Published:Updated:

`ராகுலை டிஸ்லெக்ஸிக் என்று கேலி செய்வதற்குமுன்...’ - மோடிக்கு ஒரு தந்தையின் கடிதம்!

`ராகுலை டிஸ்லெக்ஸிக் என்று கேலி செய்வதற்குமுன்...’ - மோடிக்கு ஒரு தந்தையின் கடிதம்!
`ராகுலை டிஸ்லெக்ஸிக் என்று கேலி செய்வதற்குமுன்...’ - மோடிக்கு ஒரு தந்தையின் கடிதம்!

டிஸ்லெக்ஸிக் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள்  குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று பிரதமர் மோடி நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், `நான் ஒரு டிஸ்லெக்ஸிக் குழந்தையின் பெற்றோர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என்கிறார் டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்  மேத்யூ சாமுவேல்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிஸ்லெக்ஸிக் குழந்தைகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் சாமுவேல். அதில், ``எங்களுடைய முதல் குழந்தை, டெல்லியில் புகழ்பெற்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அப்போது நான், இணைய ஊடகமான `கோப்ரா போஸ்டில்’ வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அவன் வயதிலுள்ள மற்ற குழந்தைகளைப்போலவே என் மகனும்,  `இயல்பான’ நிலையில்தான் இருந்தான். நாங்கள் அவனுக்காகக் கொடுத்த செழிப்பான கல்விமுறையை அனுபவித்துக்கொண்டிருந்தான். ஒருநாள், அவனுடைய நண்பனின் கைத்தடம் பதிந்த பழுத்த கன்னங்களோடு வீடு திரும்பினான். இதில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த தண்டிக்கத்தக்க குற்றம், வகுப்பு ஆசிரியரின் அறிவுறுத்தலால் நடைபெற்றிருப்பதுதான். ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு என் மகன் விரைவாகப் பதிலளிக்கவில்லை என்பதாலும், எண்கள் மற்றும் எழுத்துகளுக்கிடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் வகுப்பு ஆசிரியர் இதுபோன்று நடந்துகொண்டிருக்கிறார்.

நானும் என் மனைவியும் எங்கள் மகன் சொல்வதை உண்மை என்பதை உணர்ந்தோம். இந்தச் சம்பவத்தைப் பற்றி பள்ளியிலும் சி.பி.எஸ்.இ இயக்குநரிடமும் புகார் கொடுத்தோம். இதையடுத்து, இந்தப் பிரச்னை மிகப் பெரிய வாதங்களுக்குத் தள்ளப்பட்டது. வகுப்பு ஆசிரியர் மற்றும் அவரின் குடும்பம் மிகவும் கெஞ்சிய காரணத்தால், புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், அடுத்த ஆண்டு அந்தப் பள்ளியை மாற்றிவிட்டோம். 

‘Tare Zameen Par’ திரைப்படம் பார்க்கும் வரை, என் மகன் டிஸ்லெக்ஸிக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அன்றுதான், எங்கள் மகன் சிறப்பு குழந்தை என்பதைப் புரிந்துகொண்டோம்!  முதலில் அவனோடு நின்றோம். பிறகு அவன் போக்கிலேயே விட்டுவிட்டோம். இப்போது, நான் ஒரு டிஸ்லெக்ஸிக் குழந்தையின் தந்தை என்பதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொள்கிறேன். இது, மோடி நினைப்பதுபோல 'மகிழ்ச்சியற்றது' அல்ல. இது ஒரு குடும்பத் தலைவரால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விஷயம்.

'ராகுல்' டிஸ்லெக்ஸிக் என்று மோடியைச் சிந்திக்கவைத்தது எது? டெல்லியிலுள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியை விட்டு வெளியேறி, ஓராண்டு கழித்து மீண்டும் அங்கு சேர்ந்து, வெற்றிபெறாமல் போனதுதான் காரணமா? அந்தச் சமயத்தில் பிரதமராக இருந்த ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, தன் மகனுக்காக எந்தவித செல்வாக்கையும் பயன்படுத்தாமல், தகுதியற்ற சான்றிதழ்கள் எதுவும் வாங்காமல் நேர்மையாய் இருந்ததை எண்ணி ராகுல் பெருமைப்படத்தான் வேண்டும். இது தற்போதைய பிரதமரின் போலி பட்டத்தைவிட சிறந்தல்லவா. ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றதாக தற்பெருமைகொள்ளும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியைவிட இது மதிப்பற்றதா என்ன?
 ராகுல் காந்தி, அமெரிக்க ரோலின்ஸ் கல்லூரியிலிருந்து பி.ஏ பட்டமும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலிருந்து எம்.பிஃல் பட்டம் பெற்றவர். ராகுல் குறித்து தவறாகப் பேசுவதை மோடி நிறுத்த வேண்டும். ராகுலை டிஸ்லெக்ஸிக் என்று கேலி செய்வதற்குமுன், கடுமையான முதலைகளோடு நர்மதா ஆற்றை நீந்திக் கடப்பதுபோல் தற்பெருமைபேசிக்கொண்டிருக்கும் மோடி, தன்னுடைய கல்விக் கூற்றைப் பற்றி நினைக்க மறந்துவிடக் கூடாது.

 குழந்தைகள் உளவியலாளர்களிடம் ஆலோசனை கேட்பது தற்போதைய காலகட்டத்தில் வழக்கமான முறையாகிவிட்டது. இது, குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பதல்ல. இதுபோன்ற குழந்தைகளையும் அவர்களின் குடும்பத்தின் உறுப்பினராக நினைத்து, சமுதாயத்தில் இயல்பான மனிதர்களாக நடமாட உதவிசெய்பவர்களே இந்தப் பயிற்சியாளர்கள்.  இதில் சிரிப்பதற்கு எதுவுமில்லை. டெல்லியில் இதுபோன்ற இயக்கங்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.

டெல்லியில்  24  ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருகிறேன். ராகுல் குறித்து மக்கள் பேசுவதை தினமும் கேட்கிறேன்.  இந்திய அரசியல் தர வரிசையில் ராகுல் வளர்ந்துவருகிறார் என்று மக்கள் கூறுவதைப் பலமுறை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராகுல், ஏராளமான விஷயத்தில் அசாதாரண மனிதராக இருந்தாலும், சாதாரண நிலை அடைவதற்குப் பல போராட்டங்களைக் கடந்துள்ளார் என்கிறார், பஞ்சசீல் பயிற்சியாளர் ஒருவர்.


இப்படிப்பட்ட ராகுலைத்தான், டிஸ்லெக்ஸிக் என்று ஏளனம் செய்கிறாரா மோடி? டிஸ்லெக்ஸிக் என்பது மனநல பாதிப்புக்குள்ளானவர் என்பதல்ல. அப்படியே இருந்தாலும், இதில் கேலி செய்வதற்கு என்ன இருக்கிறது. ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கே இதுபோன்ற 'சிறப்பான' வாய்ப்பு அமையும். ஒரு சக்திவாய்ந்த தேசத் தலைவர், நாம் ஆசிர்வதிக்கப்பட்டதுக்காக கேலி செய்கிறாரா. அன்புள்ள மோடி, நாங்கள் மகிழ்ச்சியற்றவர்கள் அல்ல, நீங்கள் நினைப்பதற்கும் மேலாக நாங்கள் பெருமைவாய்ந்தவர்கள்'' என்று பெருமையுடன் பேசுகிறார் மேத்யூ சாமுவேல்.