பெயர்: தியாக சேகர்
செல்லப் பெயர்: ‘காகிதப் பறவை’
சொந்த ஊரு: திருவாரூர் மாவட்டம், நக்கம்பாடி.
என்ன வேலை செய்றீங்க?
‘ஒரிகாமி’ என்ற காகித மடிப்புகள் மூலம் மாணவர்களுக்கு விதவிதமான உருவங்கள் செய்யக் கத்துக்கொடுக்கிறேன்.
எப்படி இந்த எண்ணம் வந்துச்சு?
அப்போ நான் கல்லூரியில் படிச்சுட்டிருந்தேன். பேராசிரியர் ஆண்டோ, கேமரா கொடுத்து, படம் எடுக்கச் சொல்வார். அது வழியா உருவங்களைப் பார்க்கிறது சந்தோஷமா இருந்துச்சு. அப்புறம், ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ காத்தவராயன் மூலம் ஒரிகாமி கத்துக்கிட்டேன்.

எத்தனை வகையான உருவங்களைச் செய்வீங்க?
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், முப்பரிமாண உருவங்கள் என 500-க்கும் மேலே.
நீங்க செய்யறதில் சுட்டிகளுக்கு ரொம்ப பிடிச்ச உருவம் எது?
கொக்கு, வண்ணத்துப்பூச்சி, பேசும் காகம்.
எத்தனை வருஷமா இப்படிச் செய்யறீங்க?
11 வருடங்களாக குழந்தைகளுடனும் காகித உயிர்களுடனும் பயணிக்கிறேன்.
எத்தனை பள்ளிகளுக்குப் போயிருப்பீங்க?
குறைஞ்சது 1000 பள்ளிகள்.
ரொம்ப சந்தோஷப்பட்டது நிகழ்ச்சி...
கோயமுத்தூர் பக்கத்துல ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரிகாமி கத்துக்கொடுத்தேன். அடுத்தமுறை அங்கே போனபோது ஒரு பையன், ‘நான் வீட்டுக்கு ஒரே பையன். வெளியில விளையாட விடமாட்டாங்க. வீட்டுக்குள்ளே தனியாவே இருப்பேன். இப்போ, நீங்க கத்துக்கொடுத்த ஒரிகாமிகளைச் செஞ்சு விளையாடறேன். என்னோடு நண்பர்கள் இருக்கிற உணர்வு’’னு சொன்னான். ரொம்ப சந்தோஷப்பட்டடேன்.
எதிர்கால ஆசை?
ஜப்பான்காரங்க ஒரிகாமியில 10,000 மடிப்புகள் வரை ஆவணப்படுத்தி வெச்சிருக்காங்க. நம்ம ஊர்ல இருக்கும் பூ வகைகளை எல்லாம் ஓரிகாமி முறையில் காகிதத்தில் கொண்டுவந்து ஆவணப்படுத்தணும். உங்களை மாதிரி குழந்தைகளின் உதவியோடு இதைச் செய்யமுடியும்னு நம்பறேன்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- விஷ்ணுபுரம் சரவணன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி
வாங்க... ஒரு ஒரிகாமி சொல்லிக்கொடுக்கிறார் தியாக சேகர்
