந்திய அரசு கனிவாக எடுத்துக் கொள்ளாது. எனவே, அந்தமாதிரி எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏதாவது குறிப்பிடத்தக்க மாதிரியான கண்டுபிடிப்புகள் இருப்பின் எனக்குத் தெரிவிக்கவும். எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கு அனுமதி கொடுப்பது எளிதானது என்றால், அதைவிட எளிதானது தவறு செய்கிற அதிகாரி களை நாடுகடத்துவது. தயவுசெய்து ஊடகங் களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள்” இதைக்கேட்ட ஏட்ரியன் தலையாட்டிவிட்டு எப்படி அமைகிறதோ அப்படி எடுத்துக் கொள்வதென தீர்மானித்தார்.

டோனியும், ஏட்ரியனும் விமான நிலையத்தை அடைந்தபோது அவர்களை வரவேற்க மும்பை காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தயாராக இருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக பாந்த்ரா-குர்ளா வளாகத்தில் இருக்கும் ட்ரைடண்ட் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றனர்.

ஏட்ரியனுக்கு முன்னால் இருந்த பெரிய சவால், இந்தியக் காவல்துறை பிட்காயின்கள் அல்லது காட்டன் ட்ரைய்ல் பற்றி எந்த செய்தியையும் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அதுகுறித்து விளக்கிச் சொல்வதற்கு அதிக நேரம் ஆனது. இறுதியில், ஏ.சி.பி ஷோம் அவர்களுக்கு லாஜிஸ்டிக் ஆதரவு தருவது தவிர, வேறெதுவும் அவரால் செய்ய இயலாது எனக் கூறிவிட்டதால் டோனியும், ஏட்ரியனும் புலன்விசாரணையில் ஈடுபட்டனர்.

எங்கிருந்து ஆல்டாயிட்ஸ் லாக்-இன் செய்யப்பட்டதோ அது பிரைவேட் கீ-யில் விடுபட்ட ஆல்ஃபா நியூமெரிக் எழுத்துகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆதரவை வேண்டியது. அது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் பெரிய நிறுவனங்களில் ஒன்றான வி.டி.எஸ் (VTS_ நெட்வொர்க்கின் ஒரு `node’ ஆகும். ஏட்ரியனுக்கும், ஏன் டானுக்கும்கூட எப்படி இவ்வளவு கவனக் குறைவாக ஆல்டாயிட்ஸ் ஒரு தடத்தை விட்டுச் சென்றது என்பது ஆச்சர்யமாக இருந்தது. அவர் பிடிபடுவார் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

“அது போனா... ஒருவேளை டேபிளட்டா?” என ஏட்ரியன் வி.டி.எஸ்-ன் சட்டப்பிரிவுத் தலைவரை அடுத்த நாள் காலையில் சந்தித்தபோது கேட்டார்.

‘`இல்லை. அது லீஸ்டு லைன். பெருநிறுவனக் குழுமங்களுக்குத் தகவல்தொடர்பு வசதி வழங்கக் கூடியது.’’

‘`லீஸ்டு லைன் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும்” என ஏட்ரியன் கூறினார். சட்டப் பிரிவின் தலைவர் இந்த சொற்களைப் புரிந்துகொள்ள போராடிக்கொண்டிருக்கும்     ஏ.சி.பி ஷோமைப் பார்த்தார்.
‘`இந்த லீஸ்டு லைன் எந்த நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்துகிறது?” என ஏட்ரியன் கேட்டார். அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரும் முகவரியும் கிடைத்தால், அதை உபயோகப்படுத்திய தனிப்பட்ட நபரை ட்ராக் செய்ய முடியும் என நம்பினார்.

‘`நான் செக் செய்துவிட்டு உங்களிடம் கூறுகிறேன்’’ என்றார்.

ஏட்ரியன் புருவங்களை உயர்த்தி, “உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்.

‘`நான்… உண்மையிலேயே… வந்து….’’ என சட்டப்பிரிவின் தலைவர் உளறினார்.

ஏட்ரியன் இடைமறித்து, ‘`நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நீங்களே அந்தப் பெயர்களைச் சொல்லலாமா என்பதை செக் பண்ணிவிட்டு சொல்கிறீர்களா?’’

‘`நீதித் துறையைச் சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரி கள் அல்லது காவல்துறை வேண்டுகோளின் பேரில்தான் கொடுக்கமுடியும். அது தவிர்த்து சட்டரீதியாக, தகவலைக் கொடுக்க முடியாது.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

ஏட்ரியன் ஏ.சி.பி ஷோமைப் பார்த்தார். ‘`எங்களுக்குத் தகவலைக் கொடுக்கச் சொல்லுமாறு நீங்கள் சொல்லலாம் இல்லையா?”

‘`சொல்ல முடியாது’’ என ஏ.சி.பி ஷோம் மிகவும் வருத்தத்துடன் சொன்னார். ‘`அதற்கு நீதிமன்ற உத்தரவு தேவை. இல்லையென்றால், டைரக்டர் ஜெனரல் உத்தரவுகூட போதும்’’ எனக் கூறினார்.

‘`அதற்கு எவ்வளவு நாள் ஆகும்?”

‘`நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வாரம் ஆகலாம்’’ என்று கூறி, மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் ஏசிபி ஷோம்.

வி.டி.எஸ் நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவரின் மேசையில் இருந்த கோப்பில் பல பேப்பர்கள் இருந்தன. அதில் ஐ.பி முகவரி தொடர்பான ஆவணம் மட்டுமல்லாமல், வேறு பல தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் இருக்கக்கூடும் என ஏட்ரியன் நினைத்தார்.

அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கோப்பில் மேலாக இருந்த காகிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அவர்களால் ஒரு வாரம் காத்திருக்கவும் முடியாது.
அவர், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து ஏ.சி.பி ஷோமைப் பார்த்தார். ‘`உங்கள் அனுமதியோடு நான் அவரிடம் தனியாகப் பேசலாமா?’’ என சட்டப்பிரிவு தலைவரைப் பார்த்தபடி கேட்டார்.
‘`கண்டிப்பாக’’ என்றார் ஷோம்.

சட்டப்பிரிவுத் தலைவர் எழுந்து ஏட்ரியனுடன் வெளியே சென்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40

‘`சார், நான் இதை ஏசிபி முன்னால் சொல்ல விரும்ப வில்லை. ஆனால், இது எஃப்பிஐ-க்கு மிகவும் முக்கியமான வழக்காகும். இந்த வழக்கின் அடிமட்ட விஷயத்தைத் தெரிந்துகொள்ள உதவுபவர்களுக்கு வெகுமானம் வழங்கப்படும்” என்று சொல்லி நிறுத்திய அவர் மேலும், பொருத்தமான எந்த வகையென்றாலும் சரி” என்றார்.

‘`உங்களுடைய அகந்தையைப் பாராட்டுகிறேன், மிஸ்டர் ஸ்காட்.” சட்டப்பிரிவின் தலைவருடைய முகத்தில் கோபம் கொப்பளித்தது. “அமெரிக்கர்களாகிய நீங்கள் எது விரும்பினாலும் அது கிடைக்கும் என நினைக்கிறீர்கள். ஆமாம், உங்களுடைய `க்ரீன் பேப்பர்’ சிலரை மயக்கலாம், ஆனால், என்னை ஒன்றும் செய்யமுடியாது. இதை நான் ரிப்போர்ட் செய்வதற்கு முன்பாக நீங்கள் சென்றுவிட்டால் நல்லது” என்றார்.
 
‘`சார், இது உங்களை வருத்தமடைய வைக்கிறது என்பது புரிகிறது. ஆனால், நீங்கள் செய்யப்போகும் நல்ல காரியத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?” காட்டன் ட்ரையிலுக்குப் பின்னால் இருக்கும் நபர்களைப் பற்றி அமெரிக்கா தெரிந்துகொண்டால், நாம் போதை, கடத்தல், ஆபாசம், குழந்தைகள் மீதான பாலியல் இச்சைக்கு அடிமையாவதிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தடுக்க முடியும். நான் கொடுத்த ஐ.பி முகவரி மீதான விவரங்கள்தான் இதற்குத் தேவைப்படுவதாகும்’ என்று ஏட்ரியன் நல்லொழுக்க ரீதியில் வேண்டுகோள் விடுத்தார்.

‘`என்னை மன்னித்து விடுங்கள், மிஸ்டர் ஸ்காட். நான் உதவி செய்யவே விரும்புகிறேன். ஆனால், அதுகுறித்து எங்க ளுடைய நிறுவனம் எங்களைக் கேட்டுக்கொண் டால் மட்டுமே அதைச் செய்ய முடியும்” எனக் கூறினார்.

மூவரும் சட்டப்பிரிவு தலைவருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.டோனி தன்னுடைய செல்போனை எடுத்து அதில் முகவரியுடன் கூடிய பேப்பரின் படத்தைக் காண்பித்தார். பார்க்கிங் பகுதியிலிருந்து வெளியே வந்த ஜீப் அந்த முகவரியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஏட்ரியன் போன் ஒலித்தது. டானிடமிருந்து குறுஞ்செய்தி: எஃப்பிஐ-ல் எனது பிரிவிலிருந்து சமீபத்திய செய்தி அறிக்கை களைப் பெற்றுக்கொள்ளவும். நாம் செய்யவேண்டிய வேலை அதிகமிருக்கிறது.

 (பித்தலாட்டம் தொடரும்)

-  ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்