Published:Updated:

`பாய்ஸ் லாக்கர் ரூம்' வக்கிரமடையும் டீன் ஏஜ் குழந்தைகளின் மனநிலை! - பிரச்னைகளும் தீர்வுகளும்

பாய்ஸ் லாக்கர் ரூம்
பாய்ஸ் லாக்கர் ரூம்

நமக்கு ஏற்படும் பாலியல் தூண்டல் இயல்பான ஒரு விஷயமே. ஆனால், இதே மனநிலையோடு ஓர் ஆபாசமான வீடியோவையோ அல்லது புகைப்படத்தையோ பார்க்கும்போது, ஏற்கெனவே துளிர்விட்டிருக்கும் பாலியல் உணர்வு தீவிரமாகத் தூண்டப்படுகிறது.

'பாய்ஸ் லாக்கர் ரூம்'(BoysLockerRoom) - பெண்களின் பாலியல் உறுப்புகளைப் பற்றிப் பேசவும், தங்களுக்குள் செக்ஸ் சாட் செய்துகொள்ளவும் டெல்லியைச் சேர்ந்த டீன் ஏஜ் பாய்ஸ் சிலரால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பேஜ்! ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பாய்ஸ் இந்த குரூப்பை உருவாக்கி சாட் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

அவர்கள் அனைவரும் டெல்லியைச் சேந்த ஓர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 15 வயதுக்கு உட்பட்ட டீன் ஏஜ் மாணவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்! இவர்கள் சில பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தங்களது வகுப்பு மாணவிகள் பற்றியும் பாலியல் ரீதியான உரையாடல்களை நடத்தியுள்ளனர்.

'பாய்ஸ் லாக்கர் ரூம்' இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் நடத்திய உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்டுகள் எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. இந்த ஸ்கிரீன் ஷாட்டுகளில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் காணப்படும் மாணவர்களின் உரையாடல்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்குக் கொச்சையாக உள்ளன.

'பாய்ஸ் லாக்கர் ரூம்' சாட்
'பாய்ஸ் லாக்கர் ரூம்' சாட்

பெரியவர்கள்கூட பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களைப் பற்றி சர்வ சாதாரணமாகப் பேசியுள்ளனர். தங்கள் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவியை எப்படிக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று இவர்கள் திட்டமிட்டு உரையாடியிருப்பது வக்கிரத்தின் உச்சம்.

இதேபோல் கேர்ள்ஸ் லாக்கர் ரூம்(GirlsLockerRoom) என்றொரு பக்கத்தைத் தொடங்கி பெண்களும் ஆபாசமாகப் பேசியுள்ளதாகவும், அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகளும் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`இன்ஸ்டாகிராம் பேஜ்; பள்ளி மாணவர்களின் ஆபாச சாட்!’ - ட்விட்டரை அதிரவைத்த ஸ்கிரீன்ஷாட்

இணையம் அனைத்து வயதினருக்குமான பொழுதுபோக்கு என்றான பின் அதனைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற இணையதளப் பக்கங்களில் தகவல்கள் பரிமாறப்படுவதைவிட ஆபாச வீடியோக்களும், தவறான புகைப்படங்களுமே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இணையம்
இணையம்

குறிப்பாக இணையம் வந்த பிறகே சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை பலரும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதற்கு அடிமையாகியுள்ளனர். இந்த மனநிலை பல விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற ஒன்றை மாணவர்கள் உருவாக்கி செக்ஸ் சாட் செய்வதற்கான மனநிலைக்கு அடிப்படை காரணமும் அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

``சுயகட்டுப்பாட்டை இழக்கவைக்கும் போர்னோகிராபி" - அடிக்‌ஷனிலிருந்து மீண்டுவர உதவும் வழிகள்!

வக்கிரமடைந்து செல்லும் டீன் ஏஜ் குழந்தைகளின் மனநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டுதான் 'பாய்ஸ் லாக்கர் ரூம்'. வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற விஷயங்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. டீன் ஏஜ் குழந்தைகளின் மனநிலை வக்கிமாக மாறக் காரணம் என்ன... இந்த மனநிலையில் இருந்து அவர்களை எப்படி மீட்பது... குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் கண்ணனிடம் பேசினோம்.

உளவியல் ஆலோசகர் கண்ணன்.
உளவியல் ஆலோசகர் கண்ணன்.

"சமீபகாலமாக டீன் ஏஜ் குழந்தைகளின் மனநிலை பாலியல் தொடர்பான விஷயங்களை நோக்கி திசைதிரும்பி மோசமடைந்து செல்கிறது. இது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய விஷயம். நம் உடலில் டீன் ஏஜின் ஆரம்பத்தில் நிறைய ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும்.

``எங்கும் ஏளனங்கள்... நம்மைச் சுற்றியுள்ள குவாடன்களுக்குத் தீர்வு என்ன?" - ஒரு வழிகாட்டல்

இதன் காரணமாக உடல் மற்றும் மனதளவில் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் எதிர்பாலினத்தவர் மீதான ஈர்ப்பு. நம் உடலில் அதிக சக்திவாய்ந்த உணர்ச்சிகள் ததும்பும் ஓர் உறுப்பு மண்டலம், இனப்பெருக்க உறுப்பு மண்டலம்தான். நமக்கு ஏற்படும் பாலியல் தூண்டல் இயல்பான ஒரு விஷயமே. ஆனால் இதே மனநிலையோடு ஓர் ஆபாசமான வீடியோவையோ அல்லது புகைப்படத்தையோ பார்க்கும்போது ஏற்கெனவே துளிர்விட்டிருக்கும் பாலியல் உணர்வு தீவிரமாகத் தூண்டப்படுகிறது.

இணையம்
இணையம்

நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நம் சமூகத்தைப் பார்த்தோ அல்லது இணையம் போன்றவற்றைப் பார்த்தோ தெரிந்துகொள்ளும் ஆரம்பநிலை உளவியலில் சோஷியல் லேர்னிங் தியரி(Social learning theory) எனப்படும்.

அதாவது ஒரு விஷயத்தை முதன்முதலாகத் தெரிந்துகொள்ளும்போது இணையம் போன்றவற்றில் என்ன பார்க்கிறோமோ அதையே உண்மை என நம்புவோம். இந்த தியரி இணையத்தில் பார்க்கப்படும் போர்னோகிராபிக்கும் பொருந்தும். டீன் ஏஜ் குழந்தைகள் 'செக்ஸ்' பற்றி அறிந்துகொள்ள முயலும்போது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்களைத் தேடிச் செல்கின்றனர்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

இந்த ஆபாச வீடியோக்களில் நடிப்பவர்கள் எல்லாம், ஆபாசப்படக் காட்சிகளின் படப்பிடிப்பின்போது, ஹார்மோன் ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி, எப்போதும் போதையிலேயே இருப்பதால், சில நிமிடங்களில் முடிந்துபோகும் படுக்கையறைக் காட்சிகளைப் பல மணி நேரம் வரை நிகழும் ஒன்றாக எடுத்துச் சித்திரிக்கின்றனர்.

``தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான்!'' - அலெர்ட் அலசல்

மேலும், இயற்கைக்கு மாறாக ஒரு பெண் மிருகங்களுடன் உறவில் ஈடுபடும் காட்சி, வித்தியாசமான முறைகளில் உறவுகொள்வது, ஒரே நேரத்தில் அதிக நபர்களுடன் உறவு வைத்துக்கொள்வது, ஆண் மற்றோர் ஆணுடனும், பெண் மற்றொரு பெண்ணுடனும் உறவில் ஈடுபடும் காட்சி, வேகமான ஒலியுடன் கூடிய முனகல்கள், அதிக வலி போன்ற வக்கிரமான காட்சிகள் காட்டப்படுகின்றன. இவை படப்பிடிப்பு என்பதால் வேறு வேறு கோணங்களில் எடுத்து ஆபாசத்தை அதிகப்படுத்துகின்றனர்.

போர்னோகிராபி
போர்னோகிராபி

18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது எது உண்மை, எது பொய் என்பதைப் பகுத்தறிவது கஷ்டம். இந்நிலையில் உடலுறவு பற்றி எதுவுமே தெரியாத டீன் ஏஜ் குழந்தைகள் அவற்றைப் பார்க்கும்போது உண்மையில் ஆண்-பெண்ணுக்கு இடையேயான உடலுறவு இப்படித்தான் இருக்கும் என்று நம்புகின்றனர். இது அவர்களின் மனநிலையை விகாரப்படுத்துகிறது.

இது போன்ற போர்னோகிராபி வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும்போது அது விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று சுய இன்ப பழக்கம். ஆபாசமான காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவர்கள் உணர்வுகள் தூண்டப்பட்டு சுய இன்ப பழக்கத்திற்குள் செல்கின்றனர்.

மனஉளைச்சல்
மனஉளைச்சல்

உளவியலில் சுய இன்பம் ஒரு பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை. துணையில்லாத நேரங்களில் ஏற்படும் பாலியல் தூண்டலுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது சுய இன்பம். ஆனால் ஒருவர் சுய இன்பத்துக்கு அடிமையாகும்போது அது பிரச்னையாக உருவெடுக்கலாம்.

ஒருவர் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பார்க்கும்போது சிந்தனை முழுவதும் அதைச் சுற்றியே இருக்கும். அதனைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும், தான் பார்த்த காட்சிகளைச் செயல்படுத்திப் பார்க்கவும் தூண்டப்படுவார்கள். இதுதான் அந்த 'பாய்ஸ் லாக்கர் ரூம்' விஷயத்திலும் நடந்துள்ளது.

போர்னோகிராபி
போர்னோகிராபி

ஆபாசமான காட்சிகளைப் பார்க்கும் பெண்களைவிட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் பெண்களின் உளவியல் எதையும் உணர்வுகள் சார்ந்தே பார்ப்பது. ஆண்களின் உளவியல் உடல் சார்ந்து பார்ப்பது. 'பாய்ஸ் லாக்கர் ரூம்' டீன் ஏஜ் சிறுவர்கள் பாலியல் வல்லுறவு பற்றியெல்லாம் பேசியிருப்பது சிதைவடைந்து செல்லும் அவர்களின் மனநிலைக்கு எடுத்துக்காட்டு.

``பப்பி லவ் ஆபத்தானதா?’’- பெற்றோர்களின் கவனத்துக்கு

இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்....?

ஆபாச வீடியோக்கள் அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளைக் குழந்தைகள் பார்த்துக்கொண்டே இருக்கும்போது அவர்களின் இயல்பான மனநிலை மாற்றமடையும்.

அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. கவனச்சிதறல் அதிகரிக்கும். குடும்பத்தினருடனும் அதிகம் பேச மாட்டார்கள். எப்போதும் இணையத்திலேயே நேரம் செலவிடுவார்கள்.

மனஉளைச்சல்
மனஉளைச்சல்

போர்னோகிராபிக்கு அடிமையாகும் குழந்தைகள் மனஅழுத்தம், மனஉளைச்சல், தலைவலி, தூக்கமின்மை, குற்றஉணர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள்.

இந்தப் பிரச்னை அதிகமாகும் போது 'பாய்ஸ் லாக்கர் ரூம்' பிரச்னை போன்ற விளைவுகள் ஏற்படலாம். குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கலாம். இது அவர்களின் நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் பாதிக்கும் ஒன்றாக அமைந்துவிடும்.

``குழந்தைகளை எப்போதும் பிசியாக வைத்திருக்கத் தேவையில்லை, ஃப்ரீயா விடுங்க!" - பேரன்ட்டிங் கைடன்ஸ்!

இந்த மனநிலையிலிருந்து அவர்களை மீட்பது எப்படி?

கடந்த 10, 20 ஆண்டுகளுக்கு முன்பும் இளைஞர்கள் பாலியல் அந்தரங்கம் பற்றித் தெரிந்துகொள்ளாமல் எல்லாம் இல்லை. பெரும்பாலும் அப்போதிருந்த வசதி புத்தகங்கள் மட்டும்தான். அப்போதிருந்தவர்கள் செக்ஸ் புத்தகங்கள் படித்தார்கள். ஆனால் அது போர்னோகிராபி அளவுக்கு விளைவுகள் ஏற்படுத்தவில்லை. காரணம் எந்த ஒரு விஷயத்தையும் படிப்பதைவிடக் காணொலியாகக் காணும்போது அது எளிதில் மனதில் பதிந்துவிடுகிறது.

காணொலி
காணொலி

இப்போதுள்ள டீன் ஏஜ் குழந்தைகள் பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அவர்களின் கல்விமுறையே இப்போது போனில்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதால், அவர்களை போன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதைவிட அவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் போனில் பின்தொடர்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியாமல் பெற்றோர்கள் கண்காணிக்கலாம்.

எந்தவொரு குழந்தையும் தவறான பாதையில் வழிமாறிச் செல்ல காரணம் அவர்களின் சூழல்தான். அவர்களின் வாழ்க்கையை ஒரு நல்ல பாதையில் வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் டீன் ஏஜ் குழந்தைகளிடம் அதிகார தோரணையில் இல்லாமல் நட்பாகப் பழக வேண்டும். இது உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

பெற்றோர்
பெற்றோர்

டீன் ஏஜ் குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். மாதவிடாய் போன்ற காரணங்களால் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாக்கள் ஓரளவு இதனைப் பற்றிப் புரியவைக்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு அவர்களின் அப்பாக்கள் பாலியல் பற்றிய புரிந்துணர்வைக் கொடுப்பதில்லை. கூச்சம், தயக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

டிஜிட்டல் உலகிலிருந்து பிள்ளைகளை மீட்க நினைக்கும் பெற்றோருக்கு... மனநல மருத்துவரின் கைடன்ஸ்!

இதனால்தான் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் தங்கள் வயதொத்த நண்பர்களிடம் இது பற்றிப் பேசுகிறார்கள். இதனால் தங்கள் குழந்தைகளின் நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் பெற்றோர்களின் கடமை.

டீன் ஏஜ் குழந்தைகளின் கவனம் முழுவதும் அவர்களின் உடல் சார்ந்த விஷயங்களில் செல்லாமல் இருக்க படிப்பு, விளையாட்டு என்று அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

ஆலோசனை
ஆலோசனை

ஒருவேளை உங்கள் குழந்தைகள் ஏதேனும் தவறான பாதைகளில் செல்கிறார்கள் என்று அறிந்தால் அவர்களுக்கு நீங்களே ஏதேனும் தண்டனை தருவதைத் தவிர்க்கவும். அவர்களுக்குத் தேவை ஆலோசனையே. அவர்களை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டு அதற்கான தீர்வைத் தரலாம். நிலைமை மிகவும் மோசமாக இருப்பின் மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்" என்றார் குழந்தை உளவியல் ஆலோசகர் கண்ணன்.

நம் குழந்தைகள் இதுபோன்ற லாக்கர் ரூம்களில் தங்களை வைத்துப் பூட்டிக்கொள்ளாமல் இருக்க நாம் அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டிய நேரம் இது!

அடுத்த கட்டுரைக்கு