Published:Updated:

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கி.வீரமணி கோரிக்கை!

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கி.வீரமணி கோரிக்கை!
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கி.வீரமணி கோரிக்கை!
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கி.வீரமணி கோரிக்கை!

சென்னை: பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நரேந்திரமோடி அரசு பதவியேற்ற இந்த 104 நாள்களில் ஏற்கெனவே அவர் வாக்களித்தபடி, விலைவாசியை உடனே குறைப்போம்; வேலையில்லாத் திண்டாட்டத்தை உடனடியாக போக்க அவசர காலத் திட்டங்கள், தொலைநோக்குத் திட்டங்களை வகுப்போம்; தமிழ்நாட்டு மீனவர்களின் துயரம், இலங்கை அரசால் நித்தம் நித்தம் ஏற்படும் இடர்கள், இவைகளைக் களைவோம் என்றெல்லாம் கூறிய தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் எந்தத் தீவிர முனைப்பும் காட்டப்படவில்லை.

மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை லட்சியமான இந்துத்துவா அஜெண்டாவை எவ்வளவு வேகமாக செயல்படுத்த தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டுமோ, அவ்வளவு முயற்சிகளையும் அயராமல் செய்கின்ற போக்குதான் நாட்டோருக்குப் ‘பளிச்’சென்று தெரிகிறது.

சமஸ்கிருத வாரம் மத்திய அரசு பாடத் திட்டப் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்றும், ‘ஆசிரியர் நாள்’ என்பதை ‘குரு உத்சவ்’ என்று மாற்றி அழைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறுகிறது; வரலாற்றுத் துறை, மற்றும் பாட திட்டங்களை வகுக்கும் பல்வேறு துறைகளின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே போட்டு நிரப்புவதில் முனைப்புக் காட்டப்படுகிறது. பிரதமர் உரையை எல்லா மாணவர்களும் கேட்க, பள்ளி நேரத்தையே மாற்றிட வேண்டும் என்றும் சுற்றறிக்கை, அறிவிப்புக்கள் மத்திய அரசிலிருந்து வந்தன. ஆனால் அவைகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், புயலில் அகப்பட்ட கப்பல் கரை சேர்ந்தால் போதும் என்பதுபோல், உடனே அந்த ஆணைகளைத் திரும்பப் பெற்றதோடு, அவைகளுக்கான நம்ப முடியாத சமாதானங்களைக் கூறினர்.

பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் நாட்டின் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் இந்தியையே பயிற்று மொழி, பரப்பு மொழியாகக் கொள்ளுதல் கட்டாயம் என்பதான ஒரு ஆணையை அனுப்பி, அதனை தமிழ்நாடும் பிற இந்தி பேசாத மாநிலங்களும் ஏகோபித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி எதிர்த்த காரணத்தால், இன்று பின் வாங்கியதோடு, தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என்று விளக்கம் யூஜிசி தலைவரால் கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் என்ற மாபெரும் பிறவிப் போர்த் தலைவர், வித்திட்ட இந்தி எதிர்ப்பு, விழிப்ணர்வு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, அகலமாக, ஆழமாக பரந்து விரிந்துள்ளது; பெரியார் எப்போதும் தத்துவங்களின் ஜீவ நதியாக ஓடிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணரத் தவறக் கூடாது. தமிழ்நாட்டில் இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட, மொழி மூலம் பண்பாட்டுப் படையெடுப்புக்கான முனை மழுங்கா எதிர்ப்பு என்ற சுவரெழுத்தைப் பார்த்து இனியாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மத்திய அரசு.

கல்வித் துறையில், 1976ல் நெருக்கடி காலத்தில் இரவோடு இரவாக கள்வர் நுழைந்து பொருளைக் கொள்ளையடித்துச் செல்வது போல, இந்திய அரசியல் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதன் தீய விளைவே, நமக்கு இப்படி பல்வேறு அறிவு, கல்வி வளர்ச்சித் தடைகள். தமிழ்நாடு முதலமைச்சர் இதில் மற்ற மாநில முதலமைச்சர்களையெல்லாம் அழைத்து ஒரு மாநாடாக தமிழ்நாட்டில் கூட்டி, மாநிலப் பட்டியலுக்கே மறுபடியும் கல்வியை திரும்பக் கொணர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திடுவது மிகவும் அவசரம் ஆகும்.

தமிழ்நாடு அரசு ஒரு கல்வி முறை, மத்திய அரசு மற்றொரு கல்வி முறை என்ற இரட்டை நிலைப்பாடு இருப்பதை மாற்றிட, மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கல்வி உரிமைகளையும் திரும்பப் பெற இம்மாநாடு பெரும் அளவில் உதவிடக் கூடும்'' எனக் கூறியுள்ளார்.