Published:Updated:

சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள உதவி கோரும் மூளை வளர்ச்சி சவால் கொண்ட சித்தார்த்தன்!

``இது மாதிரி குறைபாடுகளை மீறியும் தன்னோட திறமையால முன்னேறி ஜெயிக்கிற பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்துவிடணும். இவங்களுக்குத் தேவையான ஊக்கத்தொகையைத் தானாக முன்வந்து அரசுகள் கொடுக்கணும். எப்படிப்பட்ட பிள்ளையாயிருந்தாலும், தங்கள் பிள்ளைன்னு பெத்தவங்களுக்கும் நினைச்சு வளர்க்கணும்."

சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள உதவி கோரும் மூளை வளர்ச்சி சவால் கொண்ட சித்தார்த்தன்!
சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள உதவி கோரும் மூளை வளர்ச்சி சவால் கொண்ட சித்தார்த்தன்!

``சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில எம்புள்ள, ஜெயிச்சி தங்கப்பதக்கம் வாங்குவான்” சித்தார்த்தன் மீதான நம்பிக்கை வார்த்தைகளை உணர்வுபெருக்குடன் பகிர்ந்துகொள்கின்றனர் அவரின் பெற்றோர்!

மதுரை, அனுப்பானடியில் வசிக்கும் திருமாறன் - கற்பகம் தம்பதிக்கு, இரண்டு பிள்ளைகள். மூத்தவர், பொறியியல் பட்டதாரிப் பெண். 18 வயதைத் தொட்டிருக்கும் இளையவன் சித்தார்த்தன். இவர், பிறந்து சில வருடங்களிலிருந்தே மூளைவளர்ச்சிக் குறைபாட்டினை எதிர்கொள்ளும் போராட்ட வாழ்க்கைச் சூழல். தொடக்க வகுப்புகளில், சக மாணவர்களை விட்டு ஒதுங்கியே இருந்திருக்கிறான். பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதன்பேரில், பள்ளியிலிருந்து சித்தார்த்தனை விலக்கிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மதுரை, சிக்கந்தர்சாவடி, `பெத்சான்' எனும் சிறப்புப் பள்ளியில் பயின்று வருகிறார்.

``வயித்துல இவன் இருக்கும்போது, கொடி சுத்தி, மூளைக்குப் போகிற ரத்தம் சரியாப் போகல. அதனால, மூளை வளர்ச்சியில்லாமப் போயிடுச்சு. நல்லாத்தான் இருப்பான். திடீர்னு வித்தியாசமா நடந்துக்குவான். எல்லாத்தையும் மறந்துடுவான். சின்ன வயசுலேருந்தே தினசரி வேலைகளைப் பழக்கிட்டதால, அதையெல்லாம் சரியாப் பண்ணிடுவான். எப்போ சிரிப்பான், எப்போ அழுவான், எப்போ கோபப்படுவான்னு தெரியாது” என்றவாறே வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் சித்தார்த்தானின் அம்மா கற்பகம். 

மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டுப் பேசுகிறார் அப்பா திருமாறன், ``தினமும் இவன் நியூரோ மாத்திரைகள் சாப்பிட்டே ஆகணும். மாத்திரை மருந்துக்குச் செலவுக்கான பணம் அதிகமாயிட்டே இருக்கு. அதைச் சமாளிக்கிறதுக்கே கஷ்டம்தான்" என்றவர் ஒரு நிமிடம் மௌனமாகித் தொடர்ந்தார். ``மொபைல், கம்ப்யூட்டர்லாம் நோண்டுவான். டிவியில நியூஸ் சேனல்ஸ் விரும்பிப் பார்ப்பான். ஞாபகம் வெச்சிக்கிறது, சிந்திக்கிறது மட்டும்தான் இவனால முழுசா முடியல. ஆனா, உடல் உழைப்பு வேலை எதைக் கொடுத்தாலும் செய்வான். ஒரே விஷயத்தைக் கொஞ்ச நேரத்துக்கு மேல செய்ய மாட்டான். இவனுக்கு ரொம்பப் பிடிச்சது விளையாட்டுகள்தான். பேஸ்பால், வாலிபால், த்ரோபால், சாஃப்ட்பால்னு பல விளையாட்டுகளில் ஆடி, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வாங்கியிருக்கான். எல்லாப் போட்டிகளையும்விட சைக்கிள் போட்டிதான் அவனுக்கு உயிர்!” என்று சொல்லிக்கொண்டிருக்க, `சைக்கிள்’ என்ற சொல் காதில் விழுந்த வேகத்தில், `பயிற்சிக்குப் போகவேண்டும், வாங்க’ என அடம்பிடித்த சித்தார்த்தனை, `காலையிலதான் பயிற்சிக்குப் போனோமே, நாளைக்குப் போலாம்’ என்று தந்தை சொன்னதும் அமைதியாகிறார்.

``சித்தார்த்தன் என்று பெயர் வைக்க பிரத்யேகமாக ஏதாவது காரணம் இருக்க?" என்றதும், ``நான் பள்ளிக்கூடம் வரைக்கும்தான் படிச்சேன். ஆனா, நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். அதுமூலமா புத்தரைப் பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன். அதனால புத்தரை ரொம்பப் பிடிக்கும். அவர் நினைவாகத்தான் இந்தப் பெயர் வெச்சேன்” என்று சின்ன சிரிப்போடு சொல்கிறார் திருமாறன். இதற்கிடையே சித்தார்த்தன் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களை எடுத்து வந்து காட்டுகிறார் தாய் கற்பகம். 

`` `பெத்சான்’ பள்ளியில இவனை நல்லாப் பார்த்துக்கிறாங்க. சின்ன வயசுலேருந்து, இவனுக்குள்ள இருக்கிற திறமை, ஆசை, ஆர்வம்னு எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சு, உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைக்கிறாங்க. சைக்கிள் போட்டிகள்ல மாவட்ட, மாநில அளவிலெல்லாம் கடந்து, தேசிய அளவுல பாரத் ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில தங்கப்பதக்கம் வாங்கியிருக்கான். இந்த வருஷம் மார்ச் மாசம் அபுதாபியில நடக்க இருக்கிற சர்வதேச ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில பங்கேற்கிற தகுதியும் பெற்றிருக்கான்” என்று கூறும் கற்பகத்தின் குரலில் பெருமை வழிகிறது. சான்றிதழ்களைப் புதுக்கோட்டை, மதுரை ஆட்சியாளர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்ற படங்களை, கற்பகம் காட்டிக்கொண்டிருக்கும்போது, சித்தார்த்தனும் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறார். சித்தார்த்தன் உச்சரிக்க எத்தனிக்கும் ஒவ்வொரு சொற்களுக்காகவும், அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் செவிமடுத்துக் காத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சாதாரணமாக சித்தார்த்தனுக்குக் கிடைக்கவில்லை. ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஆக்ரா, அரியானா, மத்தியப்பிரதேசம், ஒரிசா, ஒடிசா போன்ற பகுதிகளில் நடைபெற்ற பாரத் ஸ்பெஷல் ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்டு சைக்கிள் போட்டிகளில் வென்று அவரது திறையைக் காட்டியதே அபுதாபிக்குச் செல்லும் வாய்ப்பை அளித்திருக்கிறது. 

``இதுவரைக்கும் எப்படியோ சமாளிச்சிட்டோம். வெளிநாட்டுக்குப் போய் சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கணும்னா நிறைய விதிமுறைகள் இருக்கு. அதெல்லாம் சரியா பின்பற்றணும் இல்லையா! அந்தக் கவலை வேற இருக்கு. இன்னொரு பக்கம், போட்டிக்கு, லைட் வெயிட் கார்பன் சைக்கிள்தான் செட்டாகும்னு கோச் சொல்லியிருக்கார். போட்டிக்கான கருவிகள், ஸ்போர்ட்ஸ் டிரஸ்கள் உட்பட எளிமையா கணக்குப் போட்டாலே சில லட்சங்கள் செலவாகும். இவனோட மருத்துவச் செலவுகளுக்கே சொந்த பந்தங்கள்கிட்ட கடன்வாங்கிச் சமாளிச்சிக்கிட்டிருக்கோம். இந்த நிலைமையில அதெல்லாம் எப்படிச் சமாளிக்கிறதோ? என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தி மெளனமாகிறார் திருமாறன்.

சிறிதுநேரம் கழித்துப் பேசத் தொடங்குகிறார் திருமாறன், ``என்னோட சொத்துன்னு கேட்டா தாத்தா, அப்பா காலத்து வீடு இது ஒண்ணு  மட்டும்தான். மத்தபடி, ஜெராக்ஸ் கடை வச்சிப் பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன். பொண்ணு இப்பத்தான் படிப்பை முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கா. என்னோட எண்ணமெல்லாம், இவனை எப்படியாவது ஜெயிக்க வைக்கணும்ங்கிறது மட்டும்தான். அதுக்குப் போதுமான பண பலம் இல்லை. அரசியல், சாதி, மதம் சார்ந்து உதவி கேட்கலாமேன்னு நிறைய பேர் சொன்னாங்க. எங்களுக்கு அது வேணாம். எந்தப் பின்னணியும் இல்லாம, என் பிள்ளையோட திறமையையும் எங்க கனவுகளையும் புரிஞ்சிக்கிட்டு உதவி பண்றவங்களே எங்களுக்குப் போதும்ன்னு சொல்லிட்டோம்” என்று அவர் சொல்வதை, தாய் கற்பகமும் தலையாட்டி ஆமோதிக்கிறார், 

``இது மாதிரி குறைபாடுகளை மீறியும் தன்னோட திறமையால முன்னேறி ஜெயிக்கிற பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்துவிடணும். இவங்களுக்குத் தேவையான ஊக்கத்தொகையைத் தானாக முன்வந்து அரசுகள் கொடுக்கணும். எப்படிப்பட்ட பிள்ளையாயிருந்தாலும், தங்கள் பிள்ளைன்னு பெத்தவங்களுக்கும் நினைச்சு வளர்க்கணும்" என்று முடிக்கும் திருமாறனின் குரலில் நம்பிக்கை மிளிர்கிறது. சித்தார்த்தன் வெல்லும்போது அவரின் நம்பிக்கை மலை அளவு உயரும். அதற்கு மற்றவர்கள்தான் உதவவேண்டும். 

விடைபெற்றுக் கிளம்பியபோது, சித்தார்த்தனை `டாட்டா’ சொல்லச் சொன்னதும், சிரித்துக்கொண்டே `டாட்டா' என்கிறான். இந்த சைக்கிள் ஹீரோவின் சிரிப்பை, பதக்கம் வெல்லும்போதும் நாம் பார்க்க வேண்டும்.