Published:Updated:

லெவல், பாயின்ட், கோல்டு காய்ன்ஸ்... உங்க குழந்தைகள் நல்ல விஷயம் செய்ய புது வழிகள் #ChildCare

குழந்தை
குழந்தை ( pixabay )

ஒரு குழந்தையைக் கொஞ்சறதும், அந்தக் குழந்தையின் மறுப்பு மற்றும் குறும்பை ரசிக்கிறதும், அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு வயசு வரைக்கும்தான்.

``இவ்வளவு வாய் பேசத் தெரியுது. ஒரு வீட்டு வேலை சொன்னா செய்யறதில்லே''

சினிமாதுறைக்கு `கிஸ்தி... திரை... வரி... வட்டி' மாதிரி, மேலே இருக்கிற டயலாக், அநேகமாக எல்லா வீடுகளிலும் காலம் காலமா சுத்திட்டிருக்கும். ஒரு குழந்தையைக் கொஞ்சறதும், அந்தக் குழந்தையின் மறுப்பு மற்றும் குறும்பை ரசிக்கிறதும், அதிகபட்சம் 5 அல்லது 6 வயசு வரைக்கும்தான். அந்தக் குழந்தை 7 அல்லது 8 வயசிலிருந்தே இந்த டயலாக்கை கேட்க ஆரம்பிச்சிரும். ஆரம்பத்துல முகத்தைத் தூக்கி வெச்சுக்கும்; மூக்கைச் சிந்தும். அப்புறம்? போகப் போக அதுவே பழகிடும் என்கிற மாதிரி, காலேஜ் போறப்போ தூசியா தட்டிட்டுப் போய்ட்டே இருப்பாங்க.

அப்புறம்?

குழந்தை
குழந்தை
pixabay

`முற்பகல் செயின் பிற்பகல் அடமானம்' கணக்காக, இவங்க பெத்தவங்களாகி பேச ஆரம்பிப்பாங்க. இவங்க குழந்தைகள் கேட்டுட்டு இருப்பாங்க. அதிலும் இப்போ இருக்கிற குழந்தைகள், பெத்தவங்க சின்ன வயசுல செஞ்ச சேட்டைகளுக்கு எல்லாம் மீட்டர் வட்டி போடற மாதிரி செய்துட்டிருக்காங்க. அப்படின்னா, தலைமுறைகள் தாண்டித் தொடரும் அந்த வீட்டு டயலாக்கை மாற்றவே முடியாதா? கொஞ்சமாச்சும் மாற்ற என்ன செய்யலாம்?

வேற வழியே இல்லை. இப்போ புழக்கத்தில் இருக்கிற டாஸ்க், லெவல், பாயின்ட், கோல்டு காய்ன்ஸ், கேம்ஸ் மாதிரியான அப்டேட் வார்த்தைகளை வெச்சுதான் அவங்களை டார்கெட் பண்ணி, ஆர்வத்துடன் அவங்களுக்கான வேலைகளைப் பழக்கப்படுத்தணும்.

முதலாவதாக, காலையில் குளிக்கப் போறதில் ஆரம்பிச்சு ஸ்கூலுக்குக் கிளம்பற வரைக்குமான அவங்களின் தேவைகளை அவங்களே முடிச்சுக்கிற மாதிரி செஞ்சுட்டாலே போதும், நாம அப்பா, அம்மா ஆனதுக்கான தகுதியை அடைஞ்சுட்டதா காலரை தூக்கிவிட்டுக்கலாம்.

அதுக்கு என்ன செய்யலாம்?

அந்த விஷயத்துக்கு `மை மார்னிங்', `ஆபரேஷன் மார்னிங்' மாதிரி அட்ராக்டிவான ஒரு பெயர் வெச்சுக்கங்க.

``குளிக்கப் போறப்போ நீயே டவலை எடுத்துட்டுப் போகணும். நீயே டிரஸ் பண்ணிக்கணும். ஷூ, டை எல்லாத்தையும் நீயே தேடி எடுத்துப் போட்டுக்கணும். இப்படி நீயே எல்லாத்தையும் முழுசா செஞ்சுட்டா அன்றைக்கு உனக்கு 50 பாயின்ட் (கோல்டு காய்ன்ஸ்). அதுக்கு மாறாக, `அம்மா டவல் வேணும்', `அப்பா ஷூ எங்கே?'னு நீ கேட்கிற ஒவ்வொண்ணுக்கும் ஏற்கெனவே எடுத்திருக்கிற பாயின்ட்களில் பத்து பத்தாக குறையும்'' என்று சொல்லுங்க.

kids
kids
pixabay

வாரத்தில் ஒரு நாள் எத்தனை பாயின்ட் அல்லது கோல்டு காய்ன் இருக்கோ அதுக்கு ஏற்ற மாதிரி ஐஸ்க்ரீமில் ஆரம்பிச்சு ஏதாவது பரிசு எனச் சொல்லிப் பாருங்க. முன்கூட்டியே இத்தனை பாயின்ட் இருந்தா இந்தப் பரிசு, ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் இவ்வளவு மதிப்பு எனவும் சொல்லிவைங்க.

அடுத்து, உங்களை எதிர்பார்க்காமல் அவங்களுக்குச் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கான தேவைகளை அவங்களே சரி செஞ்சுக்கறது. ஷூக்கு பாலீஷ் போட்டுக்கறது, யூனிஃபார்மை மடிச்சு வெச்சுக்கிறது. லன்ச் கட்டறதுக்கு லன்ச் பாக்ஸை கொண்டுவந்து வைக்கறது இப்படியான விஷயங்கள்.

இதுக்கெல்லாம் லெவல் பிக்ஸ் பண்ணுங்க. `உன்னோட தேவைகளைச் செய்துக்கறதில் நாலாவது லெவலுக்குப் போய்ட்டே, அஞ்சாது லெவலுக்குப் போய்ட்டே' எனச் சொல்லுங்க. இதுல ஏதாவது ஒண்ணு செய்யலைன்னா, `மறுபடியும் லெவல் இறங்கிட்டே, இல்லே அதே லெவலில் இருக்கே' எனச் சொல்லுங்க. தன்னுடைய லெவலை தக்கவெச்சுக்க கொஞ்சமாச்சும் அக்கறையா இதெல்லாம் செய்வாங்க.

இதுக்கு அடுத்தகட்டமாக, வீட்டு வேலையில் ஹெல்ப் பண்றது. உதாரணமா, தன்னோட லன்ச் பாக்ஸை தானே கழுவி வைக்கிறது. துவைத்த தன்னுடைய யூனிஃபார்மை மடிச்சு வைக்கிறது, கிச்சனிலோ, சுத்தம் செய்யறதிலோ சின்னச் சின்ன உதவி செய்யறது...

kids
kids
pixabay

முக்கியமான விஷயம்... இந்த விளையாட்டுகளில் நீங்களும் சேர்ந்துக்கங்க. நீங்க டவலை எடுத்துக்காம பாத்ரூமுக்குள் போய்ட்டாலும் பாயின்ட் குறையும். அதைக் கொண்டுவந்து கொடுக்கிற உங்க பிள்ளைக்கு பாயின்ட் ஏறும். இப்படிச் செய்யும்போது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.

உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச விளையாட்டுகள், டெக்னிக்குகள் வழியிலேயே போய் அவங்களின் அடிப்படைத் தேவைகளை, வீட்டுக்கான உதவிகளைச் செய்ய வெச்சுட்டாலே போதும். அந்த ஆதிகாலத்து டயலாக்கை மாத்திடலாம்.

``இப்படிகூட அவங்ககிட்ட வேலை வாங்க முடியாதுங்க. இதையெல்லாம் கடந்து எங்க பிள்ளைங்க இருக்காங்க''னு சொல்றீங்களா?

ஸாரி, அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. தப்பு அவங்க பக்கம் இல்லை. நெட் பேங்கிங், ஃபுட் ஆர்டர், கேப் புக்கிங், கூகுள் ரூட் மேப் என எப்படி அப்டேட் ஆகியிருக்கீங்களோ, அப்படி உங்க பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவரும் விஷயத்திலும், அவங்க ஆர்வத்தைக் கவனிச்சு அதுக்கு ஏற்ப நீங்கதான் அப்டேட் ஆகணும்!

அன்றைய டைனோசர்களே இன்றைய பறவைகள்! வியூப்பூட்டும் ஆய்வு முடிவுகள்
அடுத்த கட்டுரைக்கு