Published:Updated:

"ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள்!" - அசத்தும் அரசுப் பள்ளி

"ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள்!" - அசத்தும் அரசுப் பள்ளி
"ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள்!" - அசத்தும் அரசுப் பள்ளி

தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்கிற ஆசை பல பெற்றோர்களுக்கு இயல்பாக எழுகிற ஒன்றுதான். இதற்காகப் பல மணி நேரம் வரிசையில் நின்று தனியார் பள்ளிகளில் சேர்ப்பவர்களும் உண்டு. தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தற்போது பல அரசுப் பள்ளிகளும் ஆங்கிலத்தில் பேசும் திறனை மேம்படுத்தப் பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் முன்னோடியாகச் செயல்படுகிறது விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி. அங்குள்ள மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம்  மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலரைத் தொடர்புகொண்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்தப் பள்ளியில் ஸ்கைப் வகுப்புகளை ஒருங்கிணைக்கும் ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் பேசினோம்.

"ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள்!" - அசத்தும் அரசுப் பள்ளி

"மாணவர்களுக்கு ஆங்கிலம் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. வழக்கமான முறையில் கற்றுக் கொடுப்பதைவிட இணையம் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் பேசும் ஆங்கிலத்தைவிட வெளிநாட்டில் வசிப்பவர்களின் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் என்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு எங்களுடைய தேவையை முகநூல் மூலமாகக் கோரிக்கையாக வைத்தோம். பலரும் ஆர்வம் தெரிவித்து எங்களைத் தொடர்புகொண்டனர். அவர்களை ஒருங்கிணைத்து பள்ளியில் ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளைச் சாத்தியப்படுத்தினோம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 9.40 மணி முதல் 10.40 மணி வரை நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் விதம், ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை உள்வாங்கி பதில் அளிப்பது, அடிப்படையான இலக்கணம் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். எங்கள் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் விதமாக ஆங்கிலம் பேசுவது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது" என்கிறார்.