Published:Updated:

`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்!'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்

`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்!'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்
`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்!'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்

`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்!'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்

கும்பகோணத்தில் இரண்டு வயது மகனை தவிக்கவிட்டு விட்டு அவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அசைவற்று சடலமாகக் கிடந்த அவர்களின் உடலைப் பார்த்து, `அம்மா எந்திரிம்மா, அப்பா எந்திரிப்பா. வா கடைக்குப் போகலாம்' என இரண்டு வயதுக் குழந்தை தன் பெற்றோருக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அழுத்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

கும்பகோணம் குட்டியான தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் மகன் பாலமுருகன். இவர் டிபன் கடை ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு இரண்டு வயதில் நரேஷ்மதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகன், அருணா இருவரும் காதலித்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இருதரப்பு குடும்பத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு பேருடைய உறவினர்களும் இவர்களை பார்க்க வருவது இல்லை. மேலும் எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இவர்களது வீடு நீண்ட நேரமாகப் பூட்டிக்கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே நரேஷ்மதன் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்துள்ளான். அருணா அவனின் அழுகையை நிறுத்த எதுவும் செய்யவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை அழுதுகொண்டிருக்கிறான். அழுகையை நிப்பாட்டாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஜன்னல் வழியே எட்டிபார்த்துள்ளனர். உள்ளே கட்டில் மேல் அருணாவும், ஜன்னல் ஓரத்தில் பாலமுருகனும் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை கேள்விப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன் திரண்டனர்.

பின்னர் காவல்துறையினர் வந்ததும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டியும், அருகில் அவரது மனைவி அருணா பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையிலும் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது அவர்களது மகன் நரேஷ்மதன், அம்மா எந்திரிம்மா. அப்பா என்ன பண்ணுறீங்க. வா கடைக்கு போவோம்' எனக் கேட்டு அழுதுகொண்டே இருந்திருக்கிறான். அசைவற்று சடலமாகக் கிடக்கும் அம்மாவின் கைகளை இழுத்து எந்திரிம்மா எந்திரிம்மா எனத் தன் பெற்றோர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
 

பின்னர் இதுகுறித்து விசாரித்த கும்பகோணம் கிழக்கு போலீஸார் இருவரின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இரண்டு வயதுக் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைக்காமல் அவனை தனியாக தவிக்க விட்டு விட்டு கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது. இல்லை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புள்ளதா அல்லது வேறு ஏதேனும் மர்மங்கள் உள்ளதா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் பேசினோம். ``இவர்கள் இந்த ஏரியாவிற்கு குடி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் ரொம்பப் பழகவில்லை. இரண்டு பேருமே அமைதியாகத்தான் இருப்பாங்க. மாலை நேரத்தில் அருணா தன் மகனை விளையாட விடுவாங்க அப்போது அவன் லேசா கீழே விழுந்தால் கூட என்ன ஆச்சு எனப் பதறுவாங்க. அடிக்கடி ஏ ராசா எனக் கொஞ்சுவாங்க. கணவன் மனைவிக்கு இடையே அப்பப்ப சண்டை வரும். ரெண்டு பேருமே அந்தப் பையன் மேலே உசுரையே வச்சுருந்தாங்க. எந்திரிம்மா அவன் அழுதது இன்னும் காதுகளில் கேட்டுக்கிட்டே இருக்கு. இதனால் எங்க பகுதியே சோகத்தில் மூழ்கியது. இனி அந்தப் பையனை யார் பார்த்துகுவாங்க அவன நினைச்சாதான் பெரும் கவலையா இருக்கு'' என்றனர்.
 

அடுத்த கட்டுரைக்கு