Published:Updated:

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் மாணவர்களுக்காக கார் வாங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்...!

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் மாணவர்களுக்காக கார் வாங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்...!
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் மாணவர்களுக்காக கார் வாங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்...!

`பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால் முன்னேற மாட்டார்கள்’ என முடிவே செய்துவிட்டது நம் சமூகம். தனியார் பள்ளி வாசலில் பெற்றோர்கள் பலர் தவமிருக்கும் காலமிது. `தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்தால், வாழ்க்கையில் `டாப்' ஆக வந்துவிடுவார்கள்’ என நம்புகிறார்கள் பலர். அதற்காக, கந்துவட்டிக்குக்கூட கடன் வாங்கி கஷ்டத்தில் கரையும் பெற்றோர்கள் ஏராளம்.

இந்நிலையில், `அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்குக் கொஞ்சமும் குறைச்சல் இல்லை’ என்று சவால்விடுகிறது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்ன சேங்கலில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் அன்புச்செல்வம், மாணவர்கள் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க, மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வரவும், வீடுகளில் கொண்டு விடவும் நாலரை லட்சம் ரூபாய் கடன் பெற்று, டவேரா காரை வாங்கிப் பயன்படுத்தி வருகிறார். ஆச்சர்யம் விலகாமல் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வத்திடமே பேசினோம்.

``சேங்கல் கிராமம் மிகவும் வறண்ட பூமி. இங்கு வசிக்கும் மக்களில் அநேகம் பேர் அன்றாடம் கூலி வேலைக்குப் போய், அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில்தான் தங்களின் குடும்பத்தை ஓட்டுகிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை, `நல்லா படிக்க வைப்பதாக’ நினைத்துக்கொண்டு, அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்த்தார்கள். தலைக்குமேல் கடன் வாங்கித்தான் இப்படிச் செய்தார்கள். எனக்குச் சொந்த ஊர் இதே மாவட்டத்தில் உள்ள புலியூர்தான். நான் இந்தப் பள்ளிக்கு கடந்த 2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். 

அப்போது, இந்தப் பள்ளியில் 78 மாணவர்கள் படித்தார்கள். ஆனால், 2014-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 58 ஆகக் குறைந்துவிட்டது. இதனால், எங்கள் பள்ளியில் பணிபுரிந்த மூன்று ஆசிரியர்களில் ஒருவரான உமாமங்கை என்பவரை, `கூடுதல் போஸ்டிங்' என்றபடி கல்வித்துறை அதிகாரிகள் பணிமாறுதலில் அனுப்ப முடிவுசெய்தார்கள். உடனே, நாங்கள் போய் இந்த ஊராட்சிக்குப்பட்ட 3 கிலோ மீட்டர்களில் இருக்கும் மேலத்தோட்டம், குட்டிக்காரன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில், `உங்க பிள்ளைகளை எங்க பள்ளியில சேருங்க’ என அறிவுறுத்தினோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. காரணம், மாணவர்களை எங்கள் பள்ளியில் சேரவிடாமல் பண்ணுவதற்காக சில தனியார் பள்ளிகள், இந்தக் கிராமங்களுக்குப் பஸ்களை அனுப்பி, அவர்கள் பள்ளியில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க வைக்கும்படிச் செய்தனர்.

இதனால், 2014 ஜூலை மாதம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, அரசுப் பள்ளியில் சேர வைப்பதற்காக வேகன்-ஆர் காரை வாங்கினேன். அதனால், அப்போதே ஐந்து மாணவர்கள் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். காலையில் மாணவர்களை அழைத்துவர மூன்று டிரிப், மாலையில் வீடுகளில் பிள்ளைகளைவிட மூன்று டிரிப்ன்னு நானே காரை ஓட்டிட்டுப் போனேன். ஆரம்பத்தில் ஐந்து பேரை காரில் அழைத்துவந்து, அழைத்துச் சென்றேன். இதனால், பெற்றோர்கள் ஆர்வமாகி தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது 120 பிள்ளைகளாக எண்ணிக்கை கூடி இருக்கிறது. இதற்காக, 2018 செப்டம்பர் மாதம் கடனுக்கு நாலரை லட்சம் வாங்கி, பெரிய காரான டவேரா காரை வாங்கினேன். இதில் இப்போது ஒரு நாளைக்கு 70 பிள்ளைங்களை அழைத்து வருகிறேன். இதற்கு டீசல் போட மாதம் ரூ. 14,000 வரை செலவாகும். அதையும் என் சொந்தப் பணத்தில்தான் செலவு செய்றேன். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை அழைக்கவும், வீடுகளில் விடவும் நானே காரை ஓட்டிக்கிட்டுப் போகிறேன். இதனால், நான் அதிகம் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே எடுக்க நேர்ந்தாலும், அன்றைக்கும் காலையில் மாணவர்களை அழைத்து வருவதும், வீடுகளில் விடுவதும் நான்தான். கல்வி கற்பித்தல் விஷயங்களிலும் பல முன்முயற்சிகளைச் செய்கிறோம். 

`அரசுப் பள்ளியில் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அதைவிட்டுட்டு, சக்திக்கு மீறி வட்டிக்குக் கடன் வாங்கி ஏன் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?’ என ஒவ்வொரு பெற்றோரையும் யோசிக்க வைக்கவே, இப்படிச் செய்தேன். உமாமங்கை என்ற ஆசிரியையை மாற்றும் சூழல் போய் இப்போது கூடுதலாக ஓர் ஆசிரியர் போடும் நிலைமை உருவாகியிருக்கிறது. என் முயற்சியைப் பார்த்துவிட்டு, முன்னாள் வி.ஏ.ஓ இளங்கோவன், பாண்டியன் இன்னும் பலரும் எங்கள் பள்ளிக்குப் பல்வேறு உதவிகளைச் செய்கிறார்கள். மேடைக்கு ஷெட், கலர் பிரின்டர், ஜெராக்ஸ் மெஷின், ஹோம் தியேட்டர், போடியம், பீரோக்கள், ஃபேன்கள், புரொஜெக்டர், எல்லா வகுப்புகளுக்கும் ஆடியோ வசதி, கூடுதலாக நியமித்த தற்காலிக ஆசிரியர்களுக்குச் சம்பளம் என ஏகப்பட்ட உதவிகளைச் செய்கிறார்கள். பொனடிக்ஸ் முறையிலும் வீடியோக்கள் மூலமாகவும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறோம். இதைத் தவிர, ஸ்பான்ஸர்ஸ் பிடித்து எல்லோருக்கும் தரமான சீருடைகள், அடையாள அட்டைகள், பெல்ட் வாங்கித் தந்திருக்கிறோம்.

தவிர, மாணவர்கள் அனைவருக்கும் சுற்றுச்சூழலை உணர்த்தும் விதமாக வாரத்தில் ஒருநாள், பச்சை கலர் டீசர்ட்களை அணிந்து வரச்சொல்றோம். பள்ளி வளாகம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம். ஆண்டுவிழாவின்போது, பள்ளிக்கு வரும் ஊர் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, ஊர் முழுக்க மரக்கன்றுகளை நட வைத்திருக்கிறோம்.

பிள்ளைகள் படிப்புக்காகத் தனியார் பள்ளிக் கட்டணமாக கடன் வாங்கிச் செலவு செய்யும் பெற்றோர்களைத் தடுத்து, அரசுப் பள்ளியில் அவர்களின் பிள்ளைகளைச் சேர்க்க வைப்பதே என்னுடைய தொடர் முயற்சியாக இருக்கும். அதற்காக, தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார் உறுதிமேலிட!

கோமதி என்ற மாணவி, ``நான் இப்போ அஞ்சாம் வகுப்பு படிக்கிறேன். என்னை முன்னாடி ஒரு தனியார் பள்ளியிலதான், எங்க அம்மா, அப்பா படிக்க வச்சாங்க. கடன் வாங்கிச் செலவு பண்ணினாங்க. சார் கார் வாங்கியதால், எங்க பெற்றோரும் இந்தப் பள்ளியில என்னைச் சேர்த்தாங்க. காலையில் பள்ளிக்கு அழைக்கவும் மாலையில் வீட்டில் விடவும் சாரே காரை ஓட்டிட்டு வர்றார். சைக்கிள்கூட இல்லாத வீட்டில் உள்ள நான், தினமும் கார்ல பள்ளிக்கு வர்றேன். நல்லா படிச்சு பெரிய ஆளா ஆகி, சொந்தமா கார் வாங்குவேன். அப்போ, எங்களை இப்போ காரில் ஏத்திக்கிட்டு வரும் சாரை, அப்போ நான் என் கார்ல ஏத்தி ஊர்வலம் அழைத்துப் போவேன்” என்றார் உணர்ச்சி மேலிட!