Published:Updated:

‘‘தண்ணி குடிச்சா ஒண்ணுக்கு போகும்னு அதைக்கூட தர மாட்டாங்கக்கா!’’ - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி சூர்யபிரகாஷ் #BanChildLabour

‘‘தண்ணி குடிச்சா ஒண்ணுக்கு போகும்னு அதைக்கூட தர மாட்டாங்கக்கா!’’ - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி சூர்யபிரகாஷ் #BanChildLabour
‘‘தண்ணி குடிச்சா ஒண்ணுக்கு போகும்னு அதைக்கூட தர மாட்டாங்கக்கா!’’ - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி சூர்யபிரகாஷ் #BanChildLabour

‘‘தண்ணி குடிச்சா ஒண்ணுக்கு போகும்னு அதைக்கூட தர மாட்டாங்கக்கா!’’ - மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி சூர்யபிரகாஷ் #BanChildLabour

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க எத்தனை சட்டங்கள் வந்தாலும், எத்தனை தன்னார்வ அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடினாலும், குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டும் ஓநாய்கள் இன்னமும் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு ஓநாய் கூட்டத்திலிருந்து மீண்டுவந்திருக்கிறான் குழந்தைத் தொழிலாளி  சூர்யபிரகாஷ் என்கிற 16 வயது சிறுவன். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சூர்யபிரகாஷ், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனின் வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய பென்ச், அதிர்ந்துபோனது. மதுரை மாவட்டத்திலிருந்து எத்தனை சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளனர், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரையிலிருந்து குழந்தைத் தொழிலாளியாக சென்றது முதல், மீட்கப்பட்டது வரை தான் சந்தித்த துயரங்கள் பற்றி சூர்யபிரகாஷ் சொன்னபோது, மனம் முழுக்க ரணம் பரவியது. 

‘‘என்னோட சொந்த ஊர், மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் கூத்தியார்குண்டு. 2012-ம் வருஷம் நான் ஏழாங் கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். வீட்ல சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். அந்தச் சமயத்துல மதுரையில் இருக்கிற மலைச்சாமி என்கிறவர் அப்பா, அம்மாகிட்டே பேசினார். நாசிக்ல இருக்கிற ஸ்வீட், அப்பளம் செய்யற ஒரு இடத்துக்கு என்னை வேலைக்கு அனுப்பினாங்க. என்னை வேலைக்குச் சேர்க்கும்போது அப்பாகிட்ட ஆறாயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்தாங்க. மாசம் ஐந்தாயிரம் சம்பளம் தர்றதா சொல்லியிருந்தாங்க. எனக்கு நல்லாப் படிச்சு பெரிய ஆளாகணும்னு கனவுகள் இருந்துச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு அப்பா சொமையை இறக்கி வைக்கிறதுக்காக வேலைக்குப் போனேன். என்னோட என் சித்தி பையன் விஜயக்குமாரும் வந்திருந்தான். அங்கே என்னை மாதிரி நிறைய பேர் வேலை செஞ்சுட்டிருந்தாங்க. காலையில அஞ்சு மணிக்கே எழுப்பி விட்ருவாங்க. ராத்திரி பன்னிரண்டு வரைக்கும் உக்காராம வேலை செஞ்சுட்டே இருக்கணும்'' என்ற சூர்யபிரகாஷின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்முள் வலியை இறக்கியபடியே இறங்குகின்றன

‘‘வேல பாக்க போன அஞ்சு வருஷத்துல நான் சந்தோஷமா சிரிச்சுப் பேசினதே இல்லக்கா. தெனமும் காலையில எழுந்தா அப்பளம் தேய்க்கணும், ஸ்வீட்டுக்கு தேவையானதை எடுத்துத் தரணும், பம்பரமாக சுத்திட்டே இருக்கணும். பாத்ரூம் போகக்கூட விடமாட்டாங்க. அதனாலேயே தண்ணி குடிக்க மாட்டோம். தரவும் மாட்டாங்க. எந்நேரமும் அடுப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிறதால் உடம்புல சூடேறி உடம்பெல்லாம் எரியும். ஒருநாள் கொஞ்சம் அதிகமா தூங்ககூட விடமாட்டாங்கக்கா. வார லீவு எதுவும் கிடையாது. வேலையைச் சரியா செய்யலைன்னா கண்டபடி திட்டி, அடிப்பாங்க. அப்பா அம்மாவுக்காக ஒரு வருஷம் மனசையும், கண்ணீரையும் கட்டுப்படுத்திட்டு வேலைப் பார்த்துட்டிருந்தோம். அப்புறம் எங்களை வேற மொதலாளிக்கு வித்துட்டாங்க. அந்த இடம் இன்னும் நரகமா இருந்துச்சு’’ எனச் சொல்லும்போதே சூர்யபிரகாஷின் குரல் தழதழுக்கிறது. 

‘‘அப்பா, அம்மாகிட்ட எப்பவாச்சும் போனில் பேசுவோம். அப்படி பேசுனப்பதான், அப்பா அம்மாவுக்கு சொன்னபடி மாசம் அஞ்சாயிரம் எல்லாம் தர்றதில்லன்னு தெரிஞ்சது. கேட்டதுக்கு 'உங்க பசங்க சரியா வேலைச் செய்யறதில்லை'ன்னு அந்த மலைச்சாமி சொல்றார்னு தெரிஞ்சுக்கிட்டோம். எப்போதாவது ஆயிரம், ரெண்டாயிரம் மட்டும் கொடுப்பாராம். இப்படியே எங்க வாழ்க்கை போயிட்டிருந்த நேரத்துல என் சித்தி பையன் விஜயக்குமாருக்கு உடம்பு சரியில்லாம போயிருச்சு. அவனால் காலையில் எந்திருச்சி வேலைப் பார்க்க முடியலை. அதுக்காகப் பெரிய இரும்புக்கம்பியை வெச்சு அடிச்சாங்க. அவன் கால் வீங்கிப்போச்சு. என்னால ஒண்ணுமே செய்ய முடியலை. 2016-ம் வருஷம் அக்டோபர் மாசம் விஜயகுமார் அந்த இடத்திலிருந்து தப்பிச்சுட்டான். கொஞ்ச நாளில் நானும் அங்கே இருந்து தப்பிச்சுட்டேன்’’ என்ற சூர்யபிரகாஷ், அதன்பிறகும் சந்தித்த சிரமங்களை அடுக்கினான். 

‘‘ஊருக்குத் தப்பிச்சு வந்த விஜயகுமார் நடந்த விஷயங்களை என் அம்மா, அப்பாகிட்ட சொல்லியிருக்கான். அவங்க மலைச்சாமிகிட்ட போய் பேசியிருக்காங்க. அவர் சரியா பதில் சொல்லாததால், போலீஸ் புகார் கொடுத்திருக்காங்க. அதே நேரம் அந்த இடத்திலிருந்து தப்பிச்ச நான் பல இடங்களில் சுத்தித் திரிஞ்சேன். ஒரு ஓட்டல்ல வேலை செஞ்சுக்கிட்டு ஒளிஞ்சு வாழ்ந்துட்டிருந்தேன். அப்போதான் சிபிசிஐடி போலீஸ் என்னைக் கண்டுபிடிச்சு இங்கே கூட்டிட்டு வந்தாங்க. இப்ப ஒரு தனியார் நிறுவனத்துக்காரங்க என்னை படிக்க வைக்கிறதா சொல்லியிருக்காங்கக்கா. நான் மறுபடியும் ஸ்கூல்ல சேர்ந்து நல்லாப் படிக்கப்போறேன். என்னை மாதிரி நிறைய பசங்க அந்த இடத்துல இருக்காங்க. அவங்களையும் மீட்கணும். வீட்டுக்கு வந்தப்புறம் கூட என்னோட வேதனையையும், வலியையும் மறக்க முடியலக்கா’’ என்கிறபோதே குரல் உடைந்து அழ ஆரம்பித்தான்.

அவன் என்னுள் இறக்கிய வலியை ஜீரணிக்க முடியாமல் போனை வைத்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு