Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவின் மையக் கிழக்கு நாடுகளில் அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எகிப்து.

பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

பாலைவன நாடு!

லகின் பத்தாவது பெரிய நாடாகவும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும் இருப்பது அல்ஜீரியா. கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் அரேபியர்கள் இங்கே குடியேறியுள்ளனர். அல்-ஜஸாரி என்ற அரேபியச் சொல்லிலிருந்து இந்தப் பெயர் வந்தது. 1830ஆம் ஆண்டிலிருந்து காலனி ஆதிக்கத்திலிருந்து, 1962ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. கி.பி 1170 – 1250 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இத்தாலியக் கணிதவியலாளரான, ஃபிபொனாச்சி (Fibonacci), இளமைப் பருவத்தில் இங்குதான் தங்கியுள்ளார். இந்து-அராபிய எண் முறையையும் இங்குதான் கற்றுள்ளார். உலகின் புகழ்பெற்ற சகாரா பாலைவனத்தின் வடகிழக்கு எல்லை அல்ஜீரியாவில்தான் அமைந்துள்ளது. நடுப் பாலைவனப் பகுதி என்பதால், ஆண்டு முழுவதும் வெப்பம் மிகுந்திருக்கும். இரவிலோ கடுமையான குளிர் இருக்கும்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

நாகரிக நைல்!

ப்பிரிக்காவின் மையக் கிழக்கு நாடுகளில் அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எகிப்து. இந்தப் பெயரைச் சொன்னதுமே பிரமிடுகள் நினைவுக்கு வரும். அதேநேரம், குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, நைல் நதி. பண்டைய எகிப்திய நாகரிகத்தில் முக்கியப் பங்குவகித்தது நைல் நதியே. 6,650 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் உலகின் மிக நீளமான ஆறு. கி.மு 3400ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தில், வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவானது. அப்போது, பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறினர். அப்போதுதான் உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாய சமூகம் உருவாக ஆரம்பித்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்போதும் எகிப்தின் மொத்த பரப்பளவில் நைல் நதிக்கரையையொட்டிய 40,000 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதியில்தான் அதிக மக்கள் வாழ்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

பல்லாங்குழியும் பரமபதமும்!

ப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு, கானா (Ghana). ஆங்கிலம், அகன், எவே போன்ற மொழிகள் பேசப்பட்டாலும், நாட்டின் அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து (United Kingdom) 1957ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த இந்த நாடே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம்பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு. இந்த நாட்டில் தங்கம் அதிகமாகக் கிடைப்பதால், ‘கோல்டு கோஸ்ட் ஆஃப் ஆப்பிரிக்கா’ என்பார்கள். இந்த நாட்டின் தலைநகரமான அக்ரா (Accra) என்பது, நிக்ரன் என்னும் சொல்லிலிருந்து உருவானது. இது, கானா முழுவதும் பரவலாகக் காணப்படும் கறுப்பு நிற எறும்பு வகையைக் குறிக்கும். நாம் விளையாடும் பல்லாங்குழி வகையிலான விளையாட்டும் அங்கும் பிரபலம். மங்கெலா (Mancala ) எனப்படும் அந்த விளையாட்டை சிறியவர், பெரியவர் எல்லோரும் விளையாடுவார்கள். குழிகளின் எண்ணிக்கையும் பல வகைகளில் இருக்கும். பரமபதம் விளையாட்டையும் விரும்பி ஆடுவார்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

இயற்கையின் அதிசயங்கள்!

ப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா, இயற்கையின் அதிசயங்கள் நிறைந்த நாடு. சிங்கம், காண்டாமிருகம், ஆப்பிரிக்க யானை, சிறுத்தை, ஆப்பிரிக்க எருமைகள் போன்றவற்றை அங்குள்ள காடுகளில் ஒரே இடத்தில் பார்க்கமுடியும். வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, அரிய மான் வகைகளும் வாழ்கின்றன. ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான வனவிலங்குகள் இடம்பெயர்வதைப் பார்க்கலாம். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், சுமார் 1,300,000 காட்டு மான்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்வதைப் பார்ப்பதற்காகவே காட்டுயிர் புகைப்படக்காரர்கள் படையெடுப்பார்கள். இந்த நாட்டில் சுமார் 70 வகையான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். எவ்வளவு இயற்கை வளம் உள்ளதோ, அந்த அளவுக்கு அவற்றைச் சுரண்டும் கூட்டமும் உண்டு. இப்படியான கூட்டத்துக்கு எதிராகப் போராட தன் வாழ்நாளை அர்ப்பணித்த வங்காரி மாத்தாய் பிறந்த தேசம். அமைதிக்கான நோபல் பரிசு, கோல்டுமேன் சுற்றுசூழல் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

அதிசய விலங்குகள்!

டகாஸ்கர் என்று சொன்னதுமே, பல பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அனிமேஷன் திரைப்படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு இது. உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு நாடு. இந்தத் தீவில் காணப்படும் விலங்குகள், மரங்கள் போன்றவற்றில் சுமார் 80 சதவிகிதத்தை உலகின் வேறு எங்கும் காணமுடியாது. கொரில்லா, உராங்குட்டான், சிம்பன்சி போன்றவற்றையும் முதனி எனச் சொல்லப்படும் பல விலங்குகளின் முன்னோடி உயிரினங்கள் வாழ்ந்த இடம். இங்கே பேசப்படும் மொழியை மல்காஸ் (Malgazh) என்பார்கள். இது, மலாய் மற்றும் இந்தோனேசிய மொழிகள் கலந்த ஒரு கூட்டு மொழி. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட போர்த்துக்கீசிய மாலுமி, டியேகோ டியாஸ் (Diogo Dias), வழிதவறி இறங்கிய இடம். 17ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும், பின்னர் பலரும் வாணிபம் செய்ய இங்கே வர ஆரம்பித்தார்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆப்பிரிக்கா

மாபெரும் ஏரி!

ப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய ஏரி, உகாண்டாவில் காணப்படும் விக்டோரியா ஏரி (Victoria Lake). யான் ஆனிங் சிபெக் என்ற பிரிட்டன் ஆய்வாளரால் கண்டறியப்பட்ட இந்த ஏரிக்கு, மகாராணி விக்டோரியா பெயரை வைத்தார். நைல் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொண்ட பயணத்தின்போது 1858ஆம் ஆண்டில் இதைக் கண்டறிந்தார். விக்டோரியா ஏரியிலிருந்து வெளியே செல்லும் நீர்தான், நைல் நதிக்கான தண்ணீரை பெரும்பாலும் அளிக்கிறது. உகாண்டாவுக்கு அருகிலுள்ள யின்சாவு என்ற இடத்தில் நைல் நதியுடன் இணைகிறது. விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர்கள். வட அமெரிக்காவின் சுப்பிரியர் ஏரிக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி இது. சுமார் 4,00,000 ஆண்டுகள் பழைமையானதாகவும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு