Published:Updated:

மெரினா கடற்கரையில் மாயமான சிறுமி தமன்னா மீட்பு

விகடன் விமர்சனக்குழு

சென்னை, மே.19,2011

மெரினா கடற்கரையில் மாயமான சிறுமி தமன்னா மீட்பு

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 11-ம் தேதி காணாமல் போன சிறுமி தமன்னா இன்று மீட்கப்பட்டார். ##~~##

சென்னை - ராயப்பேட்டையை சேர்ந்தவர் சையது நூர் முகமது. இவர், அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவருடைய மனைவி ஹசீனா. இவர்களுக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் தமன்னா, ரிகாத் உள்ளனர்.

கடந்த 11-ம் தேதி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஹசீனா மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு குழந்தைகள் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன. அப்போது சிறுமி தமன்னா கடற்கரை கூட்டத்தில் மாயமாகி விட்டார்.

ஹசீனாவும் அவரது உறவினர்களும் தமன்னாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. குழந்தை மாயமானது பற்றி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

இது குறித்து ஹசீனாவும், அவரது கணவர் சையது நூர் முகமதும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து காவல்துறை தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர்.

ஆனால், ஒரு வாரம் ஆகியும் குழந்தை பற்றி எந்த தகவலும் வராததால் தமன்னாவின் பெற்றோர் பெருந்துயரமுற்றனர்.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேசுகையில், பெரிய பணக்கார குழந்தைகள் காணாமல் போனால் மட்டும் 24 மணிநேரத்தில் கண்டு பிடித்துவிடுகின்றனர்.

ஆனால், என் குழந்தையை கண்டுபிடிக்க மெத்தன போக்கை காவல்துறையினர் கடைப்பிடிக்கிறார்கள். என் குழந்தை எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.

அதேவேளையில், சிறுமி தமன்னாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்த காவல்துறையினர், குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், காணும் பொங்கல் காலங்களில் மெரினா கடற்கரையில் காணாமல் போகின்ற 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுமி தமன்னா மாயமானது தொடர்பான செய்திகள், ஆங்கில செய்தி சேனல்களில் மட்டுமின்றி, ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில், சிறுமி தமன்னா இன்று மீட்கப்பட்டார். இதனால், சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே தனியாக நின்று கொண்டிருந்தார். அங்குதான் காவல்துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர்.

சிறுமியை கடத்தியவர்கள், மருத்துவமனை அருகே விட்டு சென்று இருக்கலாம் என்கிற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.