தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...

தேர்வுக் கால ஸ்மார்ட் ஆலோசனைகள்

`ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து படித்தால்தான் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற முடியும்’ என்கிற எண்ணம் பெரும்பாலான பெற்றோரிடம் காணப்படுகிறது. ``அதில் உண்மை எதுவும் இல்லை'' என்கிறார் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசகர் நளினி சந்திரசேகரன். தேர்வு சார்ந்து அவர் தரும் பயனுள்ள ஆலோசனைகள் இங்கே... 

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...

* தேர்வுக் காலத்தில் குழந்தைகள் படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அப்படிச் செய்வதால், குழந்தைகள் தேர்வு சார்ந்த கடும் அழுத்தத்துக்கு ஆளாவார்களே தவிர, அவர்களால் நிறைய மதிப்பெண் பெற முடியாது. அதனால் குழந்தைகள் அவ்வப்போது இடைவெளிவிட்டுப் படிக்க அனுமதிக்க வேண்டும்.

* விளையாட்டு, ஓவியம் என எதிலும் ஆர்வம் காட்டாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் குழந்தைகளைவிட, ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தும் குழந்தைகளின் அகாடமிக் திறன், சிறப்பாக இருப்பதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் படிக்க அமர்ந்தால் குழந்தைகள் பாசிட்டிவ்வாக உணர்வார்கள். ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். உடல், மனரீதியாகக் கிடைக்கும் இந்த உற்சாகம் கொடுக்கும் தூண்டுதலால் அவர்கள், மிகச் சிறப்பாகத் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

* நமக்கு அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள் நிறைய இருந்தாலும் இடையிடையே ஒரு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு வேலையைத் தொடர்வோம் இல்லையா?அதுபோலத்தான் குழந்தைகளும். அதனால் படிப்புக்கு இடையிடையே விளையாடுவது, சற்று நேரம் ஓய்வெடுப்பது, இசையை ரசிப்பது என மனதை ரிலாக்ஸ் செய்யவைத்து குழந்தைகளைப் படிக்க அனுமதிக்கவேண்டியது அவசியம். 

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...

*அதிகபட்சம் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை குழந்தைகள் தொடர்ந்து படிக்கலாம். அதன் பிறகு 20 நிமிடங்களாவது பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்வுக் காலங்களில் ஆறு முதல் ஏழு மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியம்.

*சிறு தொந்தரவுகூட இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்து, அறைக்குள் அவர்களை அடைத்து கதவு, ஜன்னல்களை மூடிவைக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் மிகவும் அசௌகர்யமாக உணர்வார்கள். மொட்டைமாடி, தோட்டம் போன்ற இயற்கையோடு இணைந்த காற்றோட்டமான இடங்களில் அவர்களைப் படிக்க அனுமதிக்கலாம்.

*சில குழந்தைகள் இரவில் வெகு நேரம் படிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். சிலருக்கு அதிகாலையில் எழுந்து படித்தால்தான் மனதில் பதியும். அவரவருக்கு எது வசதியாக இருக்கிறதோ, அதன்படி படிக்க அனுமதிக்கலாம்.

*குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுங்கள். குறிப்பாக புரதம், நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தினசரி உணவில் பால் இடம்பெறுவதும் அவர்களது ஆரோக்கியத்துக்கு நல்லது. வெண்ணெய், சீஸ், நெய், எண்ணெய்ப் பதார்த்தங்கள் வேண்டாம். அவை செரிமானமடைய கூடுதல் நேரம் எடுக்கும் என்பதால், எளிதில் செரிமானமாகும் ஆவியில் வெந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். 

*குழந்தைகள் படிக்கும்போது, `உன் மேல் நாங்க ரொம்ப எதிர்பார்ப்பு வெச்சிருக்கோம். அந்த நம்பிக்கையை பொய்யாக்கிடாதே’ என்று பெற்றோர் அவர்களை பயமுறுத்தவோ, மிரட்டவோ  கூடாது. இதன் காரணமாகக் குழந்தைகள் பதற்றமாகவும் டென்ஷனாகவும் உணர்வார்கள். மதிப்பெண் குறைந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையும் குழப்பமுமே அவர்களது கவனத்தைச் சிதற வைத்துவிடும். அவர்களைக் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிவிடும்.

*தங்கள் பிள்ளையை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. `உன் ஃப்ரெண்ட் எப்படி விடாம படிக்கிறான் பாரு. நீயும் இருக்கியே’ என்று சொல்லாதீர்கள். இது போன்ற வார்த்தைகள் அவர்களை மிகவும் காயப்படுத்தவோ, எரிச்சலடையவோ செய்துவிடும்.

*`உன் மேல் நம்பிக்கை இருக்கிறது. உன்னால் நிச்சயம் சிறப்பாகத் தேர்வு எழுத முடியும். தேர்வு முடிவுகள் என்னாகும் என்றெல்லாம் கவலைப்படாதே. உன்னுடைய பெஸ்ட்டைக் கொடு, அதுபோதும்’ என்கிற ரீதியில் இலகுவாக உணரவைக்க வேண்டுமே தவிர, தேர்வை ஒரு போர்க்களம்போல நினைக்க வைத்துவிடக் கூடாது.

*கடைசியாக ஒன்று... தேர்வுக் காலங்களில் பிள்ளை படிக்காமல்போனால் என்ன செய்வது என்று பயந்து கேபிள் கனெக்‌ஷனை கட் செய்வது, `படி, படி' என்று அவர்களை இடைவிடாமல் கண்காணிப்பது போன்ற வேலைகளில் பெற்றோர் ஈடுபடக் கூடாது. பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகள் இதுபோன்ற விஷயங்களை மிகவும் மரியாதைக் குறைவாக உணர்வார்கள். அவர்களை இயல்பாகவும் நட்புணர்வுடனும் நடத்தினாலே போதும். தேர்வைச் சுமையாகப் பார்க்காமல் கல்வியின் ஓர் அங்கமாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்!

சு.கவிதா

படிப்புக்கு நடுவே ஒரு பிரேக்! - பெற்றோர் கவனத்துக்கு...