
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு இடங்கள்
உலகின் முதல் தொழில், முதன்மையான தொழில் விவசாயம். அதுதான் நமக்கு உணவு அளித்து, நம்மை எல்லாம் வாழவைக்கிறது. அந்த விவசாயிகள் வாழுமிடமே, ஒவ்வொரு நாட்டின் உயிர்மூச்சான கிராமங்கள்தான்.

அந்தக் கிராமங்களின் மனிதர்களும், இடங்களும், விளையாட்டுகளும், விழாக்களும் இயற்கையுடன் இணைந்தவை. அதிலும், தமிழர்களின் தனித்துவம் சிறப்பானது. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் சில நாள்களாவது கிராமத்துக்குச் சென்று, அந்த வாழ்வை வாழ வேண்டும்.
இந்தப் பொங்கல் தினத்தை கிராமம் சார்ந்த சில அடையாளங்களை, ‘நம்ம ஊரு நம்ம மண்’ என பார்க்கலாம் வாங்க!

சுமைதாங்கிக் கல்
தன் ஊர் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள், அந்த ஊருக்கு வருபவர்கள், தாங்கள் கொண்டுவரும் சுமையை இறக்கிவைக்கவும், சற்று இளைப்பாறவும் அமைக்கப் பட்டவை, சுமைதாங்கிக் கல். சில கிராம எல்லைகளில் இன்றும் இவற்றைப் பார்க்கலாம்.

ஊரணி
ஒரு கிராமத்தின் மொத்த தேவையில் முக்கியப் பங்கு வகிப்பது ஊரணிதான். கிராமமக்களின் பெரும்பாலான தண்ணீர் தேவையை நிறைவேற்று கிறது.

திண்ணை
கிராம வீடுகளுக்குத் திண்ணைதான் சிறப்பு. வழிப்போக்கர்கள் தங்கிக்கொள்ள உறைவிடமாக இருக்கும் திண்ணை, மாலையில் மக்கள் அமர்ந்து பேசிக்கொள்வதற்கான இடமாகவும் இருக்கும்.

கிணத்தடி
முன்பெல்லாம் ஊருக்கு ஒரு பொதுக்கிணறு இருக்கும். தண்ணீருக்காக மக்கள் அதிகமாகக் கூடும் இடம் அதுதான். இப்போது அந்த வகை கிணறுகள் பெரும்பாலான ஊர்களில் இல்லை. அந்த இடத்தைத் தண்ணீர்க் குழாய்கள் ஆக்கிரமித்துவிட்டன.

படித்துறை
‘படித்துறை’ என்பது, நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பரந்த படிகள்கொண்ட அமைப்பைக் குறிக்கும். கிராமத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் அமர்ந்து கதை பேசுவதும் நடக்கும். அதாவது, கிராமத்தின் கடற்கரை.

மந்தை
கிராம மக்களின் அனைத்து விஷேசங்களும் நடைபெறும் இடம். சந்தையைக் கூட்டுவது, அவர்களின் விளையாட்டுக்குரிய இடமும் அதுதான்.
தொகுப்பு: யுவா, துரை.நாகராஜன், ஜி.லட்சுமணன், சி.வெற்றிவேல்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி