Published:Updated:

சிறுவர்கள் பிச்சை கேட்டால், மொபைல் பத்திரம்! `பக்கா' பயிற்சி

சாமர்த்தியமாக லவட்டிக்கொண்டிருக்கும் போன்களின் மதிப்புக்கு ஏற்ப அந்தச் சிறுவர்களுக்கு 1,000 முதல் 3000 ரூபாய் வரை வழங்கப்படும். இந்தக் கொள்ளைக் கும்பல் அதிகம் குறிவைப்பது சாம்சங் மாடல் போன்களைத்தான். அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற மாடல்களின் போன்கள்.

சிறுவர்கள் பிச்சை கேட்டால், மொபைல் பத்திரம்! `பக்கா' பயிற்சி
சிறுவர்கள் பிச்சை கேட்டால், மொபைல் பத்திரம்! `பக்கா' பயிற்சி

சில வருடத்துக்கு முன்பு வரை நெரிசல்மிக்க வீதியில் அல்லது பேருந்தில் நடக்கும் திருட்டு என்றால், மணிபர்ஸை லவுட்டுவது, கழுத்தில் அல்லது கையில் அணிந்திருக்கும் செயின், பிரேஸ்லெட் போன்றவற்றை ஆட்டையைப்போடுவது என்றுதான் இருந்தது. சமீபகாலமாக மொபைல்போன் திருட்டுச் சம்பவங்கள், பெருநகரங்களில் அதிகரித்துவிட்டன. மும்பையில், விலை உயர்ந்த மொபைல்போன்களைத் திருடுவதற்கென்றே திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறுவர்களை எவ்வாறு பயிற்றுவித்து அனுப்புகின்றனர் என்பதுகுறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக, சாலைகளில் அல்லது வீதிகளில் பார்க்கவே பாவமான தோற்றத்துடன், ஒரு கையை வயிற்றின் மீது வைத்தபடி மறு கையை ஏந்தி நிற்கும் குழந்தைகளையும், சிறுவர்-சிறுமிகளையும் பார்க்கும்போதே மனம் கலங்கிப்போய்விடும். நாமும் சட்டைப் பாக்கெட்டில் கிடைக்கும் சில்லறையையோ ரூபாயையோ எடுத்துக் கொடுப்போம். ஒருசிலர் காசு கொடுக்க மறுத்துவிடுவர்.

இப்படிப் பிச்சையெடுக்கும் சிறுவர்கள், நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர்கள்தான். பெரும்பாலான நகரங்களில் மக்களின் இந்த இரக்கச் சிந்தனைகளையே தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் சில சமூகவிரோதக் கும்பல்கள், வீதிகளில் அநாதைகளாகத் திரியும் மற்றும் கடத்தி வரப்படும் குழந்தைகளையும் சிறுவர்களையும்  மிரட்டி பிச்சையெடுக்கவைத்து, அதைப் பிடுங்கிக்கொள்வார்கள். இந்தக் கும்பல்களின் பிடியிலிருந்து இந்தச் சிறுவர் சிறுமிகள் எளிதில் தப்பிவிட முடியாது. பிச்சையெடுப்பதற்கான `ஏரியா' பக்கவாகப் பிரிக்கப்பட்டு, எங்கும் ஓடிவிட முடியாத வகையில் ரகசியக் கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பார்கள். 

இதுபோன்று சிறுவர்களை வைத்து பிச்சையெடுத்துச் சம்பாதிக்கும் கும்பல், நாடு முழுவதும் பெரும் நெட்வொர்க்குடன் செயல்பட்டுவருகிறது. அந்த வகையில், இதுபோன்ற ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள், மும்பை நகரில் மொபைல்போன்களைத் திருடுவதற்கென்றே குழந்தைகளைப் பயிற்றுவித்து அனுப்புவது தெரியவந்துள்ளது. 

மும்பை நகரில் பிஸியான சாலைகளில் செல்வோரிடம் பிச்சை கேட்கும் சிறுவர்கள் வந்து சென்ற பிறகு, பிச்சையிட்டவரின் மொபைல்போன்கள் காணாமல்போகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, காவல் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைக் கண்டுபிடிப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் களமிறக்கப்பட்டது. இவர்களின் தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்து, மொபைல்போன் திருடிய 4 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த செல்போன் திருட்டின் பின்னணியில் மிகப்பெரிய ஒரு கும்பல் இருப்பதும், மொபைல்போன்களை எப்படித் திருட வேண்டும் என ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்குப் பயிற்சியளித்து, மும்பை நகரில் மட்டுமல்லாது மற்ற மாநில நகரங்களிலும் களமிறக்கியிருப்பதும் தெரியவந்தது. 

பக்கா பயிற்சி!

இவ்வாறு மொபைல்போன் திருடுவதற்காக அனுப்பப்படும் சிறுவர்களுக்கு, யாரிடம் திருடுவது என்பதை எப்படி முடிவுசெய்ய வேண்டும், அவர்களை எப்படி அணுக வேண்டும், எந்த வகையான போன்களைத் திருட வேண்டும், பிடிபடாமல் தப்பித்துக்கொள்வது எப்படி... போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, கடுமையான பல விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தச் சிறுவர்கள் போன்களை எப்படித் திருடுகிறார்கள் என்பதை, கைதான 4 பேரும் விவரித்துள்ளனர். முதலில், மொபைல்போன் திருட்டுக்காகக் களமிறக்கப்படும் கும்பல், எந்த ஏரியாவில் களமிறங்க வேண்டும், எந்த வகையான போனைத் திருட வேண்டும் என்பது முதல் சம்பவ இடத்திலிருந்து எப்படித் துரிதமாக நழுவுவது என்பது வரை நன்கு திட்டமிட்டுக்கொள்கிறது. 

இவர்களின் அன்றாடப் பணிகள் (?!) குறித்த திட்டமிடல், நகரின் எந்தப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் அல்லது அன்றைய தினம் எந்த இடத்தில் அதிக மக்கள் கூடுவார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு  தீர்மானிக்கப்படும். அதாவது, இந்தச் சிறுவர்களில் யார் யாருக்கு எந்தெந்த வாரம், யார் யார் எந்தெந்தப் பண்டிகை நாள்களில் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதையெல்லாம் இந்தக் கும்பலின் தலைவன், பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துவிடுவான்.

உதாரணமாக, செவ்வாய்க்கிழமையென்றால் மும்பையின் பிரபலமான சித்திவிநாயக் கோயில் அமைந்துள்ள பிரபாதேவி பகுதியில் கணிசமான சிறுவர்கள் களமிறக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமையென்றால், ஹாஜி அலி பகுதிக்கு அதிகம்பேர் வருவார்கள் என்பதால், அவர்கள் அங்கே செல்வார்கள். வழக்கமான நாள்கள் என்றால், மும்பையின் நெரிசல்மிக்க ரயில்நிலையங்கள் அமைந்துள்ள சர்ச்கேட், சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாதர், பாந்த்ரா மற்றும் அந்தேரி போன்ற இடங்களில் தங்களின் திருவிளையாடல்களை அரங்கேற்றுவார்கள். 

பலே தந்திரங்கள்!

ஏரியா முடிவுசெய்யப்பட்ட பிறகு,  திருடவேண்டிய இடத்துக்கு நான்கு சிறுவர்கள், அந்தக் கும்பலுக்கு மூளையாகச் செயல்படுபவனால் அனுப்பப்படுவார்கள். அதில் ஒரு சிறுவன் பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும். தங்களுக்குத் தோதாக இருக்கும் நபரைப் பார்த்துவிட்டால், அந்த நபரிடம் பிச்சைக்கார வேஷமிட்ட சிறுவன் சென்று, அவரது காலின் தொடைப்பகுதியைத் தொட்டுக் கெஞ்சுவதுபோல் பிச்சை கேட்பான். தொடர்ந்து விடாமல் அவன் காலைச் சுரண்டிக்கொண்டிருக்கும்போது, அந்த நபரின் கவனம் முழுவதும் அந்தச் சிறுவன் மீதே இருக்கும். அப்போது அவரை அறியாமல் காலை சற்று அகட்டுவார் அல்லது நகர்த்துவார். அப்போது  பின்பக்கமாக வரும் இரண்டாவது சிறுவன், அந்த நபரின் பின்பாக்கெட்டிலிருந்தோ அல்லது தொங்கவிட்டுள்ள பையிலிருந்தோ போனை லாகவமாகத் திருடிக்கொண்டு போய்விடுவான். மீதமுள்ள 2 சிறுவர்களும், அங்கே போலீஸார் யாரும் வருகிறார்களா என்பதைக் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். 

இவ்வாறு திருடிய போன்களின் மதிப்புக்கேற்ப அந்தச் சிறுவர்களுக்கு, 1,000 முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்படும். இந்தக் கொள்ளைக் கும்பல் அதிகம் குறிவைப்பது, சாம்சங் மாடல் போன்களைத்தான். அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற மாடல்களின் போன்கள். மற்ற போன்களைவிட இரண்டு மடங்கு விலை அதிகம் என்றாலும், தப்பித்தவறிகூட ஐ போன்களை இந்தச் சிறுவர்கள் திருட மாட்டார்கள். ஏனெனில், ஐ போனில், அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடுவதற்கான `டிராக்கிங்' (Tracking) முறை இருப்பதால், அது அவர்களை போலீஸில் சிக்கவைத்துவிடும். ஒருவேளை தெரியாமல் ஐ போனைத் திருடிவிட்டாலும், அதை வீட்டுக்குச் செல்லும் முன்னரோ அல்லது இவர்கள் வழக்கமாகக் கூடும் இடத்துக்குச் செல்லும் முன்னரோ குழி தோண்டி மறைத்து வைத்துவிட வேண்டும் என்று, இந்தக் கும்பலுக்கு மூளையாகச் செயல்படுபவன் இந்தச் சிறுவர்களை உஷார்படுத்தி வைத்துள்ளான் என்று இந்த வழக்கை விசாரித்துவரும் மும்பைக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

பண்டிகைக் காலம்... பணம் வரும் காலம்!

பண்டிகைக் காலங்கள் வந்துவிட்டால், அதிலும் மும்பையில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி என்றால், இந்தத் திருட்டுக் கும்பலுக்கு நல்ல வேட்டைதான். விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் 10 தினங்கள் என்பதால், இவர்களின் சம்பாத்தியம் (!) உச்சம் தொடும். மும்பை மட்டுமல்லாது, புனே, நாசிக் போன்ற மகாராஷ்டிராவின் இதர முக்கிய நகரங்களிலும் இந்தக் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டும். நவராத்திரி வந்துவிட்டால், இவர்கள் குஜராத்துக்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள். அதேபோன்று மகர சங்கராந்தியின்போது குஜராத் மட்டுமல்லாது, மத்தியப் பிரதேசத்துக்கும் செல்வார்கள்.  

இவ்வாறு திருடப்படும் மொபைல்போன்கள் ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக பங்காளதேஷுக்குக் கடத்தப்படுகின்றன. இந்தத் திருட்டில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அடுத்தமுறை ஏதாவது ஒரு சிறுவன் பிச்சை கேட்டு உங்கள் காலைச் சுரண்டினால், முன்னெச்சரிக்கையாக பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டுப் பிச்சையிடுங்கள்!