Published:Updated:

மறக்க முடியாத கஜா புயல்!

மறக்க முடியாத கஜா புயல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மறக்க முடியாத கஜா புயல்!

ச.அட்சயா

ன்புள்ள அகிராவுக்கு... அட்சயா எழுதியது. வாட்ஸ்அப், வீடியோ கால் என முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் என்கிட்ட இருந்து இப்படி ஒரு கடிதத்தை எதிர்பார்க்கலை இல்லையா? என்னமோ திடீர்னு கடிதம் எழுதணும்னு தோணுச்சு. அதுக்குக் காரணம் இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கஜா புயல் வந்துச்சே... அப்போ பாதிக்கப்பட்ட ஊர்களில் நம்ம ஊரும் ஒண்ணு. (திருவாரூர் மாவட்டத்தின் ஆலிவளம்).

மறக்க முடியாத கஜா புயல்!

கஜா புயலுக்கு சில மாதங்கள் முன்னாடி நீங்க சேலத்துக்கு மாறிப்போய்ட்டீங்க. புயல் அன்னைக்கி நாங்க எல்லாம் வீட்டுல நல்லா தூங்கிட்டிருந்தோம். நைட்டு 12 மணி இருக்கும்... காற்று வேகமா அடிக்க ஆரம்பிச்சது. நான் கட்டில் மேலே படுத்துட்டிருந்தேன். அம்மா எழுப்பி, ‘`தனியா தூங்க வேண்டாம். தம்பியோடு படுத்துக்க’'ன்னு சொன்னாங்க. சுமார் 2 மணிக்கு புயல் காற்று இன்னும் பயங்கரமா வீச ஆரம்பிச்சது. கூரையெல்லாம் பிச்சுக்கிட்டு, மழை தண்ணி வீட்டுக்குள்ளே கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மறக்க முடியாத கஜா புயல்!

எனக்கு எப்பவுமே மழைன்னா ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்குத் தெரியாம பலமுறை நனைஞ்சிருக்கேன். ஆனா, அந்த மழையைப் பார்த்து பயம் வந்துச்சு. நெல்லு மூட்டைகள் வெச்சிருந்த இடத்துல மட்டும் கீத்து பிச்சுக்காம லேசா இடம் இருந்தது. அந்த நெல்லு மூட்டைகளுக்கு நடுவுல அப்பா, அம்மா, தம்பி, நான் நாலு பேரும் குடையைப் பிடிச்சிக்கிட்டு நின்னுட்டே இருந்தோம்.

மறக்க முடியாத கஜா புயல்!

ரொம்ப நேரம் ஆச்சு... என் தம்பி நின்னுகிட்டே தூங்கித் தூங்கி விழ ஆரம்பிச்சான். அப்படியே ஒரு மூணு மணி வரை நின்னுட்டிருந்தோம். திடீர்னு வெளியில மரம் ஒண்ணு முறிஞ்சு விழற சத்தம் மடமடனு கேட்டுச்சு.

கொஞ்சம் கொஞ்சமா காற்று குறைய ஆரம்பிச்சது. ஐந்தரை மணிக்கு மேலே வெளியே வந்து பார்த்தா, நாம எங்கே இருக்கோம். இது நம்ம தெருதானான்னு சந்தேகம் வந்துருச்சு. பாதையே தெரியலை. வீட்டுல இருந்த துணியெல்லாம் நனைஞ்சுபோய் மாத்திக்கவே துணி இல்லை. மூங்கில் மரம் ஒண்ணு வீட்டுக்கு முன்னாடி மொத்தமா முறிஞ்சு கிடந்துச்சு. அப்பா அரிவாளால் வெட்டி பாதையை உருவாக்கினார்.

மறக்க முடியாத கஜா புயல்!

தனியா இருந்த சமைக்கும் கொட்டகை லேசா முன்பக்கம் சாய்ஞ்சு கிடந்துச்சு. அதுக்கு உள்ளே போய் ஓரமா உட்கார்ந்துட்டோம். அம்மா சாயா போட்டு கொடுத்தாங்க அந்தக் குளிருக்கு ரொம்ப இதமா இருந்துச்சு. அப்புறமா மறுபடியும் தெருவுக்கு வந்தோம். பாதையில கிடந்த மரங்களை அங்கிருந்தவங்க வெட்டி அப்புறப்படுத்திட்டு இருந்தாங்க. கூரை வீட்டில் இருந்தவங்களை மாடி வீட்டுக்காரங்க ‘‘எங்க வீட்டுக்கு வாங்க. சாப்பிட்டு தங்கிக்கங்க’'ன்னு உரிமையோட கூட்டிட்டு போனாங்க. அப்போதான் தெரிஞ்சது ஊர் மக்களின் ஒற்றுமையும் பெருந்தன்மையும்.

கொஞ்ச நாள் கழிச்சு, நிவாரணம் கொடுக்க நிறைய பேர் வந்தாங்க. வீட்டுக்குத் தேவையான பொருள்கள் கொடுத்தாங்க.

கஜா புயலால் எங்க குடும்பத்துக்கு நிறைய கஷ்டம், நஷ்டம்தான். ஆனா, சுற்றி இருக்கிறவங்க யார், அவங்க நல்ல மனசு எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதோடு, இயற்கை கோபப்பட்டால் என்ன ஆகும்னு புரிஞ்சது. முடிஞ்ச வரை இயற்கைக்குத் தொந்தரவு இல்லாமல் வாழணும்னு புரிஞ்சது.

உன் அப்பா அம்மாவோடு ஒரு முறை ஊருக்கு வந்துட்டுப் போ அகிரா!

அன்புடன்

உன் தோழி

ச.அட்சயா

மறக்க முடியாத கஜா புயல்!

*வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நவம்பர் 15, 2018-ல் தமிழகத்தின் டெல்டா பகுதியில் பெரும் சேதத்தை உண்டாக்கிய புயல், கஜா.