Published:Updated:

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!
பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

விழுப்புரம்: சரியாக படிக்கவில்லை என கூறி பள்ளி மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடுவைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அத்துடன் அவரும், தலைமை ஆசிரியரும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை அருகே பாலி காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 26 மாணவிகள் உள்பட 51 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக வரதராஜனும், உதவி ஆசிரியையாக அதே ஊரைச் சேர்ந்த வைஜெயந்திமாலா என்பவரும் பணிபுரிந்து வந்தனர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இவர்களில் 13 மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, உதவி ஆசிரியை வைஜெயந்திமாலா, அவர்களை கண்டித்ததுடன், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களான அனிதா (10), புகழேந்தி (10), ராஜசேகரன் (9), சுப்புலட்சுமி (9), கவுசல்யா (9), பிரீத்தா (9), அரிகிருஷ்ணன் (9), சந்தோஷ்ராஜ் (9) ஆகிய 8 பேரை தனியாக நிற்க வைத்து கற்பூரம் ஏற்றி கால்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

இதனால் மாணவர்களின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளனர். உடனே ஆசிரியை வைஜெயந்திமாலா, அந்த மாணவர்களை சத்தம் போடக்கூடாது, இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்துள்ளார். அதனால் அந்த மாணவர்கள் வேதனையை மனதில் அடக்கிக் கொண்டு வகுப்பறையில் இருந்துள்ளனர். பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்ற அந்த மாணவர்களின் கால்களில் இருந்த காயங்களை பார்த்த அவர்களது பெற்றோர், அது பற்றி பதறி துடித்து விசாரித்து இருக்கின்றனர்

உடனே அந்த மாணவர்கள் பள்ளியில் நடந்தவற்றை அழுதபடியே தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து இருக்கின்றனர். இது, அக்கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி முன் திரண்டனர். அந்த நேரத்தில் பள்ளிக்கு வந்த உதவி ஆசிரியை வைஜெயந்திமாலாவிடம், மாணவர்களின் பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்த எடைக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ஆசிரியை சூடு வைத்ததில் காயமடைந்த 8 மாணவ-மாணவிகளையும் போலீசார் மீட்டு உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு மாணவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது!

மேலும், இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் கிடைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நடந்த சம்பவம் பற்றி மாணவர்களிடம் விசாரித்தார். அப்போது மாணவர்கள் அவரிடம் நன்றாக படிக்கவில்லை என கூறி ஆசிரியை கற்பூரத்தால் தங்களது உடலில் சூடு வைத்ததாக கூறி இருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாணவர்களுக்கு தீக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி உதவி ஆசிரியை வைஜெயந்திமாலா மற்றும் இச்சம்பவத்தை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லாத பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன் ஆகிய 2 பேரையும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அந்த பள்ளிக்கு மாற்று ஆசிரியர்கள் 2 பேர் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில், மாணவன் சந்தோஷ்ராஜின் பெரியப்பா அருளப்பன் எடைக்கல் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து போலீசார், சிறுவர்களை கொடுமைப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பள்ளி உதவி ஆசிரியை வைஜெயந்திமாலாவை கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு