Published:Updated:

பெண்மகள் வந்தாள்!

பெண்மகள் வந்தாள்!
பிரீமியம் ஸ்டோரி
பெண்மகள் வந்தாள்!

#Motivation

பெண்மகள் வந்தாள்!

#Motivation

Published:Updated:
பெண்மகள் வந்தாள்!
பிரீமியம் ஸ்டோரி
பெண்மகள் வந்தாள்!

காயத்ரி சித்தார்த்

ப்பாக்களுக்கு பெண் குழந்தைகள் எப்போதுமே தேவதைகள். ஒரே நேரத்தில் மகள்களாகவும் அம்மாக்களாகவும் இருப்பவர்கள். துன்பம் நேர்கையில், புன்னகை யாழெடுத்து மீட்டி இன்பம் சேர்ப் பவர்கள். வண்ணங்களாலும் வாசனைகளாலும் வீட்டை நிறைப்பவர்கள்.

இவர்களுக்காகத்தான் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதியை `உலகப் பெண் குழந்தைகள் தின'மாகக் கொண்டாடும்படி ஐ.நா சபை அறிவித்திருக்கிறது. இந்தியாவிலும் 2008-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி மாதம் 24-ம் தேதியை `தேசியப் பெண் குழந்தைகள் தின'மாக அரசு கொண்டாடி வருகிறது. ஏன் ஜனவரி 24?

ஏனெனில், அன்றுதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார். அவர் ஆட்சி குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதிலும், அவர் ஓர் இரும்புப் பெண்மணி என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லாதவாறு வாழ்ந்தார். அதனால், அன்றைய தினம் தேசியப் பெண் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டிருக் கிறது. ஆனால், ஏற்கெனவே குழந்தைகள் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம் என்று பெண்களுக்கான பிரத்யேக தினங்கள் இருக்கும் போது பெண் குழந்தைகளுக்கென ஒரு நாளைத் தனியாகக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? பசித்த வனுக்கு உணவும், நோயுற்றவனுக்கு மருந்தும் எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவத்தை பெண் குழந்தைகளுக்கும் அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் நம் சமுதாயம் இருப்பதை நினைவூட்டுவதற்காகவே இந்த நாள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெண்மகள் வந்தாள்!

பெண் சிசுக் கொலையைத் தடுப்பதும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதும், குழந்தைத் திருமணங்களைத் தடை செய்து இளம் கர்ப்பிணிகள் / கைம்பெண்கள் உருவாவதைத் தடுப்பதும், அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதும், பாலின சம நிலையை நிலைநாட்டுவதும் தேசியப் பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கங்கள் என்று 2008-ம் ஆண்டில் அரசு அறிவித்திருக்கிறது.

எனினும், கடந்த மார்ச் 2020-ல் யுனிசெஃப் (UNICEF) நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கை, உலக அளவில் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் 23 குழந்தைத் திருமணங்கள் நடை பெறுவதாகவும் உலக அளவில் நடப்பவற்றில் மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில் நடப்பதாகவும் அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறது. வடக்கே ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்றளவும் எந்தத் தடைச்சட்டங்களுக்கும் அஞ்சாமல், 15 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களை, வயதில் மிக மூத்த ஆண்களுக்கு மணம்முடித்து வைக்கும் குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணத்துக்கான முக்கிய காரணிகளாக கல்வியறிவின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவையே சுட்டப்படு கின்றன. அனைத்துக் குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரையிலான கல்வி, அரசால் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதும், பொருளா தார நிலையில் பின்தங்கிய, கல்வியறிவற்ற குடும்பங்களிலேயே இவை அதிகம் நிகழ் கின்றன என்கிறார்கள். பாலின சமத்துவ மின்மையோ கருவிலிருந்தே தொடங்குகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் தன்னால் இயன்ற முயற்சிகளை எடுத்திருக்கின்றன. கருவிலிருப்பது பெண் எனத் தெரிந்ததும் கருக்கலைப்பு செய்துகொள்வதைத் தடுக்க 1971-லேயே மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2009-ல் பெண் குழந்தைகளுக்கு 8-ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகளை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம், பெண் குழந்தைகளைக் கடத்துவோருக்கு ஜாமீனில் வெளி வராதபடி கடுமையான தண்டனை, 18 வயதுக்குக் கீழுள்ள பெண் குழந்தைகளை சிறார் வதை செய்தால் அதிகபட்சமாக மரண தண்டனை என்று அரசுகள் ஒருபக்கம் கடுமையான சட்டத் திட்டங்களையும், மறுபக்கம் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான ‘சுகன்ய சம்ரிதி’, ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்’, இடைநிலை வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கான தேசிய ஊக்கத் தொகைத் திட்டம் என நலத்திட்டங்களையும் வகுத்த படியேதான் இருக்கின்றன.

தமிழகத்திலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. பெண் சிசுக் கொலையைத் தடுப்பதற்கென இந்தியாவிலேயே முதன்முறையாக தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கியதோடு, ஏராளமான நலத்திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அரசின் தூண்டுதல்கள் இல்லாமலேயே அனைவரின் கைகளும் இணைந்து எழ வேண்டியது அவசியம்.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவென ஒரு நாள் கடைப்பிடிக்கப்படுவது பெருமைக்குரியதல்ல, இது சமூக அவலம் என்பது ஒவ்வொருவர் மனதிலும் உறைக்க வேண்டும். இந்த நாளில் எடுக்க வேண்டிய உறுதி மொழியென இந்திய அரசு சில வாசகங்களைக் கொடுத்துள்ளது. அவற்றோடு, “நான், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்வியறிவுடனும் உடல் வலிமையுடனும் மனவலிமையுடனும் வளர என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்” என்ற உறுதி மொழியையும் நாம் ஒவ்வொரு வரும் இந்த நாளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவை மூன்றையும் கொடுத்துவிட்டால் போதும், எஞ்சியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism