Published:Updated:

போலியோ சொட்டு மருந்து முகாம்! - மார்ச் மாதம் தள்ளிப்போகக் காரணம் என்ன?

``1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணைகளாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த வருடமும் சொட்டுமருந்து நிறுத்தப்படவில்லை" என்கிறார், பொதுச் சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி.

போலியோ சொட்டு மருந்து முகாம்! - மார்ச் மாதம் தள்ளிப்போகக் காரணம் என்ன?
போலியோ சொட்டு மருந்து முகாம்! - மார்ச் மாதம் தள்ளிப்போகக் காரணம் என்ன?

போலியோ சொட்டு மருந்து முகாம்! - மார்ச் மாதம் தள்ளிப்போகக் காரணம் என்ன? நிதிப் பற்றாக்குறையா அல்லது குளிர்காலம் என்ற காரணத்தால்தான் இந்தியா முழுதும் சொட்டு மருந்து கொடுக்கும் தேதி மாற்றப்பட்டதா. இப்படி எண்ணற்ற கேள்விகள் மருத்துவத் துறையைச் சுற்றிக்கொண்டிருக்க, ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டுமுறை போடப்பட்ட போலியோ மருந்து, இந்த வருடம்முதல் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே போடப்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, மத்திய சுகாதாரத் துறை. இந்த வருடம் மார்ச் மாதம் 10-ம் தேதி இந்தியா முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட இருக்கிறது.

உலகச் சுகாதார நிறுவனம் போலியோவை ஒழிப்பதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களிடம் போலியோகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, போலியோ வராமல் தடுக்க முடியும் என்ற நம்பகத்தன்மையை அந்தந்த நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ரோட்டரிச் சங்கங்களும் போலியோ ஒழிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த நோய் மீண்டும் வராமல் இருக்கத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 தவணைகளாகப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஆனால் நிதிப் பற்றாக்குறையால்தான் இந்தியாவில் சொட்டு மருந்து கொடுக்கும் தேதி தள்ளிப்போவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ``சுகாதாரத் துறையில் நூறு கோடிக்கும் அதிகமாக வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது. இது, இந்தியாவின் மோசமான நிதிநிலை ஒதுக்கீட்டைப் பிரதிபலிப்பதாக உலகச் சுகாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் போடப்படும் போலியோ தடுப்பூசியின் விலையேற்றம், பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் மத்தியச் சுகாதாரத் துறை தத்தளித்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சியளிக்கின்றனர். இதனால் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் அபாயம் ஏற்படவுள்ளது. இதுபோலத்தான் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிலையும் வந்துள்ளது. மாநில அரசின் ஒரு பங்கு நிதியும் மத்திய அரசின் ஒரு பங்கு நிதியும் சேர்த்து (40-60 என்ற கணக்கில்) போலியோ மருந்து வாங்கப்படுகிறது. தன்னிறைவான மாநிலங்கள் நிதியைத் தொடர்ந்து கொடுத்தாலும், பல மாநிலங்கள் இதற்கான நிதியை உடனடியாகக் கொடுப்பதில்லை'' என்கின்றனர்.

``1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணைகளாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த வருடமும் சொட்டுமருந்து நிறுத்தப்படவில்லை" என்கிறார், பொதுச் சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி. மேலும் அவர், ``பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில்தான் இன்னும் இந்த நோய்த் தாக்குதல் இருக்கிறது. இந்தியாவில் முழுதும் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் வருடத்துக்கு இரண்டுமுறை கொடுக்கப்பட்டு வந்த போலியோ சொட்டுமருந்து ஒருமுறையாகக் கொடுக்கப்பட உள்ளது. இதனால் மீண்டும் இந்த நோய் வர வாய்ப்பே இல்லை.

இது எல்லா மாநில அரசுகளிடமும் மருத்துவத் துறை நிபுணர்களிடமும் கருத்துகேட்டபிறகே மாற்றப்பட்டது. வட மாநிலங்களில் கடும்குளிர் நிலவி வருவதால்தான் இந்த ஆண்டு தேதி தள்ளிப்போனது. இந்தியா முழுவதும் ஒரே நாளில்தான் இந்தச் சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும். அதனால்தான் தேதி மாற்றப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. சொட்டு மருந்து கையிருப்புகள் இருக்கிறது. கடந்த வருடம் தமிழகத்தில் எண்பது லட்சம் டோஸ் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.