Published:Updated:

விழுப்புரத்தில் மருத்துவ உதவிக்காக போராடும் குழந்தைகள்!

Vikatan Correspondent
விழுப்புரத்தில் மருத்துவ உதவிக்காக போராடும் குழந்தைகள்!
விழுப்புரத்தில் மருத்துவ உதவிக்காக போராடும் குழந்தைகள்!

விழுப்புரம்: ஒரே குடும்பத்தில், பிறவிலேயே கைக் கால் விரல்கள் ஒட்டி பிறந்த மூன்று குழந்தைகள் மருத்துவ உதவிக்காக போராடி வருகின்றனர்.

விழுப்புரத்தில் மருத்துவ உதவிக்காக போராடும் குழந்தைகள்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு ஐந்து குழந்தைகள். அதில், தேவி (13), மகேந்திரன் (10) மற்றும் ஐயப்பன் (7) ஆகிய மூன்று பேரும் பிறக்கும்போதே கை மற்றும் கால் விரல்கள் ஒட்டி பிறந்துள்ளனர்.

இதனால், இந்த குழந்தைகள் தங்களது தேவைகளைகூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பிறரை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த குழந்தைகளின் கை, கால் விரல்களை சாதாரண நிலைக்கு கொண்டுவர மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு, போதிய பண வசதி இல்லாமல் கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் பரிதவித்து வருகிறார்.

விழுப்புரத்தில் மருத்துவ உதவிக்காக போராடும் குழந்தைகள்!

அரசு சார்பில் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பல முறை, பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாவே இல்லை. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என்று தற்போது உறுதியளித்துள்ளார்.

குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி தலைவர் உஷா சதாசிவம் கூறும்போது, ''மரபணு மாற்றத்தால் அரிதாக குழந்தைகள் கை மற்றும் கால்கள் ஒட்டி பிறக்கும். நமக்கு விரலுக்கு விரல் இடைவெளி இருக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு விரலுக்கு இடையே இடைவெளியே இல்லாமல் எல்லா விரல்களும் ஒட்டிக் கொண்டு தட்டையாக இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் இந்த குழந்தைகளும் மற்றவர்களை போல வாழ முடியும்" என்றார்.

ஆ.நந்தகுமார்

படங்கள்:
தே.சிலம்பரசன்