Published:Updated:

குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக்க விரிவான வழிகாட்டுதல்! #ParentingTips

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தைகளை இதைச் செய் அதைச் செய் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விருப்பப்பட்டதைச் செய்ய அனுமதி கொடுப்பது அவசியம்.

கொரோனா ஊரடங்கு, பள்ளி விடுமுறை, தேர்வுகள் தள்ளிவைப்பு எனக் குழந்தைகள் குஷியாகி வீடுகளை அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள். பெற்றோர் தெறித்து ஓடுகிறார்கள். ”ஒர்க் ஃப்ரம் ஹோம் ஒரு புறம், வீட்டு வேலைகள் ஒரு புறம்... இதற்கு நடுவில் குழந்தைகளைச் சமாளிக்கவே முடியல. மணிக்கணக்கில் யூடியூப் பார்த்து, எதையாவது வித்தியாசமாக கத்துக்கொடுத்தால் அடுத்த10 நிமிடத்தில் முடித்துவிட்டேன் என்று வந்து நிற்கிறார்கள். ..” எனப் புலம்பும் பெற்றோருக்குத்தான், இது. குழந்தைகளை எப்படி என்கேஜ்டாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான கைடன்ஸ்.

கலைப்பொருள்களில் கவனம் செலுத்தலாம்! 

உங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்க விரும்பும் பெற்றோர், கிராஃப்ட் வேலைகளில் குழந்தைகளின் கவனத்தைச் செலுத்த வைக்கலாம். குழந்தைகளின் வயதைப் பொறுத்து அவர்களுக்கான கிராஃப்ட் வகைகளை அறிமுகப்படுத்த வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனில் நிறங்கள் அறிமுகம் செய்தல், கலர் பேப்பர் ஒட்டுதல், வெட்டுதல், காய்கறிளைப் பயன்படுத்தி அச்சு வைப்பது போன்றவற்றை செய்யச் சொல்லலாம். ஐந்து முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனில் பேப்பர்கள், களிமண்களில் உருவங்கள் செய்தல் போன்றவற்றைப் பழக்கப்படுத்தலாம். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளில் எனில் பெயின்டிங் அறிமுகம் செய்யலாம். 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில் அவர்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்ப விட்டுவிடலாம்.

கிராஃப்ட் செய்வது என்றவுடன், யூடியூப் ஆன்செய்து கொடுத்து அதை அப்படியே பார்த்துச் செய் என்று சொல்லாமல், நீங்கள் வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொண்டு அதன் பின் குழந்தைகள் அதைச் செய்ய அருகிலிருந்து வழிகாட்டுங்கள். குழந்தைகளை, ’இதைச் செய்’... ’அதைச் செய்’ என்று கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விருப்பப்பட்டதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். கிராஃப்ட் செய்யும் போது பொருள்கள் வீணாகினாலோஅல்லது குழந்தைகள் செய்தது அர்கள் எதிர்பார்த்த படி வரவில்லை என்றாலோ திட்டக்கூடாது. என்ன தவறு செய்திருகிறார்கள் என்பதைப் பார்த்து அதைச் சரி செய்ய உதவுங்கள். கிராஃப்ட் பொருள்கள் செய்யும்போது குழந்தைகளின் கைத் தசைகள் வலுவாகும். அவர்களின் கையெழுத்து மெருகேறும். சிந்தனை மேம்படும். பள்ளி திறந்த பின் அவர்களின் புராஜெக்ட்களை அவர்களே செய்யவும் இந்தப் பழக்கம் ஆரம்பமாக இருக்கும்.

பாரம்பர்ய விளையாட்டில் இருக்கிறது பலம்!

எப்போதும் கேட்ஜெட்களில் பப்ஜியிலும், ரேஸ்களிலும் ஆழ்ந்திருக்கும் குழந்தைகளுக்கு இந்த விடுமுறை தினத்தில் நம்முடைய சில பாரம்பர்ய விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம். பல்லாங்குழி, தாய விளையாட்டுகள் மூலம் கணக்கிடுதல், எண்களை வேகமாக எண்ணும் திறன் போன்றவற்றை வளர்க்க முடியும். பச்சைக் குதிரை, நொண்டி போன்ற விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் உடல் தசைகள் வலுப்பெறும். கண்ணாமூச்சி, விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஐம்புலன்களும் தூண்டப்பட்டு சுறுசுறுப்புத் திறன் அதிகரிக்கும். பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய இதுவே உகந்த நேரம். ஒபிசிட்டி பிரச்னைகளைத் தடுப்பதுடன் குழந்தைகளின் சிந்திக்கும் திறனையும் வலுப்படுத்தும். குழந்தைகளை அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து விளையாட அனுமதிப்பது தற்போது ஆபத்தானது என்பதால் பெற்றோர், சகோதரர்களுடன் மட்டும் விளையாட அனுமதியுங்கள்.

இயற்கையைக் கற்றுக் கொடுப்போம்

இந்தத் தலைமுறை குழந்தைகள் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறார்கள். இயற்கை மாறுபாடுகள், பருவநிலை மாற்றங்கள் பற்றியெல்லாம் கற்றுக்கொடுங்கள். நம்முடைய எந்தச் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலை நம்மால் பாதுகாக்க முடியும் என்பது போன்ற விஷயங்களையும் பயிற்றுவிக்கலாம்.

பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்
பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்

உதாரணமாக, வீட்டில் ஒரு தோட்டம் அமைக்கலாம். செடிகள் வளர்க்க தொட்டிகள்தான் வேண்டும் என்று எண்ணாமல் குழந்தைகளின் பழைய வாட்டர் பாட்டில்கள் , விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றில் கூட வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்றவற்றை விதைக்கலாம். அதற்கு தேவையான உரங்களை வீட்டின் கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பையைத் தனியே பிரித்துப் போடுவதையும் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். மேலும் தற்போது உலகின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் தொடர்பான செய்திகளை வீடியோக்கள் மூலமாகவோ, படங்கள் மூலமாகவோ புரியவைக்கலாம். மிகவும் சிறிய குழந்தைகள் எனில் தினமும் இரவு நேரம் உங்கள் வீட்டு பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து சூரியன், நிலா, மரங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

கதையில் கிரியேட்டிவிட்டி!

வெப்சீரிஸ், த்ரீ டி கதைகள் எனக் குழந்தைகள் அப்டேட்டாக இருந்தாலும், குழந்தைகளுக்குக் கதை கேட்கும் பழக்கத்தையும், கதை சொல்லும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது அவசியம். வாய்வழியாக வெறும் கதைகளை இந்தத் தலைமுறைக் குழந்தைகள் விரும்புவதில்லை. எனவே நடித்துக்காட்டுதல், பொம்மலாட்டம் மூலம் கதை சொல்லுதல், படக்கதைகள் என வித்தியாசமான யுத்திகளைப் பின்பற்றுவது அவசியம்.

குழந்தைகளை என்கேஜாக வைக்க பொம்மலாட்டக் கதை. #LockDown #Puppetry #ParentingTips வீடியோ - சு.சூர்யா கோமதி

Posted by Aval Vikatan on Friday, April 3, 2020

குழந்தைகள் கதைகள் கேட்பதிலும், சொல்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் எனில் பாதிக்கதையைச் சொல்லிய பின் மீதிக் கதையை அவர்களையே சொல்லச் சொல்லலாம். ஏதேனும் ஒரு கதையின் சுருக்கத்தைக் கூறி அதற்கு தேவையான பொம்மலாட்டங்களை அவர்களையே தயார் செய்யச் சொல்லி கதைகள் சொல்ல வைக்கலாம்.

புத்தகங்கள் அறிமுகம் செய்யலாமே

வீட்டுப்பாடங்கள், புராகெஜ்ட்கள் என எப்போதும் பள்ளி சார்ந்த செயல்பாடுகளிலேயே இருக்கும் குழந்தைகள், கிடைக்கும் நேரத்தையும் டிவியிலோ, கம்ப்யூட்டர்களிலோ தான் செலவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லாமல் போகிறது. இந்த விடுமுறை தினத்தில் குழந்தைகளை தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களை வாசிக்க வையுங்கள். குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டுமெனில் பெற்றோர்கள் வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம். மூன்று வயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது கேட்ஜெட்களை காட்டி ஊட்டாமல், புத்தகங்களைக் கொடுத்து அதில் இருக்கும் படங்களை விளக்கும் விதமாக சின்னச் சின்ன கதைகளைக் கூறுங்கள். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில் குழந்தைகளிடம் புத்தகங்களைக் கொடுத்து சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். குழந்தைகள் வாசிக்கத் திணறும்போது அவர்களுக்கு உதவி செய்யலாம்.

எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடுகின்றன!

உங்கள் குழந்தைகள் கார்ட்டூன் பிரியர்களாக இருந்தால், புத்தக அலமாரியில் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டரின் புகைப்படங்களை வரைந்து வைத்து விடுங்கள். அந்தப் புகைப்படத்தின் அருகில் குழந்தைகள் அன்றைய தினம் படிக்க வேண்டிய புத்தகத்தின் பெயரையோ, பக்க எண்ணையோ எழுதி வைத்து, ’டோரா இன்று என்ன படிக்கச் சொல்கிறாள்’, ’புஜ்ஜி இன்னைக்கு என்ன ரெஃபர் பண்ணாரு’னு குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை வளருங்கள். குழந்தைகளுக்குப் பலதுறைப் புத்தகங்களைக் கொடுத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யச் சொல்வதும் அவசியம்.

நேரத்தைப் பிரியுங்கள் 

விடுமுறை தினம் என்றாலும் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்வது போன்றே எழுப்பி அன்றாடச் செயல்பாடுகளை முடிக்கப் பழக்குங்கள். அதன்பின் அவர்களுக்கு விருப்பமான செயல்பாட்டுகளை லிஸ்ட் எடுத்து ஒவ்வொன்றும் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் கொடுங்கள். தினமும் மாலை வீட்டின் அருகிலேயே லேசான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய பழக்கப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளின் விடுமுறையைக் குழந்தைகளோடு குழந்தையாக மாறிக் கொண்டாடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு