Published:Updated:

சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

மெரிக்காவின் ‘லோவா’ மாகாணத்தில் ‘பெல்லா’ என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவள், மரியா ரோஸ் பெல்டிங். கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினைச் சார்ந்துதான் அவளது வாழ்க்கை அமைந்திருந்தது.
தேவாலயத்துக்குப் பல்வேறு அமைப்புகள் மூலம் உணவுப் பொருள்கள் நன்கொடையாக வரும். அதை தேவாலயத்தின் சரக்கு அறையில் பாதுகாக்க வேண்டும். தேவாலயம் சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

சிறுவயது முதலே ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மரியா ரோஸ், தேவாலயத்தின் சேவைப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டாள். பசித்திருப்பவர்கள் கையில் உணவைக் கொண்டுசேர்க்கும்போது, அவர்கள் முகத்தில் தோன்றும் புன்னகையிலும், கண்களில் ததும்பும் நன்றியிலும் மரியா ரோஸ் மகிழ்ந்திருந்தாள்.

2009-ம் ஆண்டு, மரியா ரோஸ் எட்டாவது கிரேடு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, தேவாலயத்துக்கு ஓர் அமைப்பிடமிருந்து மிகுதியான அளவில் (சுமார் 1000 பெட்டிகள்) மக்ரோனியும், சீஸ் கட்டிகளும் வந்துசேர்ந்தன. அவற்றைச் சரக்கு அறையில் சேமிக்க மரியா ரோஸ் உதவினாள்.

சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

சில மாதங்கள் கடந்தது. ஏராளமான மக்ரோனியும், சீஸ் கட்டிகளும் உபயோகிக்கும் தேதி முடிந்து கெட்டுப்போயிருந்தன. அவற்றைக் குப்பையில் கொட்டினார்கள். மரியா ரோஸ் வருத்தப்பட்டு அழுதாள். ‘உலகில் தினமும் யாரோ சிலர் ஒருவேளை உணவுக்கு வழியின்றி இறக்கிறார்கள். இங்கே தன் கண்முன் இவ்வளவு உணவு வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறதே. நிச்சயம் இது யாருக்காவது தேவைப்பட்டிருக்கும். அப்படித் தேவைப்படுபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என யோசித்தாள்.

மரியா ரோஸ், கல்லூரியில் இணைந்தார். அப்போது, அமெரிக்க அரசின் விவசாயத் துறை (United States Department of Agriculture) அறிவித்த தகவல், ‘அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 40% பேர், தினமும் போதுமான உணவின்றித் தவிக்கின்றனர். அதேசமயம், தேசம் முழுவதும் 40% உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது’ என்றது.

இந்தப் பிரச்னைக்கான தீர்வு ஒன்றை  உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் மரியா ரோஸ். இன்டெர்நெட் உதவியுடன் இதைச் சாத்தியப்படுத்தலாம் என்று நம்பினார். அமெரிக்காவில் இயங்கும் சமூக சேவை அமைப்புகளின் விவரங்களைத் தேடியெடுத்து, டேட்டாபேஸாக உருவாக்கினால், அதன்மூலம் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று யோசித்தார். ஆனால், அதற்கான புரோகிராம் கோடிங் எழுதும் அறிவு அவருக்கு இல்லை.

அப்போதுதான் கிராண்ட் நெல்சன் என்ற நபரைச் சந்தித்தார். சட்டம் படிக்கும் மாணவர் என்றாலும்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

புரோகிராமிங் அறிவுகொண்ட நபர். மரியா ரோஸுக்கு உதவ  ஒப்புக்கொண்டார். சில மாத கடும் உழைப்பில் MEANS என்ற அமைப்பு உருவானது. அதாவது,  Matching Excess And Need for Stability.

இது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆன்லைன் தளம். எங்கெல்லாம் மிகுதியான உணவு இருக்கிறது என்றும், யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதையும் பதிவுசெய்யலாம். இருவருக்கும் பாலமாக இருப்பது MEANS அமைப்பின் பணி.

எப்படி இது இயங்குகிறது?

சட்டபூர்வமாகப் பதிவுபெற்ற ஆதரவற்றோர் இல்லமோ, உதவும் அமைப்புகளோ, தங்கள் உணவுத் தேவையைச் சொல்லி MEANS தளத்தை நாடலாம். ‘நாங்கள் தருகிறோம்’ என்று உதவும் அமைப்புகள் அதற்கு முன்வரலாம்.

இன்னொரு பக்கம், உணவகங்கள், நிறுவனங்கள், பெரும் கடைகள், சமூகச் சேவை அமைப்புகள் அல்லது தனிநபர்கள் தங்களிடம் உள்ள உணவு பற்றி சொல்லலாம். தேவைப்படுபவர்கள் தங்கள் விவரங்களைச் சொல்லலாம். MEANS அமைப்பினர் வாகனத்துடன் சென்று, தருபவர்களிடம் பெற்று, தேவையிருப்பவர்களிடம் கொண்டுசேர்க்கிறார்கள்.

அமெரிக்காவின் 48 மாகாணங்களிலும் மரியா ரோஸ் உருவாக்கிய அமைப்பு இயங்குகிறது. சுமார் 3000 பேர் இந்த அமைப்பில் பதிவுசெய்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 1.8 பில்லியன் பவுண்ட் அளவுக்கு உணவு வழங்கியிருக்கிறது.

சூப்பர் ஹீரோஸ்! - மரியா ரோஸ் பெல்டிங்: பசி தீர்ப்பவள்

இந்த அமைப்பில் மரியா ரோஸுடன் பணியாற்றுபவர்கள் அனைவருமே கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே. தங்கள் வகுப்பு நேரம்போக பகுதி நேரமாக இந்தச் சேவையில் ஈடுபடுகிறார்கள். அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணங்களிலும் பசித்திருப்பவர்களுக்கு உணவைச் சுமந்துசெல்கிறார்கள்.

இந்த அமைப்பை வெற்றிகரமாக இயக்கிவரும் மரியா ரோஸும், இதற்கு வடிவம் கொடுத்த அமைப்பின் துணைத் தலைவரான கிராண்ட் நெல்சனும் இணையத்தைப் பயன்படுத்தி, எளிமையான முறையில் வலிமையான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.

 MEANS அமைப்பினால், அமெரிக்காவில் வீணாகும் உணவின் சதவிகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்திருக்கிறது. பசித்திருப்பவர்களின் தேவையையும் பூர்த்தி செய்யப்படுகிறது. ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் MEANS-ஐ நாடிடுவோம்’ என்று சொல்லும் அளவுக்கு இதன் சேவை பரவியிருக்கிறது.

இதுபோன்ற ஓர் இயக்கம், அமெரிக்காவின் தேவை மட்டுமல்ல. உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்தின் தேவையும்கூட!

- முகில்