சுட்டி விகடன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை இணைந்து, மதுரை மாவட்டத்தைப் பற்றிய 200 முக்கியத் தகவல்களைத் தொகுத்து, பள்ளி மாணவர்களுக்கு இணைப்புப் புத்தகமாக வழங்கியது. பிறகு, OMR ஷீட் முறையில் தேர்வு நடத்தியது. இதில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு, டிசம்பர் 8-ம் தேதி, திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள, மதுரைக் கல்லூரி சங்கரைய்யர் அரங்கில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என, மதுரை நகரப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று அரங்கத்தை உற்சாகத்தில் நிரப்பினர்.
விழாவில் மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ``பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கண்காணித்து, தொலைக்காட்சி மற்றும் மொபைல் தாக்கத்திலிருந்து விடுவித்து, புத்தகங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும். சுட்டிகள் தங்களது திறமைகளை மெருகூட்டினால், வாய்ப்புகளும் அங்கீகாரமும் தேடிவரும்’’ என்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னர் கல்லூரி இயக்குநர் ராஜாகோவிந்தசாமி, ‘மகிழ்ச்சியோடு நீயிருந்தால் கை தட்டு’ எனப் பாடி, அனைவரையும் கைதட்டச் செய்து, அரங்கின் மொத்தப் பார்வையையும் கவர்ந்தார்.
மதுரை ரோட்டரி கிளப் துணை கவர்னர் கோடீஸ்வரன், ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ்லால், வெள்ளையன், ராதாகிருஷ்ணன், சுந்தரவடிவேல், ஹரிஹரன், பாஸ்கரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
1,250 மாணவர்களுக்கு சுட்டி விகடன் புத்தகங்களை வாங்கிக்கொடுத்த, `அம்மா எலிசபெத் ஜெயசீலினி அறக்கட்டளை' நிறுவனர் கிரம்மர் சுரேஷ், ``சுட்டிகள் படிக்கும்போதே நல்ல நட்பையும், நல்ல நண்பர்களையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

காளிமார்க் நிறுவனத்தின் சார்பாக, அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மதுரை நியூஸ் எஜன்ட்களான கே.கோவிந்தராஜ், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் புத்தகங்களை வழங்கி, தேர்வு எழுத ஊக்குவித்திருந்தனர்.
கருங்காலக்குடி அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பர்கானா பாத்திமா, ``ஸ்கூல் லைப்ரரியில் சுட்டி விகடன் படிப்பேன். ‘நம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்' போட்டியில் கலந்துக்கிட்டேன். OMR ஷீட்டில் தேர்வு எழுதியது, இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. மதுரைக்கு இத்தனை சிறப்புகள் இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றார்.

எட்டாம் வகுப்பு மாணவி ஹர்ஷிதா, ``என் சின்ன வயசிலிருந்தே சுட்டி விகடன் படிக்கச் சொல்லி அம்மா ஊக்கப்படுத்துவாங்க. அதனால், சுட்டி விகடனைத் தொடர்ந்து படிச்சுட்டு வறேன். மதுரை 200 போட்டியில், என் பள்ளி சார்பாக முதல் பரிசு வாங்கியிருக்கேன். சுட்டி விகடனின் அடுத்தடுத்த போட்டிகளுக்கும் நான் ரெடி’’ என மகிழ்ச்சியோடு சவால் விடுத்தார்.
- அருண் சின்னதுரை, ச.பவித்ரா, மு.முத்துக்குமரன், பூ.பவித்ரா
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வி.சதீஷ்குமார்