Published:Updated:

படிக்க வற்புறுத்தியதால் மாணவி தீக்குளிப்பு: விசாரணையில் தகவல்

விகடன் விமர்சனக்குழு
படிக்க வற்புறுத்தியதால் மாணவி தீக்குளிப்பு: விசாரணையில் தகவல்
படிக்க வற்புறுத்தியதால் மாணவி தீக்குளிப்பு: விசாரணையில் தகவல்
படிக்க வற்புறுத்தியதால் மாணவி தீக்குளிப்பு: விசாரணையில் தகவல்

காஞ்சிபுரம்: பெற்றோர்கள் படிக்க வற்புறுத்தியதாலேயே, காஞ்சிபுரம் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சியில் 6 ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தமது பள்ளியிலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.படிப்பில் நாட்டமில்லாத அப்பெண்ணை பெற்றோர் நன்கு படிக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, குறைந்த மதிப்பெண் பெற்றுவருவதை கண்டித்ததால் மனஉளைச்சல் அடைந்து, அச்சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் தாலுகா அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் சிநேகா பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியல் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி சிநேகா, கடந்த சில நாட்களாக வகுப்பில் சோர்வாக காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்றுகாலை பள்ளிக்கு வழக்கம்போல் வகுப்புக்கு வந்த சிநேகா முதல் வகுப்பு முடிந்து அடுத்த பாடவேளை துவங்கியதும் மெதுவாக எழுந்து சென்றிருக்கிறார்.

அப்போது கையில் அவர் சிறிய பாட்டில் ஒன்றை எடுத்துச்சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பதற்றத்துடன் அவருடைய தோழி கூடவே எழுந்து செல்ல, விடுவிடுவென சென்ற சிநேகா கழிப்பறைக் கதவை சாத்திக்கொண்ட சில நிமிடங்களில் அவளின் அலறல் சத்தம் கேட்டது.

அடுத்த நொடி எரிந்த நிலையில் அறையிலிருந்து வெளியே ஓடிவந்தாள். சக மாணவியின் தகவலின்பேரில் ஆசிரியர்களுக்கு தகவல் செல்ல உடனடியாக 108 வரவழைக்கப்பட்டது. உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிட்டதட்ட 40சதவீத பாதிப்படைந்த சிநேகாவுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

##~~##
வழக்கை விசாரித்துவரும் தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் இதுகுறித்து கேட்டபோது, "வேறு எந்த விவகாரங்களும் இல்லை. மாணவிக்கு இயல்பாக படிப்பில் நாட்டமில்லை. இதுதெரிந்தும் பெற்றோர் அவளை "படி.. படி..!" என்றும், மதிப்பெண் குறைந்தால் கண்டிப்பதுமாக இருந்துள்ளனர். இதனால் எரிச்சலான நிலையில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாள்.
மற்றபடி ஆசிரியர்களோ பெற்றோர்களோ இதற்கு எந்த விதத்திலும் காரணமில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முயல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் 309 பிரிவின் படி அவள் மீது வழக்கு பதிந்துள்ளோம். சிகிச்சைக்குப்பின் அவளது உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது" என்றார்.
இந்த சம்பவத்தால் நேற்று பள்ளியில் உடனடியாக விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் விசாரணைக்காக ஆசிரியர்கள் இரவு 7 மணிவரை காத்திருந்தனர். இது ஆசிரியர்களிடையே ஒரு வித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.கிருபாகரன்