Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

வட அமெரிக்காவின் கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு.

பிரீமியம் ஸ்டோரி

பெர்முடா - நீர் மேலாண்மை நாடு!

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

ஜோன் டி பெர்முடே (Juan de Bermudez) என்கிற கடற்பயணியால், 1505ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தீவு இது. பெரும்பாலும் கடல் நீரால் சூழப்பட்டிருப்பதால், ஆறு, குளம் போன்ற குடிநீருக்கான வழிமுறைகள் மிகவும் குறைவு. எனவே, மழை நீரைச் சேகரித்து குடிநீராகப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் மிகுந்த அக்கறை செலுத்துகிறார்கள். அவரவர் வீட்டுக் கூரைகளில் மழைநீர் சேகரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். சிறந்த சுற்றுலாத் தீவாக இருக்கும் இங்கே சென்றால், வாடகை காரில் பயணிக்க முடியாது. காரணம், அந்தத் தீவில் வாடகை கார்கள் உபயோகிக்க தடையுள்ளது. அதிகப்படியான வாகன நெரிசல், மாசுக்களை கட்டுப்படுத்தவே இந்தத் தடை. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசே சிறப்பாகச் செய்துள்ளது.

- பூ.நந்தினி

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

கிரீன்லாந்து - மீன் வலையும் இணைய வலையும்!

லகின் மிகப்பெரிய தீவு நாடான கிரீன்லாந்து மக்களின் முக்கிய தொழில், மீன்பிடிப்பது. இந்த நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் 90 சதவிகிதம் மீன்களே. உள்நாட்டு மக்களின் உணவிலும் கடல்வாழ் மீன்களே பெரிதும் இடம்பெறுகின்றன. பனியால் உறைந்திருக்கும் கடல் பகுதியில் துளையிட்டு மீன் பிடிப்பதைப் பொழுதுபோக்காகவும் கலாசார விளையாட்டாகவும் செய்கிறார்கள். மீன் வலைகளைச் சுமக்கும் கிரின்லாந்தே இணைய வலைதளங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆம்! உலகில் தினமும் உருவாக்கப்படும் பல வலைதளங்களில் சுமார் 78 சதவிகித வலைதளங்களுக்கான ஸ்கிரிப்டிங் மொழி எனப்படும் php உருவாக்கத்தில் காரணமாக இருக்கிறது. இந்த ஸ்கிரிப்டிங் மொழியை உருவாக்கிய ரசமோஸ் லேர்டார்ஃப் (Rasmus Lerdorf), கிரீன்லாந்துக்காரரே. தற்போது, கனடாவில் வசித்துவருகிறார். இவரது ஸ்கிரிப்டிங் மொழி, மற்ற ஸ்கிரிப்டிங் மொழிகளான மைக்ரோசாஃப்ட் ஏஎஸ்பி, ஜாவா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது எளிமையாக உள்ளதே வெற்றிக்குக் காரணம்.

- ர.அந்தோணி விஜய்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

மெக்சிகோ - மர்மங்கள் சூழ்ந்த மாயன் நாகரிகம்!

வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள மெக்சிகோ, அதிசயங்களின் சுரங்கம். நூற்றாண்டுகள் கடந்த பின்னும் மாயன் நாகரிகம் பற்றி பல மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மாயன் நாகரிகம் கி.மு.2600ஆம் ஆண்டு உருவானதாக அறியப்படுகிறது. இங்குள்ள ஷிசேன் இட்சா (Chichen Itza) என்னும் பிரமிடு, மாயர்களால் நிறுவப்பட்டது. இந்தப் பிரமிடுக்கான படிக்கட்டுகள் வருடத்தின் 365 நாள்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பக்கமும் தலா 91 படிகள் உள்ளன. நான்கு பக்கங்களுக்கு 364 படிகள். உச்சியில் மேடை போன்ற சதுரமான படி என 365 படிக்கட்டுகள். ஹாப் (Haab) மற்றும் ஸோல்கின் (Tzolkin) என்ற இரண்டு வகை நாட்காட்டிகள், மாயர்களின் வழக்கத்தில் இருந்தது. மொக்சிகோவில் மட்டுமே 31 உலக பாரம்பர்ய இடங்கள் உள்ளன. 2007ஆம் ஆண்டில் மெக்சிகோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 21.4 மில்லியன்.

- பூ. நந்தினி

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

கோஸ்டா ரிகா - சாதனைச் சகோதரிகள்!

தெற்கில் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியன் கடலும் எல்லைகளாகக்கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு, கோஸ்டா ரிகா. உலகிலேயே ராணுவப் படைத் துறை இல்லை என்று அறிவித்த முதல் நாடு இது. சுற்றுலா விரும்பிகளுக்கான நாடுகளில் இதுவும் ஒன்று. 1996ஆம் ஆண்டு நடந்த அட்லான்டா ஒலிம்பிக்கில், இந்த நாட்டைச் சேர்ந்த கிளாடியா போல் (Claudia Poll), 200 மீட்டர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார். இதுவே, கோஸ்டா ரிகா நாட்டின் முதல் தங்கப் பதக்கம். இதற்கு முன்பாக, கிளாடியாவின் சகோதரியான சில்வியா போல் (Silvia Poll), 1988ஆம் ஆண்டு, தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதுவே கோஸ்டா ரிகா நாடு பெற்ற முதல் ஒலிம்பிக் பதக்கம்.

கிளாடியா போல்
கிளாடியா போல்

- ர.அந்தோணி விஜய்

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

சிண்ட் மார்ட்டன் - தொட்டுவிடும் தூரம்!

ரீபியன் தீவுகளில் உள்ள சிண்ட் மார்ட்டன் (Sint Maarten) என்னும் நாடு, அழகிய கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் ஃபேவரைட் தீவுகளில் இதுவும் ஒன்று. நீங்கள் கூகுள் இமேஜ் பகுதிக்குச் சென்று, சிண்ட் மார்ட்டன் என்று டைப் செய்தாலே, கடற்கரையும் தலைக்கு மேலே செல்லும் விமானமுமாகப் படங்கள் கொட்டும். இங்குள்ள மஹோ கடற்கரைக்கு அருகே உள்ளது, பிரின்சஸ் ஜூலியனா இன்டர்நேஷனல் விமான நிலையம் (Princess Juliana International Airport). இந்த விமான நிலையத்திலிருந்து விமானம் டேக் ஆஃப் ஆனதுமே கடற்கரை வந்துவிடும். அதனால், கடற்கரையில் உள்ளவர்களுக்கு 35 அடி உயரத்தில் செல்லும். சுற்றுலாவாசிகள் செல்போன்களில் செல்ஃபிகளாக எடுத்துத் தள்ளுவார்கள். பரந்துவிரிந்த கிரிஸ்டல் போன்ற நீல நிறக் கடற்கரையும் தலைக்கு மேல் பிரமாண்டமாக விமானம் செல்வதும் அளிக்கும் உணர்வினை அனுபவிக்கவே சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.

- ர.அந்தோணி விஜய்

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

கியூபா - நடனங்களின் பிறப்பிடம்!

11 மில்லியன் மக்கள்தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக இருக்கிறது கியூபா. வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ, கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய மக்கள் வசித்துவந்தனர். இவர்களில், டைனோ இன மக்கள் விவசாயத்தையும், சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன்பிடித் தொழிலையும் வேட்டையாடுதலையும் செய்துவந்தனர். மனிதனின் மகிழ்ச்சி வெளிப்பாடுகளில் ஒன்று, நடனம். டான்ஸான் (Danzon), ரும்பா (Rumba), சன் (Son), மாம்போ (Mambo), சல்சா (Salsa), ஹிப்ஹாப் (Hip hop) என உலகம் முழுவதும் ஆடப்படும் நடனங்களின் பிறப்பிடம் கியூபாவே. கியூபா மக்களுக்கு நாய்களின் மீதும் அதீத பிரியம் உண்டு. ஏறத்தாழ எல்லோரின் வீட்டிலும் நாய்கள் இருக்கும். அவற்றுக்கு அடையாள அட்டையும் தனிப்பட்ட எண்ணும் உண்டு. அதில் அந்த நாயின் பெயர், புகைப்படம், மருத்துவ நிலை, சிறப்பு அம்சங்கள் போன்ற தகவல்கள் இருக்கும்.

- பூ. நந்தினி

ஒரு நாடு ஒரு செய்தி - வட அமெரிக்கா

கனடா - தாத்தாவின் முகவரி!

வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கனடாவின் ஆதி குடி மக்கள், மூன்று வகைகளாக உள்ளனர். கனடிய செவ்விந்தியர்கள் (Red Indians), இனுட் (Inuit), மெடிஸ் (Metis). இதில் முதல் வகையினர், செவ்விந்தியர் என்ற சொல்லை ஏற்பதில்லை. எனவே, கனடாவின் முதல் குடிகள் (First Nations) என்று சொல்கிறார்கள். இவர்களையும் வாழ்ந்த நிலப் பகுதிகளின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இனுட் என்பவர்கள், கனடாவின் மிகவும் குளிரான பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களையே எஸ்கிமோ என்று உலக அளவில் குறிப்பிட்டார்கள். ஐரோப்பியர் கலந்த மரபினரை மெடிஸ் என்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் சாண்டா கிளாஸுக்கு, உலகம் முழுவதுமிருந்து குழந்தைகள் கடிதங்கள் அனுப்புவார்கள். Santa Claus, North Pole. H0H 0H0 என்ற அந்த முகவரி இருப்பது கனடா நாட்டில்தான்.

- கு.விஷால் ராம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு