Published:Updated:

ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு

ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு

பிரீமியம் ஸ்டோரி

புதிய வகுப்பு, புதிய ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், சிலருக்குப் புதிய பள்ளி என்று அடுத்த இன்னிங்ஸ் தயாராகியாச்சு. இதில், எல்லா வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு, ‘மேன்/வுமன் ஆஃப் மேட்ச்’ ஆகறது எப்படி?  வழிகாட்டுகிறார், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய விருதுபெற்ற ஆசிரியை, ஸதி.

புது பள்ளியில் சேரப்போறீங்களா? அங்கே ஏற்கெனவே படிக்கிறவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கிட்டு, ‘ஹாய்’ சொல்லி நட்பை ஏற்படுத்திக்கங்க.

உங்கள் கருத்துக்கு எதிர் கருத்துள்ள மாணவராக இருந்தாலும், எதிரியாக நினைக்காமல் அன்புடன் பேசுங்க.

ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு

புதிய நண்பர்கள், அவர்களாக வந்து பேசட்டும் என்று காத்திருக்காமல், நீங்களே முதலில் கைகுலுக்கி அறிமுகம் செய்துகோங்க.

ஸ்கூல் வேனின் ஸ்டாப்பிங் ஏரியாவில் மாறுதல் இருந்தால், அந்தப் பகுதியைப் பற்றியும் வேன் டிரைவர் மற்றும் பாதுகாவலர் பற்றியும் முன்கூட்டியே தெரிஞ்சுக்கங்க. வேன் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே ஸ்டாப்பிங் பகுதியில் இருங்க.

நம் வகுப்பறை நம் வீடு மாதிரி. தூய்மையாகவும் அழகாகவும் வெச்சுக்க உங்களாலான விஷயங்களை முன்னெடுத்து செய்ங்க. சின்னச் சின்னதா அலங்கரிங்க.

புது கல்வியாண்டு தொடங்கும் முன்பே புத்தகங்கள் கொடுத்திருந்தால், தொடக்கப் பாடங்களைப் புரட்டி மேலோட்டமாகப் படிச்சுக்கங்க. புது சப்ஜெக்ட் பயமில்லாமல் வகுப்பில் பாடங்களைக் கவனிக்கலாம்.

புதிய நண்பர்களின் சில குணங்களும் செய்கைகளும் பிடிக்கலையா? உடனே, இந்த நட்பு சரிப்படாது என விலகிடாதீங்க. கொஞ்சம் பொறுமையா நட்பை தொடருங்க.

பழைய நண்பர்களுக்கு உங்கள் குணம் நன்றாகத் தெரிந்திருக்கும். உங்கள் குறும்பையோ, பேச்சையோ பெரிதுபடுத்த மாட்டாங்க. அதுமாதிரியே புது நண்பர்களையும் எதிர்பார்க்காதீங்க. அளவுக்கு மீறிய குறும்புப் பேச்சோ, விளையாட்டோ வேண்டாம்.

ஸ்கூலுக்கு ரெடியா? - வகுப்பு

கிளாஸ் லீடர், குரூப் லீடர், கோ-ஆர்டினேட்டர் போன்ற பொறுப்புகள் தேடிவந்தால், தயங்காமல் ஏற்று, சிறப்பாகச் செயல்பட தயார்படுத்திக்கங்க. பொறுப்புகளுக்குத் தலையேற்கையில் ஆளுமைத்திறன் வளரும்.

புதிய ஆசிரியர்களிடம் உங்களை அறிமுகம் செய்துகொண்டு, அவர்கள் சொல்ல விரும்பினால் அவர்களின் குடும்பம், பொழுதுபோக்கு பற்றியும் கேட்டு தெரிஞ்சுக்கங்க. இது, மாணவர்- ஆசிரியர் உறவைத் தாண்டியும் அன்பை உண்டாக்கும்.

ஆசிரியர்களைப் பார்த்தால், அன்புடன் புன்னகை செய்யுங்க. என்ன பிரச்னை, சந்தேகம் என்றாலும் தயக்கமின்றி கேளுங்க. ஆக்கபூர்வமான சந்தேகங்கள் கேட்கக் கேட்க, ஆசிரியர்களுக்கு உங்கள் மீது நன்மதிப்பு கூடும்.

‘தலைமைப் பொறுப்பில் இருக்கிறோம்’ என்று சக மாணவர்களை அதிகாரம் செய்யாமல், அவர்களுடன் நட்பாகப் பேசுங்க. அவங்க தவறுகளைப் பொறுமையாகச் சுட்டிக்காட்டுங்க.

சரியா ஹோம்வொர்க் பண்ணிடணும். நீங்கள் நன்றாகப் படிக்கிறவங்களா இருக்கலாம். அதுக்காக, வகுப்பு நடக்கும்போது கவனிப்பின்மையோ, குறும்போ கூடாது.

சக நண்பர்கள் போட்டிகளில் வெற்றிபெற்றால், சின்னச் சின்ன சாதனைகள் செய்தாலும் மனதாரப் பாராட்டுங்க.

அழகு என்பது தோற்றத்தில் இல்லை. ஆனால், தோற்றத்தில் ஒழுங்கு முக்கியம். சரியாக முடி வெட்டி, தூய்மையான சீருடையிலே இருங்க.

புது வகுப்புல, மகிழ்ச்சியா படிக்க வாழ்த்துகள்!

- கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு