Published:Updated:

``நாங்க பட்ட நரக வேதனையை சுஜித் நினைவுபடுத்திட்டான்!’’ - கிருஷ்ணகிரி குணாவின் பெற்றோர் வேதனை

சிறுவன் குணா தன் அம்மா மற்றும் சகோதரியுடன்.
சிறுவன் குணா தன் அம்மா மற்றும் சகோதரியுடன்.

``குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணத்துல விழுந்தது நியூஸ்ல வந்த நிமிஷத்துல இருந்து, நாங்க ஒரு நிமிஷம்கூட டி.வி-யை ஆஃப் பண்ணவே இல்ல.''

சுஜித் நிச்சயம் மீண்டு வந்துவிடுவான் என்பதற்கு நமக்கெல்லாம் நம்பிக்கை தந்தவன், சிறுவன் குணா. 2012-ம் வருடம், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து, ஐந்து மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டவன்.

குணா
குணா

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள அகலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மந்தையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்-பத்மா தம்பதிக்கு பூஜா என்ற பெண் குழந்தையும் குணா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2012 அக்டோபர் மாதம், ஆனந்துக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில், 600 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதில் தண்ணீர் கிடைக்காததால், கிணற்றை மூடுகிற பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல், ஆழ்துளைக் கிணற்றை அலட்சியமாக அப்படியே விட்டுவிட்டனர்.

அடுத்த நாள் காலை, ஆனந்தன் தனது நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அவரின் மனைவி பத்மா, தனது இரண்டரை வயது மகன் குணாவை நிலத்தில் விளையாட விட்டுவிட்டு, துணி துவைத்துக்கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த குணா, எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். 20 அடி ஆழத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். குழந்தையின் அழுகைச் சத்தம் ஆழ்துளைக் கிணற்றுக்குள்ளிருந்து கேட்டதும், பத்மா கதறி கூக்குரல் எழுப்பினார். சம்பவ இடத்திற்கு போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

குணா
குணா
எங்க பிள்ளை குணா ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அன்னிக்கு நாங்க பட்ட வேதனையை வார்த்தையில சொல்ல முடியாதுங்க. அதே வேதனையை, ஏழு வருஷம் கழிச்சு இப்போ மறுபடியும் அனுபவிச்சோம்.''
குணாவின் அம்மா பத்மா

குழந்தை குணா விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகில், 20 அடி ஆழத்துக்கு இரண்டு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் இரண்டு குழிகள் வெட்டப்பட்டன. சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் துளையிட்டு, குணா இருந்த இடம் கண்டறியப்பட்டது. கயிறு மற்றும் கொக்கி உதவியுடன் குணா உயிருடன் மீட்கப்பட்டான். இந்த மீட்பு முயற்சிகள் அன்று காலை 10.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடந்தன. குணா உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து, அவன் பெற்றோர் பத்மா-ஆனந்தன் மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி மாவட்டமே அப்போது பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தது.

இன்றோ, குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதால், ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீரின் ஈரம் காயாமல் இருக்கிறது. இந்நிலையில், ஆனந்தன்-பத்மா தம்பதியிடம் பேசினோம்.

Guna with his Father
Guna with his Father

''குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணத்துல விழுந்தது நியூஸ்ல வந்த நிமிஷத்துல இருந்து, நாங்க ஒரு நிமிஷம்கூட டி.வி-யை ஆஃப் பண்ணவே இல்ல. சுஜித்தை இதோ இப்ப மீட்டுடுவாங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டுடுவாங்கன்னு நம்பிக்கையிலேயே ஏக்கத்தோட டி.வி முன்னாடி காத்துக்கிடந்தோம்.

எங்க பிள்ளை குணா ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அன்னிக்கு நாங்க பட்ட வேதனையை வார்த்தையில சொல்ல முடியாதுங்க. அதே வேதனையை, ஏழு வருஷம் கழிச்சு இப்போ மறுபடியும் அனுபவிச்சோம். பாவம், அந்தக் குடும்பம். அவங்க அப்பா, அம்மா என்ன பாடுபட்டிருப்பாங்க?'' - பேசிக்கொண்டிருக்கும்போதே குணாவின் அம்மா பத்மாவின் கண்களிலிருந்து கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிய ஆரம்பிக்கிறது. குணாவின் அப்பா ஆனந்தன் பேச ஆரம்பித்தார்.

மூடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணறு
மூடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணறு

''மூத்தவ பொண்ணு. குணா பொறந்ததும் ரெண்டு குழந்தைங்க போதும்னு குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கிட்டோம். குணா மட்டும் எங்களுக்கு கிடைக்கலைன்னா, எங்க நிலைமையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. இப்போ, சுஜித் அம்மாவையும் அப்பாவையும் பார்க்கப் பார்க்க, எங்களால தாங்கவே முடியல. குணா எங்களுக்கு மறுபடியும் கிடைச்சது, கடவுளோட கருணை.

இப்போ குணாவுக்கு 10 வயசாகுது. மூணாவது படிச்சிட்டிருக்கான். அந்தச் சம்பவத்துக்கப்புறம், ஸ்கூலுக்கு அனுப்புறதைத் தவிர, குணாவை எங்கேயுமே நாங்க தனியா அனுப்புறதில்லை. எங்களுக்கு குணா மறுபடியும் கிடைச்ச மாதிரி, சுஜித்தும் அவங்க அம்மா அப்பாவுக்குக் கிடைச்சிருக்கணும். மனசுக்குத் தாங்கவே முடியலைங்க...'' - அந்த தகப்பனின் வார்த்தைகள் முடியாமல் முடிகின்றன.

`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைக்கு