Published:Updated:

மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

விகடன் விமர்சனக்குழு
மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!
மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!
மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

சென்னை: சென்னையில் உள்ள சாந்தோம் தனியார் பள்ளியில், மில்க் ஷேக் குடித்த 50 பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 2000 மாணவ– மாணவிகள் பங்கேற்ற இந்த விழாவில் நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகள் நேருவின் பெருமைகளை விளக்கி மேடையில் பேசினார்கள். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘மில்க் க்ஷேக்’ வழங்கப்பட்டது.

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய ‘மாதிரி மில்க் ஷேக்’ டப்பாவைக்  கொடுத்துள்ளனர். மில்க் ஷேக் கிடைத்த மகிழ்ச்சியில் சிறு குழந்தைகள் உடனே குடிக்க ஆரம்பித்தனர். அதை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகளில் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளனர். மேலும் சிலருக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மில்க் ஷேக் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் என்று உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மற்ற குழந்தைகள் கையில் வைத்திருந்த பால் டப்பாக்களை பிடுங்கி எறிந்துள்ளனர். மாணவ–மாணவிகள் யாரும் மில்க் ஷேக்கை குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனே மருத்துவமனைக்குக்  கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.