Published:Updated:

"ஓடி ஒளியக்கூட பணம் இல்லை!" ஹரிணியைக் கடத்தியவர் தற்கொலை முயற்சி

"ஹரிணியை சங்கீதாவிடம் கொடுத்தபோது சங்கீதா கொடுத்த பணத்தைக் எடுத்துக்கொண்டு, சங்கீதாவின் தங்கை தனலட்சுமியுடன் ஊட்டிக்குச் சென்றிருக்கிறார் வீரபாண்டியன். அங்கே தனலட்சுமியுடன் உல்லாசமாக இருந்து கையில் இருந்த மொத்தப் பணத்தையும் செலவு செய்திருக்கிறார். கையில் காசு தீர்ந்ததால் இருவரும் மீண்டும் மேலப்பட்டு கிராமத்திற்கே வந்துவிட்டார்கள்."

"ஓடி ஒளியக்கூட பணம் இல்லை!" ஹரிணியைக் கடத்தியவர் தற்கொலை முயற்சி
"ஓடி ஒளியக்கூட பணம் இல்லை!" ஹரிணியைக் கடத்தியவர் தற்கொலை முயற்சி

காணாமல் போன ஹரிணியை 115 நாள்களுக்குப் பிறகு மீட்டு நிம்மதி பெருமூச்சை விட்டிருக்கிறது காஞ்சிபுரம் காவல்துறை. ஹரிணியைக் கடத்திய வீரபாண்டியன், எப்படியும் தன்னை போலீஸார் பிடித்துவிடுவார்கள் என பயந்து தலைமறைவானார். போலீஸ் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த வீரபாண்டியன் அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது காவல்துறை பாதுகாப்பில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹரிணி தொலைந்து போனதிலிருந்து ஹரிணி கிடைத்தது வரை விகடன் வாசகர்களுக்கு எல்லாமே தெரிந்ததுதான். இந்த நிலையில் ஹரிணியைக் கடத்தியவர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றுவருவதையும் விகடன் முதலில் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் பெட்ரோல் பங்க்கில் இருந்த சிலரின் புகைப்படங்களைக் காவல்துறையினர் வெளியிட்டார்கள். அதில் இருப்பவர் மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் எனக் காவல் துறையினருக்கு அடையாளம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அவரின் நடமாட்டத்தைக் கண்காணித்த காவல் துறையினர் வீரபாண்டியின் நண்பர் பிரகாஷையும் கண்காணித்தார்கள். பிரகாஷும் சங்கீதாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்களும் காவல்துறையினரின் வளையத்துக்குள் வந்தனர். வலுவான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் பிரகாஷைப் பிடித்து விசாரணை நடத்திய போது, திருப்போரூரில் ஹரிணி இருக்கும் தகவல் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஹரணி மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். ஹரிணியை வளர்த்து வந்த சங்கீதாவும் கைது செய்யப்பட்டார்.

சங்கீதாவுக்குத் திருமணமாகி 8 வருஷமாகியும் குழந்தை இல்லை. சங்கீதாவுக்கும் பிரகாஷ் (எ) வசந்தராஜ் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. அதேபோல் சங்கீதாவின் தங்கைக்கு சுதாகர் என்பவருடன் திருமணம் ஆன நிலையில், அவரைப் பிரிந்து வாழ்கிறார். கணவருடன் ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து வீரபாண்டியனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சங்கீதா ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று வீரபாண்டியனிடம் சொல்ல குழந்தை கடத்துவதற்கான திட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். அதன்படியே ஹரிணியை வீரபாண்டியும் அவரின் நண்பர் கார்த்தியும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கார்த்தி தலைமறைவாகிவிட்டார். தனது வீட்டுக்குக் காவல்துறையினர் வந்து சென்றதைத் தெரிந்துகொண்ட வீரபாண்டியன், தன்னை எப்படியும் போலீஸ் பிடித்துவிடுவார்கள் எனத் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஹரிணி கிடைத்த அன்று ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்று அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டு பாதி மயக்க நிலையில் இருந்த வீரபாண்டியனைக் கண்ட கிராமத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தற்போது காவல்துறையினரின் பாதுகாப்போடு வீரபாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``வீரபாண்டியன் சங்கீதாவின் தங்கை தனலட்சுமியோடு வாழ்ந்து வருகிறார். ஹரிணி கிடைச்சதும் போலீஸ் எப்படியும் நம்மைப் பிடிச்சுடுவாங்கன்னு நினைத்திருக்கிறார். இதனால் ஊருக்கு அருகே உள்ள ஆற்றங்கரைப் பகுதியில் தலைமறைவாகி விட்டார். அவர் எதிர்பார்த்தது போலவே காவல்துறையினர் அவர் வீட்டுக்குச் சென்று விசாரித்தார்கள். இதனால் பயந்த வீரபாண்டியன் வீடு திரும்பாமல் அங்கேயே இருந்தார். இனித் தப்பிக்க வழியில்லை. எப்படியும் போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் அவருக்கு அதிகரித்தது. விஷம் வாங்குவதற்குக் கூட அவரிடம் காசு இல்லை. இதனால் அரளி விதையை அரைத்துச் சாப்பிட்டுவிட்டார். அரைமயக்க நிலையில் ஆற்றங்கரை ஓரத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வீரபாண்டியைக் கிராமத்தில் உள்ளவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

`என்னை எப்படியும் போலீஸ் பிடிச்சுடுவாங்க. ஓடி ஒளியக்கூட என்னிடம் பணம் இல்லை’ என அப்போது கிராமத்தினரிடம் சொல்லி இருக்கிறார் வீரபாண்டியன். ஹரிணியை சங்கீதாவிடம் கொடுத்தபோது சங்கீதா கொடுத்த பணத்தைக் எடுத்துக்கொண்டு, சங்கீதாவின் தங்கை தனலட்சுமியுடன் ஊட்டிக்குச் சென்றிருக்கிறார். அங்கே தனலட்சுமியுடன் உல்லாசமாக இருந்து கையில் இருந்த மொத்தப் பணத்தையும் செலவு செய்திருக்கிறார். கையில் காசு தீர்ந்ததால் இருவரும் மீண்டும் மேலப்பட்டு கிராமத்திற்கே வந்துவிட்டார்கள். வீரபாண்டிக்குத் தொழில் எதுவும் தெரியாது. வேலை இல்லாததால் கையில் பணம் இல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஹரிணியை நாங்கள் கண்டுபிடித்தோம். ஹரிணி கிடைத்த தகவல் கிடைத்ததும், தலைமறைவாக இருப்பதற்குக்கூட வீரபாண்டியிடம் பணம் இல்லை. இதனால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார் வீரபாண்டி. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் வீரபாண்டி தற்போது குணமடைந்துவிட்டார். இன்று அவரை டிஸ்சார்ஜ் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கிறோம். அதுபோல் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பிரகாஷ் வழக்கிற்கு முழுமையாக ஒத்துழைப்பு தருகிறார். நான்கு பேரும் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது” என்கிறார்கள்.

இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ!