Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

தூத்துக்குடி மாவட்டம், தென் தமிழகத்தின் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.

பிரீமியம் ஸ்டோரி

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், புதுச்சேரி, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற, உங்கள் பணி தொடரட்டும்’ என்றனர். அந்த வாழ்த்தும் வரவேற்பும் கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

சென்னை, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சாவூர், மற்றும் திருச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து, `தூத்துக்குடி-200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.

அன்பு தூத்துக்குடிச் சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிந்துகொள்வோம்.

1. முத்துகுளிக்கும் நகரம்

தூத்துக்குடி மாவட்டம், தென் தமிழகத்தின் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு அருகில் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன. பழங்காலத்தில் முத்துகுளிக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் என்பதால், `முத்து நகர்' என்றும் அழைக்கப்படுகிறது.

2. பெயர்க் காரணம்

சோதிக்குதிரை, முத்துக் குளித்துறை என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கர்னல் என்ற ஆங்கிலேய அதிகாரி, `மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்தல் நடைபெறும் தோத்துக்குரை நகரம்' என்று, சென்னையிலிருந்த பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுக்குக் குறிப்பு அனுப்பியுள்ளார். அதுவே, தூத்துக்குடியாக மாறியது. ஆங்கிலத்தில் Tuticorin என்று அழைக்கப்பட்டது. தற்போது, தூத்துக்குடி என்றே ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்படுகிறது.

3. பாண்டியர் முதல் பிரிட்டிஷார் வரை

சங்ககாலம் தொடங்கி, அதாவது 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை, பாண்டியர்கள் இந்த நகரை ஆண்டுள்ளனர். பின்னர், சோழர்கள் இந்நகரைக் கைப்பற்றினர். மதுரை நாயக்கர் மன்னர்களும் இந்நகரை ஆட்சிபுரிந்துள்ளனர். கி.பி 1532ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியர்கள்தான் தூத்துக்குடியை வந்தடைந்த முதல் ஐரோப்பியர். தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்த நகரத்தை ஆண்டுள்ளனர். கி.பி.1782 ஆம் ஆண்டில், டச்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

4. தொன்று தொட்ட நாகரிகம்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நீர் ஆதாரம் தாமிரபரணி நதியே. வற்றாத இந்த ஜீவநதிதான் தூத்துக்குடி மக்களின் தாய். சிறந்த சமுதாய அமைப்பும் நாகரிகமும்கொண்ட மக்கள், தொன்று தொட்டு வாழ்ந்து வந்ததற்கு, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் சிறந்த எடுத்துகாட்டு.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

5. முதுமக்கள் தாழிகள்

ஆதிச்சநல்லூரில், கி.பி 1876 ஆம் ஆண்டிலிருந்தே தொல்லியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் மரித்தவர்களை, முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்யப்படும் முறை இருந்துள்ளது. இங்கு சுமார் 1000 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

6. ஆதிச்சநல்லூர் பெயர்க் காரணம்

கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆதிச்ச நாடார் என்ற பரம்பரையினர் பற்றிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. அந்தக் குடும்பத்தின் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட்டது.

7. இரும்புத் தயாரிப்பு

ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலப் பொருள்களும் செம்புக் காலப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரோம் நாட்டு நாணயங்கள், இரும்புக் கருவிகள், நவரத்தின மணிகள் முதலியவை கிடைத்துள்ளன. கி.மு.1200ஆம் ஆண்டு முதலே, ஆதிச்சநல்லூரிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் இரும்பு ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

8. முதுமக்கள் தாழியில் எலும்புக் கூடுகள்

ஆதிச்சநல்லூரில் 60x60 பரப்பளவில் மட்டும் 150 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. எனவே, இந்த இடம், முன்னோர்களின் இடுகாடு என்று தெரிகிறது. அன்றைய மக்கள், உடல்களை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். முதுமக்கள் தாழிகள் பலவற்றில் மனித எலும்புக் கூடுகள் முழுமையாக இருந்துள்ளன. ஒரு முதுமக்கள் தாழியின் உள்பக்கத்தில் கைப்பிடியும் உள்ளது.

9. கிறிஸ்துவுக்கு முன் ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் கி.மு.500ஆம் ஆண்டுவாக்கில் உருவானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் தழைத்தோங்கி வளர்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

10. 2,900 ஆண்டுகள் பழைமையானவை

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட் பொருள்கள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இவை 2,900 ஆண்டுகள் பழைமையானவை என்று கண்டறிப்பட்டன. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

11. சிவகளை

ஆதிச்சநல்லூர் அருகேயுள்ள சிவகளையிலும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கிடைத்துள்ளது. இங்கு முதுமக்கள் தாழியின் எச்சங்கள், வாள், குதிரை லாடம், அம்புகள் கிடைத்துள்ளன.

12. கொற்கை துறைமுகம்

ஏரல் அருகே தற்போதுள்ள கொற்கையில் துறைமுகம் இருந்துள்ளது. இங்கே அரேபிய குதிரைகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கியுள்ளன. துறைமுகம் கடற்கொள்ளையர் தாக்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளது. கொற்கை முத்து, சேர நாட்டிலிருந்து வரவைக்கப்படும் மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லிய துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருள்களை யவனர், ரோமர், எகிப்தியர், கிரேக்கர்கள் ஆகியோர் வாங்கியுள்ளனர்.

13. பழைய காயல் துறைமுகம்

கி.பி.13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, கொற்கைத் துறைமுகம் இயங்காமல் போக, பாண்டியர்கள் பழைய காயலை துறைமுகமாகப் பயன்படுத்தினர். அரேபியர்கள், சீனர்கள், ரோமானியர்கள் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். பீங்கான்பொருள்கள், உருளைக்கிழங்கு வெளிநாட்டிலிருந்து இந்தத் துறைமுகத்தின் வழியாக வந்துள்ளன.

14. தூத்துக்குடி துறைமுகம் உருவாக்கம்

கொற்கை மற்றும் பழைய காயலுக்குப் பிறகு, போர்த்துக்கீசியர் காலத்தில் தூத்துக்குடித் துறைமுகம் சிறப்புப் பெற்றது. வங்கக் கடலில் தமிழனின் பாய்மரக் கப்பல்களும், கட்டுமரங்களும், சோழர்களின் போர்க் கப்பல்களும், மூவேந்தர்களுடைய கடல் ஆதிக்கமும் இருந்துள்ளன.

தூத்துக்குடி ஏரியல் வியூ...
தூத்துக்குடி ஏரியல் வியூ...

15. உதயமானது தூத்துக்குடி மாவட்டம்

குற்றாலம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை முதல் திருச்செந்தூர் வரை பரந்து விரிந்திருந்தது நெல்லை மாவட்டம். 1986 அக்டோபர் 20ஆம் தேதி, பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உதயமானது.

16. தாலுகாக்கள்

தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி என மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சாத்தான்குளம், ஏரல், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 10 தாலுகாக்கள் அடங்கியுள்ளன.

17. சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், விளாத்திக்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 12 பஞ்சாயத்து யூனியன்கள், 19 நகரப் பஞ்சாயத்துகள், 403 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.

18. மன்னார் வளைகுடா

தூத்துக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரை 100 கிலோமீட்டர் தொலைவு கடல் பகுதி, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் கடல் பகுதி இது. 4233 அரிய வகை தாவரங்கள், 14 அரிய வகை கடற்புற்கள், கடற்பசுக்கள், அரிய வகை மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைத் திட்டுகள் உள்ளன.

19. தீவுகள் 21...

மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படும். வான்தீவு, விலங்குத் தீவு, காசுவார் தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்கா என்று தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இங்குள்ள அனைத்துத் தீவுகளுமே பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ளன.

20. வல்லநாடு மலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் மலையோ, காடுகளோ கிடையாது. வல்லநாடு மலைப் பகுதி மட்டுமே உள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் இந்த மலை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைவிடப் பழைமையான கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்தது.

21. தேரிக்காடுகள்

நாசரேத், திருச்செந்தூர், சாத்தான்குளம், காயாமொழி மற்றும் பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் தேரிக்காடுகள் அமைந்துள்ளன. 390 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், இந்தக் காடு அமைந்துள்ளது. நூற்றாண்டுகளாக ஏற்பட்டமண் அரிப்பினால், மண் குன்றுகள் உருவாகியுள்ளது. இங்கு கிடைக்கும் நிலத்தடி நீர், சுவைமிக்கது. தேரிக்காட்டினையொட்டியுள்ள நகரத்து மக்களின் தண்ணீர் தேவையை, இந்தச் செம்மண் பூமி தீர்த்துவருகிறது.

22. பாசன வசதி

பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல் வழியாகப் பயணித்து, புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில், தாமிரபரணி நதியில் கடைசி தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் கால்வாய்கள் வழியாக 53 குளங்கள் நீர் பெறுகின்றன. 45,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

23. அணை இல்லாத மாவட்டம்

தமிழகத்தில் பெரிய அணைகள் இல்லாத மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்று. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்துதான் தூத்துக்குடி மாவட்டத்தின் தண்ணீர் தேவை தீர்க்கப்படுகிறது.

24. கோரம்பள்ளம் குளம்

7 கி.மீ சுற்றளவுகொண்டது. 1,300 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் குளம், 1888 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில் வெட்டப்பட்டது. முத்தையாபுரம், சவேரியார்புரம், முள்ளக்காடு, பெரியநாயகிபுரம் போன்றவை இந்தக் குளத்திலிருந்து குடிநீர் வசதி பெறுகின்றன. 11 டி.எம்.சி தண்ணீரை இந்தக் குளத்தில் தேக்கிவைக்க முடியும். இதனால், 2,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.

துறைமுகம்
துறைமுகம்

25. கடலில் பாதி கடம்பா

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் தென்கால் பகுதியிலிருந்து நீர்பாசன வசதிபெறும் குளங்களில் முக்கியமானது, கடம்பாகுளம். சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் குளத்துக்கு நீர் வந்தால்தான் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.இந்தக் குளத்தை, `கடலில் பாதி கடம்பா' என்பார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் இது.

26. எட்டயபுரம் ஜமீன்

பாரதியார் காலத்தில் இந்த ஜமீன்தான் அந்தப் பகுதியிலிருந்த 15 ஜமீன்களில் பெரியது. ஒன்றரை லட்சம் மக்கள்தொகை கொண்டது. 4,000 ஏக்கர் தோட்டம், 58,000 ஏக்கர் தரிசு, 9,000 ஏக்கர் நஞ்சை, 2,90,000 ஏக்கர் புஞ்சை நிலங்கள் இருந்தன. ஜமீனின் வருமானம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

27. வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் தூத்துக்குடி மண்ணில் உதித்த சுதந்திர போராட்ட வீரர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்தவர். வெள்ளையருக்கு வரி செலுத்த மறுத்து போரில் ஈடுபட்டார். எட்டப்பன் துணையுடன் கட்டபொம்மனைப் பிடித்து தூக்கிலிட்டனர். கட்டபொம்மன் வாழ்ந்த கோட்டை வெள்ளையர்களால் அழிக்கப்பட்டது.

28. வெள்ளையத் தேவன்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியாக விளங்கியவர் வெள்ளையத் தேவன். பானர்மேன் என்ற ஆங்கிலேய படைத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டான். வெள்ளையத் தேவன் தலைமையிலான பாஞ்சாலங்குறிச்சி படைகள், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டனர். போர் நெறிமுறைகளை மீறி, வெள்ளையத் தேவன் சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளையத் தேவனின் மனைவி வெள்ளையம்மாள், தன் கணவனைக் கொன்ற சிப்பாயைக் கத்தியால் குத்தி பழி தீர்த்தார்.

29. வீரன் சுந்தரலிங்கம்

கட்டபொம்மன் படையின் முக்கிய தளபதிகளில், வீரன் சுந்தரலிங்கமும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவர்னகிரி என்ற ஊரில் பிறந்தவர். பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கவந்த வெள்ளையர்கள் முகாமிட்டிருந்தனர். 1799 செப்டம்பர் 8ஆம் தேதி, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குக்குள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி மரணம் அடைந்தார்.

30. மகாகவி பாரதி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்தவர், சுப்பிரமணிய பாரதி. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகங்கள் இவருக்கு உண்டு. பெண் விடுதலைக்கு வித்திட்டவர்.

31. வ.உ.சிதம்பரனார்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வண்டானம் கிராமத்தில் பிறந்தவர். வண்டானம் உலகநாதன் சிதம்பரனார் எனும் அவரது பெயரைச் சுருக்கி வ.உ.சி என்றழைக்கிறோம். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர். வெள்ளையர்களுக்குப் போட்டியாக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். வெள்ளையர்கள் அவரை கைது செய்தனர். சிறையில் செக்கு இழுத்தார். வாழ்நாள் முழுவதும் சுதந்திரத்துக்காகப் போராடிய வ.உ.சிதம்பரனார், 1936 நவம்பர் 18ஆம் தேதி காலமானார்.

32. லோன் துரை கொல்லப்பட்ட சம்பவம்

சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 1942 செப்டம்பர் 20ஆம் தேதி, விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு, குலசேகரபட்டினம் உப்பளத்தில் கொட்டகைக்குத் தீ வைத்தது. டபிள்யூ.லோன் என்ற ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ராஜகோபால், காசிராஜன் என்ற இரண்டு வீரர்களுக்கு மரண தண்டனையும், பெஞ்சமின் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களை விடுவிக்க ராஜாஜி லண்டன் சென்று வாதாட முயன்றார். அவர் பிரிட்டன் வருவதை விரும்பாத ஆங்கிலேயே அரசு, 1945 ஏப்ரல் 23 ஆம் தேதி தண்டனையைக் குறைத்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கோயில்கள்

33. திருச்செந்தூர் கோயில்

தூத்துக்குடியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில், முருகனின் இரண்டாவது படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. முருகப் பெருமானுக்குக் கடற்கரையில் உள்ள ஒரே படை வீடு இதுதான். சூரபத்மனை வதம் செய்வதற்காக, முருகன் இங்கே தங்கியதாக வரலாறு. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் கோபுரம் 9 அடுக்குகள்கொண்டது. இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்திபெற்றது.

34. கழுகுமலை

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோயில், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று வடிவமைப்புகொண்டது. ஒரே பாறையில் பெரிய மலைப்பாறையை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தென் தமிழகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படுகிறது.

35. முருகன் கோயில்

கழுகுமலை முருகன் கோயில் அல்லது, கழுகாலசல மூர்த்தி கோயில் என்று அழைக்கப்படுகிறது. முருகனுக்கு அமைந்துள்ள குடவரைக் கோயில் இது. முருகன் மேற்குப்புறமாக இருந்து அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூர் கோயில்
திருச்செந்தூர் கோயில்

36. சமணர் படுகைகள்

பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில், கி.பி 768-800 கழுகுமலை சமணர் படுகைகள் உருவானதாகச் சொல்லப்படுகிறது. திகம்பரரர் என்ற துறவி இங்கே தங்கி சேவை புரிந்துள்ளார். தங்கள் வாழ்க்கை முறைகளை சிற்பமாக வடிவமைப்பதை சமணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்கும் சமணர் படுகைகள் உள்ளன. மகாவீரர், பாகுபலி, பர்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் இங்கே வடிவமைக்கப்பட்டுள்ளன.

37. நவ கைலாயம்

தமிழகத்தின் நவ கைலாயக் கோயில்களில் ஐந்து கோயில்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. உடல்நலன் மற்றும் செல்வத்தை அள்ளி கொடுப்பதற்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த சிவன் கோயில்கள் இவை. பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர் ஆகிய நான்கு தலங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளன. முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி, சேந்தன்பூமங்கலம் ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய 9 கிரகங்களும், சிவனை நவ கைலாய கோயில்களில் வழிபட்டதாக ஐதீகம்.

38. நவ கைலாயம் உருவானது எப்படி?

அகத்திய முனிவரின் முக்கிய சீடரான உரோமச முனி, சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். இதற்காக, அகத்தியரின் உதவியை நாடியபோது, தாமிரபரணி நதியில் 9 தாமரை மலர்களை மிதக்கவிட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதன்படி வழிபட்டு உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அப்படி எழுந்தவையே நவ கைலாய கோயில்கள்.

39. நவ திருப்பதி

தாமிரபரணி நதிகரையில் வைணவத்தைப் பின்பற்றும் மக்களுக்காக அமைந்துள்ள 9 கோயில்களை நவ திருப்பதி என்கிறார்கள். இந்தக் கோயில்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே அமைந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருக்கோளுர், திருப்புளியங்குடி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, பெருங்குளம், தொலைவில்லி மங்கலத்தில் இரண்டு கோயில்கள் என 9 வைணவத் தலங்கள் உள்ளன.

40. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா

மைசூருக்கு அடுத்து, தசரா திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும் நகரம் குலசேகரப்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில், நவராத்திரியின் 9 நாள்களும் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செய்வார்கள். மகிஷாசுரனை அன்னை பராசக்தி வதம் செய்ததையே, தசரா திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். 10-வது நாளில், சூரனை பராசக்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அன்றைய தினத்துடன் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தசரா திருவிழாவுக்காக வேடமிட்டு காணிக்கை சேகரித்து, முத்தாரம்மன் கோயிலில் செலுத்துவர்.

41. குரங்கணி அம்மன் கோயில்

ஏரல் அருகே தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது. சீதா தேவியை ராவணன், புஷ்பக விமானத்தில் தூக்கிச்சென்றபோது, ராமருக்கு வழிகாட்டும் விதமாக, தான் அணிந்திருந்த முத்துமலையை இந்த இடத்தில் சீதா தேவி வீசியதாக ஐதீகம். ஆகவே, இங்கே கோயில் எழுப்பி, முத்துமாலையம்மன் என்று அழைக்கிறார்கள். ராவணனுடன் போருக்குத் தயாரானபோது, வானரங்களை வரிசையாக அணிவகுத்து ராமர் நிறுத்திய இடமாகவும் கருதப்படுகிறது. குரங்குகள் வரிசையாக நின்றதால், `குரங்கணி' என்ற பெயர் ஏற்பட்டது. திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் இரவு தங்குவார்கள். அடுத்த நாள் நேர்த்திக்கடன் செய்து, அம்மனை வழிபட்டு திரும்புவார்கள்.

42. ஏரல் சேர்மன் அருணாசல சாமி கோயில்

ஏரலின் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள சமாதி கோயில். 1880 அக்டோபர் 2ஆம் தேதி, அருணாசல சாமி அவதரித்தார். இளம் வயதிலேயே ஏரல் நகராட்சி சேர்மனாக இருந்து, மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்த இவரை, சேர்மன் அருணாசலம் என்று அழைத்தனர். திருமணம் செய்துகொள்ளாத இவர் 1908 ஜூலை 28 சமாதி அடைந்தார். தன் மரணத்தை முன்கூட்டியே சகோதரரிடம் கூறியிருந்தார். இவருக்கு தாமிரபரணியின் வடகரை பகுதியில் சமாதி அமைக்கப்பட்டது. ஆடி அமாவாசை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

43. செட்டியாபத்து ஐந்து வீட்டு சாமி கோயில்

உடன்குடி அருகே செட்டியாபத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பெரியசாமி, வயனப்பெருமாள் மற்றும் ஆனந்தம்மாள், ஆத்தி ஸ்வாமி, திருப்புளி ஆழ்வார், பெரிய பிராட்டி ஆகியோருக்கு இங்கே சந்நிதிகள் உள்ளன. ஒரே கோட்டைக்குள் 6 கடவுள்களுக்கு 5 சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் எனப்படுகிறது. 300 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில், விரதம் இருந்து வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. சித்திரைத் திருவிழாவும் தைத் திருவிழாவும் பிரசித்தம். இங்கு வழங்கப்படும் அன்னமுந்திரி பிரசாதம் மகிமை வாய்ந்ததாகக் கருதுகிறார்கள்.

44. அருஞ்சுனைக் காத்த அய்யனார் கோயில்

நாசரேத்திலிருந்து காயாமொழி, பூச்சிக்காடு வழியாக தேரிக்காட்டுக்குள், திருச்செந்தூர் செல்லும் சாலையில் பயணித்தால், புன்னை நகரை கடந்ததும் 3 கிலோமீட்டர் தொலைவில் குளத்தின் அருகே, அருஞ்சுனைக் காத்த அய்யனார் கோயில் உள்ளது. மக்கள் இந்தக் குளத்தில் நீராடி வழிபடுவார்கள்.

45. சங்கர ராமேஸ்வரர் கோயில்

முருகப் பெருமானின் திருமணத்துக்கு திருச்செந்தூருக்குச் செல்வதற்காக, சிவனும் பார்வதியும் செல்லும் வழியில் வஞ்ச புஷ்பகாரணி குளத்தின் அருகே சோலைகள் நிறைந்த பகுதியில் ஓய்வெடுத்தனர். அப்போது, பார்வதி தேவி அமைதியான இந்த இடத்தில் திருமந்திரங்களை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இறைவன் பார்வதி தேவிக்கு பிரணவ மந்திரங்களின் ரகசியங்களை விளக்கினார். இதனால், இந்த இடம் திருமந்திர நகர் என்று அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதியும் இளைப்பாறிய இடத்தில்தான் சங்கர ராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

சமணர் படுகைகள்
சமணர் படுகைகள்

46. பன்னம்பாறை மாடத்தி அம்மன் கோயில்

திருச்செந்தூரிலிருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் பன்னம்பாறை என்ற இடத்தில் மாடத்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 400 ஆண்டுகள் பழைமையானது.

47. சித்தலக்கரை வெக்காளியம்மன்

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சித்தலக்கரை வெக்காளியம்மன் கோயில். 72 அடி உயர வெக்காளியம்மன் சிலையும், பாம்பின் மீது சயனம்கொண்ட கோலத்தில் மகா விஷ்ணு சிலையும் உள்ளன.

48. வனத்திருப்பதி கோயில்

நாசரேத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், குரும்பூர் அருகே புன்னையடி கிராமம் உள்ளது. இங்கு திருப்பதி கோயிலைப் போன்றே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, வனத்திருப்பதி என்பார்கள். ஸ்ரீ நிவாச பெருமாள், ஸ்ரீ ஆதிநாராயணர், ஸ்ரீ சிவனைந்த பெருமாள் அருள்பாலிக்கின்றனர்.

தேவலயங்கள்

49. பனியமாதா கோயில்

தூத்துக்குடி பனியமாதா கோயில் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. கத்தோலிக்க சபை கோயிலான இது, போர்த்துக்கீசிய பாணியில் கட்டப்பட்டது. 1713 ஆகஸ்ட் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. ஏழு கடல் துறை ஏக அடைக்கலத்தாய் இங்கே எழுந்தருளியுள்ளார். வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னக்காயல், வீரபாண்டியபட்டணம், திருச்செந்தூர், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த கடலோடும் பரதவர் மக்களுக்குப் பாத்தியப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 5 ந் தேதி, பனியமாதாவின் தேர், தூத்துக்குடி நகரில் வலம்வரும். சாதி, மத வேறுபாடின்றி மக்கள் வழிபடுவர். முத்துமாநகர் நாயகி என்பது மாதாவின் சிறப்புப் பெயர்.

50. நாசரேத் தூய யோவான் ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில், சி.எஸ்.ஐ சபை மக்களின் தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸனின் கதீட்ரல் ஆலயம். இயேசுவின் சொந்த ஊரான நாசரேத் பெயரையே இந்த ஊருக்கும் வைத்துள்ளனர். நாசரேத் தூய யோவான் ஆலயத்தில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடைபெறும் அசன திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பார்கள்.

51. மெய்ஞானபுரம் பரி பவுல் ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைமையான கிறிஸ்தவ ஆலயங்களில் பரி பவுல் ஆலயம் ஒன்று. இந்த ஆலய கோபுரம் 192 அடி உயரம்கொண்டது.

52. மணல்மாத ஆலயம்

சொக்கன்குடியிருப்பிலிருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவில் தேரிக்காட்டில் அமைந்துள்ளது மணல் மாதா திருத்தலம். இந்தப் பகுதி, சிவப்பு பட்டுக்கம்பளம் விரித்தது போல சிவப்பு மணலால் நிரம்பியிருக்கும். இங்குள்ள 215 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில், மே மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.

53. மணப்பாடு கோயில்

திருச்செந்தூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில், மணப்பாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயம் பிரசித்திபெற்றது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் சிறு துண்டு இங்குள்ளது. கத்தோலிக்க குருக்களில் புகழ்பெற்ற புனித சவேரியார், இந்தக் கிராமத்துக்கு வந்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 15 வரை திருவிழா கொண்டாடப்படுகிறது.

54. மசூதிகள்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இஸ்லாமிய மக்கள் பெருமளவு வசிக்கின்றனர். இந்த நகரத்தில், கடற்கரைப் பள்ளி, பெரிய மசூதி போன்ற ஏராளமான மசூதிகள் உள்ளன.

பண்டிகைகள்

55. ஈஸ்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். சாயர்புரம், நாசரேத், இடையன்குடி, மெய்ஞானபுரம், நாலுமாவடி, ஆலந்தலை, மணப்பாடு, பழைய காயல், புன்னக் காயல் போன்ற நகரங்களில் கிறிஸ்தவ மக்கள் அதிகம். இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

56. அசன திருவிழா

நாசரேத் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கோயில் பிரதிஷ்டை தினத்தில் அசன திருவிழா நடத்தப்படும்.

பனியமாதா கோயில்
பனியமாதா கோயில்

உணவுகள்

57. மக்ரூன்

மக்ரூன் என்ற இனிப்பு பண்டத்துக்குப் பெயர்பெற்றது தூத்துக்குடி. முந்திரியைச் சேர்த்து செய்யும் போர்த்துக்கீசிய பண்டம். வாயில் போட்டதுமே கரைந்துவிடும் மக்ரூனில் பல ரகங்கள் உள்ளன.

58. கொல்லாங்கொட்டை

தூத்துக்குடியின் சிறப்பு மிக்க மக்ரூன் செய்ய முந்திரி பருப்பு அதிகம் தேவை. தூத்துக்குடியில் தங்கியிருந்த போர்த்துக்கீசியர்கள், பிரேசில் நாட்டிலிருந்து முந்திரிகளை இறக்குமதி செய்துள்ளனர். கொல்லம் துறைமுகம் வழியாக தூத்துக்குடிக்கு முந்திரிகள் வந்துள்ளன. இதனால், முந்திரி பருப்புக்கு, `கொல்லாங்கொட்டை' என்ற பெயர் இங்குள்ளது.

59. சீனிமிட்டாய்

சீனிமிட்டாய் அல்லது தேன்குழல் என்று அழைக்கப்படும் இனிப்புப் பண்டமும் இங்கே பிரபலம். ஜிலேபி போன்று இதனைச் சுட்டெடுப்பார்கள். இனிப்பு பாகு கலந்து செய்யப்படும். தேன் போன்ற சுவை மிகுந்தது. காரச்சேவு மற்றும் மிக்சர் ரகத்துக்கும் தூத்துக்குடி புகழ்பெற்றது.

60. கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் அதிக சுவை மிகுந்தது. தரமான முறையில் கைப்பக்குவத்துடன் இங்கே கடலை மிட்டாய் தயாரிக்கப் படுகிறது. கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் ஏராளமான கடலை மிட்டாய் கடைகள் உள்ளன.

கடலை மிட்டாய்
கடலை மிட்டாய்

61. பாட்டக்கரை இறைச்சி குழம்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் திருமணம் மற்றும் ஆலயத் திருவிழாக்களில் தயாரிக்கப்படும் மட்டன் குழம்பு, மிகுந்த சுவையானது. பாட்டக்கரை என்ற கிராமத்தில் இத்தகைய சுவையான இறைச்சி குழம்பு தயாரிக்கும் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்.

62. மஸ்கோத் அல்வா

நெல்லைக்கு இருட்டுக்கடை அல்வா போல, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதலூர், மஸ்கோத் அல்வாவுக்கு ஃபேமஸ். மைதா மாவுடன் முழுக்க முழுக்க தேங்காய்ப்பால் கலந்து செய்யப் படுகிறது. எண்ணெய் சேர்க்க மாட்டார்கள். ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் முதன்முதலில் இந்த ரக அல்வா செய்யப்பட்டதால் இந்தப் பெயர். முதலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மஸ்கோத் அல்வா தயாரிப்பு குடிசைத் தொழிலாக உள்ளது.

63. புட்டுக் கருப்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் இஞ்சி, சுக்கு ஆகியவை கலந்து செய்யப்படும் புட்டுக் கருப்பட்டி சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சி, சிறிய அளவுகளில் பல்வேறு வடிவங்களில் வார்த்தெடுத்து பனை ஓலையில் செய்த பெட்டிகளில் விற்பனை செய்கிறார்கள்.

மக்ரூன்
மக்ரூன்

64. பனங்கிழங்கு

பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில், மண் மேட்டின் மேல் பனை விதைகளைத் தூவிவிடுவார்கள். மண்ணுக்குள் பனங்கிழக்கு வளரத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்தில், பனங்கிழங்குகளைத் தோண்டி எடுத்து அவித்து உண்பார்கள்.

தூத்துக்குடி ரயில்கள்

65. திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரி லிருந்து திருநெல்வேலி 61 கிலோமீட்டர். திருச்செந்தூரிலிருந்து வீரபாண்டியபட்டணம், காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , செய்துங்க நல்லூர், பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலியை அடைகிறது. இந்த ரயில் பாதையில், கல்வி நகரமான நாசரேத் அமைந்துள்ளது. இதனால், திருச்செந்தூர் - திருநெல்வேலி, நாசரேத் போன்ற நகரங்களில் படிப்பவர்களுக்கு இந்த ரயில் வசதியாக உள்ளது.

66. பாலக்காடு- திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்

கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து பழநி நகரம் வழியாக, திருச்செந்தூருக்கு தினமும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக உள்ளது.

67. தூத்துக்குடி- திருச்செந்தூர் பாசஞ்சர்

தூத்துக்குடியிலிருந்து மேலூர், மீளவிட்டான், தட்டப்பாறை, கைலாசபுரம், பாண்டியபுரம் வழியாக, வாஞ்சி மணியாச்சி வந்தடைகிறது. அங்கிருந்து நாரைக்கிணறு, கங்கைகொண்டான், தாழையூத்து, திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக திருச்செந்தூர் அடைகிறது.

68. முத்து நகர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. மைசூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

69. செந்தூர் எக்ஸ்பிரஸ்

776 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் இந்த ரயில், எழும்பூரிலிருந்து புறப்படுகிறது. விழுப்புரம், பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்தடைகிறது. அங்கிருந்து திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூரை அடைகிறது.

முக்கிய நகரங்கள்

70. தூத்துக்குடி

தென் தமிழகத்தின் தொழில்நகரமான இது, 2008 ஆகஸ்ட் 5ஆம் தேதி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளன. வாகைகுளத்தில் விமான நிலையமும் உள்ளன.

71. தூத்துக்குடி அன்றும் இன்றும்

1866ஆம் ஆண்டு, தூத்துக்குடி நகராட்சி உருவானது. 2008ஆம் ஆண்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே 60 வார்டுகள் உள்ளன.

72. திருச்செந்தூர்

மாவட்டத்தின் முக்கிய கல்வி நகரம். சுற்றுலா நகரமும்கூட. கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, உடற்கல்வியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

73. செய்துங்கநல்லூர்

இந்த ஊர் நெல்லை- திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும் இங்குள்ளது. ரயில் நிலையமும் இருக்கிறது.

74. கோவில்பட்டி

மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பருத்தி உற்பத்திக்கு பெயர்பெற்றது. மில்கள், தீப்பெட்டி ஆலைகள் நிறைந்த நகரம். கல்விக்கும் பெயர்போனது. ஹாக்கி விளையாட்டு, சிலம்பத்துக்கும் இந்த நகரம் பெயர்போனது.

75. ஸ்ரீவைகுண்டம்

தாமிரபரணி வடகரையில் உள்ள அழகான ஊர். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையுடன் இணைக்க தாமிரபரணியின் குறுக்கே இரண்டு பாலங்கள் இந்த ஊரில் கட்டப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஆகும்.

76. ஆழ்வார்திருநகரி

தாமிரபரணி நதிக்கரையில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த நகரம், ஒரு வைணவத் தலம். 108 திவ்ய தேசங்களில் இந்த நகரமும் ஒன்று. இங்குள்ள ஆதிநாதர் கோயில் பிரசித்திபெற்றது.

77. ஏரல்

இந்த நகரமும் தாமிரபரணி நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. துணி தயாரிப்புக்கும் வெண்கல பாத்திரங்கள் உற்பத்திக்கும் முக்கியமான ஊர். தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரம்.

78. குரும்பூர்

நெல்லை- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள குரும்பூர் நகரம் முக்கிய சந்திப்பு ஆகும். ரயில் நிலையமும் இங்கே உள்ளது.

79 ஆத்தூர்

ஆத்தூரைத் தாண்டி சிறிது தொலைவு பயணிக்கும் தாமிரபரணி புன்னக்காயல் என்ற இடத்தில் கடலுடன் இணைகிறது. நெல், வாழை, வெற்றிலை இங்கே அதிகம் விளைகிறது.

80. ஆறுமுகநேரி

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, கேரளா மற்றும் ஆந்திராவுக்கு அதிகம் அனுப்பப்படுகிறது.

81. காயல்பட்டினம்

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த ஊர், பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கியது. பயணக் கட்டுரையாளர் மார்க்கோபோலோ, தமிழறிஞர் கால்டுவெல் ஆகியோர் காயல்பட்டினத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களில் பலர், அரபு நாடுகளில் பணிபுரிகிறார்கள்.

82. குலசேகரப்பட்டினம்

குலசேகரப்பட்டினத்தில் சேரமான் பெருமாள் நாயனார் சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. கடற்கரை நகரான இங்கு, விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.

83. கடம்பூர்

மணியாச்சியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பருத்தி அதிகமாக விளைகிறது. இங்கு தயாராகும் கடம்பூர் போளி, நாவில் எச்சில் ஊறவைக்கும்.

84. முதலூர்

முதலூரில் உள்ள புனித மிகாவேல் ஆலயம், பிரசித்திபெற்றது. மஸ்கோத் அல்வா, அரிசி முறுக்குகள் சுவை மிகுந்தவை. தமிழர்களின் பாரம்பர்ய சிலம்பாட்டம், களியாட்டத்துக்கும் இந்த நகரம் புகழ்பெற்றது.

85. சாயர்புரம்

கிறிஸ்தவத்தை பரப்ப வந்த சாமுவேல் ராயர் என்ற போர்த்துகீசியர் இங்கே தங்கியிருந்ததால், சாயர்புரம் என்று பெயரிடப்பட்டது. தமிழறிஞர் ஜி.யு.போப் பெயரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

86. சாத்தான்குளம்

சாத்தான்குளம் பனைவெல்லம், சர்க்கரை தயாரிப்புக்கு புகழ்பெற்றது. சற்று வறட்சி பாதித்த பகுதி. வியாழக்கிழமை தோறும் இங்கு கூடும் வாரச் சந்தை பிரபலம். சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சாத்தான்குளம்தான், பிரதான சந்தை.

உப்பு வயல்
உப்பு வயல்

87. விளாத்திக்குளம்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு நெசவு செய்வது முக்கியத் தொழிலாக உள்ளது.

88. பெரியதாளை

மாவட்டத்தின் கடற்கரை நகரம். மக்களின் முக்கிய தொழில் மீன் பிடிப்பது. தமிழக அரசு சார்பில், தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

89. பெருங்குளம்

பெருங்குளத்தில் ஏராளமான சிவன், விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமத்தில் பிறந்த மாதவைய்யா, தமிழின் முன்னோடி எழுத்தாளர் ஆவார்.. பத்மாவதி சரித்திரம் என்ற நாவல் எழுதியவர்.

90. முடிசூடிவைத்தானேந்தல்

இந்த ஊர் மக்கள்தான் பாண்டிய மன்னர்களுக்கு முடிசூட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார் களாம். அதனால் இந்தப் பெயர் பெற்றது.

91. மணியாச்சி

மதுரை- நெல்லை- தூத்துக்குடி ரயில்கள் நின்று செல்லும் ஊர். ஆஷ் துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக்கொண்டு வரலாற்றில் இடம் பிடித்த ரயில் நிலையம்.

92. ஓட்டப்பிடாரம்

கிராமங்கள் நிறைந்த சட்டமன்ற தொகுதி. வானம் பார்த்த பூமியான இங்கு, மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும்.

93. புதியம்புத்தூர்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்தான் குட்டி திருப்பூர் என்று அழைக்கப்படும் புதியம்புத்தூர் அமைந்துள்ளது. பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தியில் புதியம்புத்தூர் இந்த மாவட்டத்தில் முன்னணியில் உள்ளது.

மரபுத் தொழில்கள்

94. முத்துக்குளித்தல்

சிப்பி என்பது இரு பக்கமும் ஓடுகள்கொண்ட உயிரினம். சிப்பியின் ஓட்டுக்குள் சிறிய பொருள் புகுந்துவிட்டால், அந்த உயிரினத்தின் உடலில் சுரக்கும் ஒருவித படலம், அந்தப் பொருளில் படிப்படியாகப் படர்ந்து முத்தாக மாறுகிறது. முத்து ஒன்று உருவாக 6 ஆண்டுகள் பிடிக்கலாம். தூத்துக்குடி முத்துகள் உயர்ந்த தரம் வாய்ந்தவை. 2000-க்கும் மேற்பட்டவர்கள் முத்துக்குளித்தலில் ஈடுபடுகின்றனர்.

95. செயற்கை முத்துகள்

உயர்ரக முத்துக்கள் கிடைப்பது குறைந்ததால், செயற்கை முத்துக்களை உருவாக்கும் முனைப்பில் இந்திய அரசு ஈடுபட்டது. உலகிலேயே முதன்முதலில் 1896 ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டில் செயற்கை முத்துக்கள் உருவாக்கப்பட்டன. பளபளப்பான நுண் பொருளை சிப்பியின் உடலுக்குள் வைத்து, கடலுக்கடியில் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிடுகிறார்கள். 6 ஆண்டுகளில் இந்தச் சிப்பிக்குள் முத்து உருவாகிவிடும்.

96. தூத்துக்குடி செயற்கை முத்துகள்

இந்தியாவில் முதன்முறையாக தூத்துக்குடியில்தான் 1973-ம் ஆண்டில், செயற்கை முத்து தயாரிக்கப்பட்டது. இங்கே அமைந்துள்ள மத்திய கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சிக் கழகத்தில் செயற்கை முத்துக்கள் விளைவிப்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

97. சங்கு எடுத்தல்

முத்துக்குளித்தல் நடைபெறாத காலங்களில் சங்கு எடுத்தல் பணி நடைபெறுகிறது. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தத் தொழில் நடைபெறுகிறது. உயர்ரக சங்குகளை ஜாதிச் சங்கு என்கிறார்கள். அவ்வப்போது, வலம்புரிச் சங்குகளும் கிடைக்கும்.

98. மீன்பிடித்தல்

தமிழகத்தில் மீன்பிடிப்பு தொழிலில் தூத்துக்குடி மாவட்டம் சிறந்து விளங்குகிறது. தூத்துக்குடியில் தனியாக மீன்பிடி துறைமுகம் உள்ளது. மணப்பாடு, பெரியதாளை, திருச்செந்தூர், ஆலந்தளை, காயல்பட்டினம், புன்னக்காயல், பழைய காயல், பெரியதாளை, குலசேகரப்பட்டினம், இடிந்தகரை போன்ற பகுதிகளிலும் மீன்பிடி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

99. படகு கட்டுதல்

தூத்துக்குடியின் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் படகு கட்டும் தொழில் இப்போதும் நடைபெறுகிறது. சில்வர் ஓக் மரத்தில் ஆங்கிலேயர்கள் படகுகள் கட்டிவந்த காலத்தில், தூத்துக்குடியில் ஆசினி என அழைக்கப்படும் பலா மரத்தில் படகுகள் உருவாக்கியுள்ளனர். பலா மரங்கள் சில்வர் ஓக் மரத்தைவிட வலிமையானது; எடை குறைவானது. படகு கட்டும் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற மாந்தையர்கள் என்பவர்கள், தூத்துக்குடியில் அதிகம் வசித்திருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

100. உப்பு உற்பத்தி

ஆறுமுகநேரி, தூத்துக்குடி, வேம்பார், முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் 25,000 ஏக்கருக்கு மேல் உப்பு விளைவிக்கப்படுகிறது. நம் நாட்டிலேயே உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இரண்டாவது இடம். ஆண்டுக்கு 25 லட்சம் டன்னுக்கும் மேல் உற்பத்தியாகிறது.

101. விவசாயம்

இந்த மாவட்டத்தில் தாமிரபரணி ஓடும் பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிற்கள் செழித்து வளர்கின்றன. மற்ற பகுதிகளில் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மிளகாய் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கோவில்பட்டியில் பருத்தி விவசாயம் அதிகம். கம்பு, உளுந்து, சோளம், மிளகாய், மல்லி ஆகியவையும் இந்த மாவட்டத்தில் விளைகின்றன.

102. தூத்துக்குடியின் டெல்டா

திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன் விளை, தென்திருப்பேரை, மணத்தி, அம்மன்குளம், மூலக்கரை, கடயனோடை, குளத்துக்குடி பகுதிகளில் நெல் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

103. பனைத் தொழில்

உடன்குடி, நாசரேத், சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் பனைத் தொழில் அமோகமாக நடைபெறுகிறது. பனையிலிருந்து பதநீர் எடுக்கப்படுகிறது. பதநீரை காய்ச்சி பனைவெல்லம் உருவாக்கப்படுகிறது. பனைவெல்லம், நுங்கு போன்றவை உடலுக்கு நல்லது.

104. கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி மையம்

கோவில்பட்டியில் வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. முக்கியமாக கே2, கே5, கே6 ஆகிய பருத்தி ரகங்களை இந்த மையம் உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சிக்கு இந்த மையம் மிகவும் உதவிகரமாக உள்ளது.

105. வானொலி நிலையம்

தூத்துக்குடியில் அரசு வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. தவிர சூரியன் மற்றும் ஹலோ எஃப்.எம் போன்ற தனியார் வானொலி நிலையங்களும் செயல்படுகின்றன.

106. மருத்துவமனைகள்

தூத்துக்குடியில் அரசு பொது மருத்துவமனை, காசநோய் மையம், தொழுநோய் மருத்துவமனை போன்றவை இயங்குகின்றன. அமெரிக்கன் மருத்துவமனை, சிட்டி மருத்துவமனை, ஏ.வி.எம் மருத்துவமனை, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும் செயல்படுகின்றன.

கடற்கரை
கடற்கரை

கல்வி நிறுவனங்கள்

107. மருத்துவக் கல்லூரி

தூத்துக்குடி நகரில் 16.08.2000 அன்று அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது, தமிழகத்தின் தரமான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது.

108. மீன்வளக் கல்லூரி

மங்களூருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மீன் வளக்கல்லூரி இது. 1977 ஆம் ஆண்டு இயங்கத்தொடங்கிய இந்தக் கலூரியில் மீன் வளம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

109. கிள்ளிக்குளம் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி

வல்லநாடு மலையையொட்டி கிள்ளிக்குளத்தில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, ஏழு பிரிவுகளில் விவசாயப் பட்டப்படிப்புகளை வழங்கிவருகிறது.

110. பொறியியல் கல்லூரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி, பா.சிவந்தி ஆதித்தனார், வி.வி.சாண்டி, மதர் தெரசா, ஹோலி கிராஸ்,ஜெயராஜ் அன்னபாக்கியம், நேஷனல், ஜி.யு.போப், போன்ற பொறியியல் கல்லலூரிகள் உள்ளன. கோவில்பட்டியில் இயங்கிவரும் நேஷனல் பொறியியல் கல்லூரி பாரம்பர்யமானது. 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

111. கலைக் கல்லூரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குமரகுருபரர், பிஷப் கால்டுவெல், ஜி.யு.போப், வ.உ.சி., காமராஜ், ஆதித்தனார், ஏ.பி.சி மகாலஷ்மி பெண்கள் கல்லூரி, ஹோலிகிராஸ், புனித மேரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார், வாவூ வகிதா மகளிர் கல்லூரி, சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்டவை இயங்கிவருகின்றன.

112. புனித மேரி கல்லூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைமையான கல்லூரிகளில் புனித மேரி கல்லூரி முதன்மையானது. கத்தோலிக்க சபையினர் நிர்வகித்துவரும் இந்தக் கல்லூரி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

113. புகழ்மிக்க வ.உ.சி கல்லூரி

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பெயரில் 1951ஆம் ஆண்டு, ஏ.பி.சி.வீரபாகு என்பவரால் தொடங்கப்பட்டது இந்தக் கலைக் கல்லூரி.

114. ஆதித்தனார் கல்லூரி

கிராமங்கள் நிறைந்த திருச்செந்தூர் பகுதியில் 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தையின் பெயரில் இந்தக் கல்லூரியைத் தொடங்கினார். கிராமப்புற மாணவர்கள் பட்டம்பெற இந்தக் கல்லூரி வித்திட்டது. பா.சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரியும் இங்குள்ளது.

வ.உ.சிதம்பரம் பிறந்து இல்லம்
வ.உ.சிதம்பரம் பிறந்து இல்லம்

115. மர்காஷிஸ் கல்லூரி

நாசரேத் நகரில் கிறிஸ்தவ போதகர் கனோன் மர்காஷிஸ் நினைவாக இந்தப் புகழ்பெற்ற பள்ளி அமைந்துள்ளது. 1839ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி மிகப் பழைமையானது. 1967ஆம் ஆண்டு, பிள்ளயன்மனை என்ற இடத்தில் கனோன் மர்காஷிஸ் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

116, ஜி.யு.போப் கலைக் கல்லூரி

சாயர்புரம் நகரத்துக்கு வந்த கிறிஸ்தவ போதகர் ஜி.யு.போப் பெயரில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. 1962ஆம் ஆண்டு, இந்தக் கல்லூரி உருவானது. தூத்துக்குடி- நாசரேத் சி.எஸ்.ஐ.டயோசிஸன் இதை நிர்வகிக்கிறது.

117 லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில் கல்வியை அளிக்கும் எண்ணத்தில் 1984ஆம் ஆண்டு, கோவில்பட்டி நகரில் தொடங்கப்பட்டது. லட்சுமி அம்மாள் கல்வி மற்றும் அறக்கட்டளை இதை நிர்வகித்துவருகிறது.

118. தமிழகத்தின் பழைமையான பெண்கள் பள்ளி

தமிழ்நாட்டில் பழைமையான மகளிர் பள்ளி இது, இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. நாசரேத்தில் அமைந்துள்ள தூய யோவான் பள்ளிதான் அது. 1843ஆம் ஆண்டு, இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

119. மைய நூலகம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், டூவிபுரத்தில் இயங்கிவருகிறது. டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வு எழுதுவோரின் வசதிக்காக இங்கு இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுஅறிவு, வரலாற்று குறிப்பு, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நூல்கள் உள்ளன. தேர்வு எழுதுபவர்கள் குழுவாக விவாதித்து படிக்கும் வசதியும் உள்ளது.

பாரதியார் மணிமண்டபம்
பாரதியார் மணிமண்டபம்

120. தாது வளம்கொண்ட கடற்கரை

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் அரியவகை தாதுக்கள் நிறைந்த மண் உள்ளன. கார்னைட், இல்மைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட், தோரியம் ஆகிய கனிமங்கள் இந்தக் கடற்கரையில் நிறைந்துள்ளன. கடற்கரை மண்ணிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களும் இங்குள்ளன.

121. கார்னைட்

மாசு எதுவும் இல்லாத தரமான கனிமம் இது. கோமேதகம் வகையைச் சேர்ந்தது. உப்புக் காற்றால் சேதமடைந்த கப்பல்கள், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்த உதவுகிறது. கம்ப்யூட்டர் திரை, மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை இவற்றால் சுத்தப்படுத்தலாம். அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றையும் வெட்டுவதற்குப் பயன்படுகிறது.

122. இல்மனைட்

உலகில் அதிக தேவையுள்ள கனிமம். பாறை சிதைந்து வெள்ளம் மற்றும் மழைத் தண்ணீரில் கலந்து, கடலில் சேரும் பகுதியில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால் இல்மனைட் உருவாகிறது. பெயின்ட், பிளாஸ்டிக், தரம் உயர்ந்த காகிதம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், மருந்து, அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

123. சிர்கான்

18,000 சென்டிகிரேட் வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மையுடையது. உருக்கு மற்றும் வார்ப்பு தொழில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செராமிக் டைல்ஸ் உற்பத்திக்கும் உதவுகிறது. தொழிற்சாலைக் கருவிகளில் ஏற்படும் துருபிடிப்பதை நீக்கவும் பயன்படுகிறது. அணு உலை கட்டுமானத்துக்கும் உதவுகிறது. மருந்து, சமையல் பாத்திரங்கள் தயாரிப்புக்கும் கழிவறை சுத்தப்படுத்தும் பொருள்கள் தயாரிக்கவும் சிர்கான் உபயோகப்படுகிறது.

பாரதியார் பிறந்த வீடு
பாரதியார் பிறந்த வீடு

124. ரூட்டைல், மோனோசைட்

டைட்டானியத்தின் மூலப் பொருள். பெயின்ட், பிளாஸ்டிக், நகைகள் தயாரிப்பு, விண்வெளியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. தோரியத்தை உள்ளடக்கிய கனிமப் பொருள் மோனோசைட். அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

125. ஜிப்சம்

கோவில்பட்டி சுற்றுவட்டரப் பகுதிகளில் ஜிப்சம் ஏராளமாக கிடைக்கிறது. சிமென்ட் உற்பத்திக்கு ஜிப்சம் முக்கிய பொருள். சூலமங்கலம் என்ற இடத்தில் லித்தியம் என்ற வேதிப்பொருள் கிடைக்கிறது.

126. டைட்டானியம்

சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் பரவியுள்ள தேரிக்காடுகளில் டைட்டானியம் என்ற கனிமப் பொருள்கள் நிரம்பி உள்ளன. இதற்காக, மண் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. டைட்டானியம் என்றால் வலிமையானது என்று பொருள். இரும்பைவிட எடை குறைவானது. டைட்டானியத்தை ஆக்சிஜனுடன் சேர்த்து டைட்டானியம் ஆக்ஸைடு தயாரிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை உபகரணங்கள், விமானங்கள், விண்வெளி கலன்கள் கட்டுமானத்துக்கு உதவுகிறது. பற்பசை முதல் பல பொருள்களின் தயாரிப்புக்கு உபயோகமாக உள்ளது.

விளையாட்டு

127. கால்பந்து - காயல்பட்டினம், நாசரேத்

கால்பந்து விளையாட்டுக்கு தூத்துக்குடி மாவட்டம் பெயர்போனது. மாநில அளவில் தேசிய அளவில் பல்வேறு கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் கால்பந்து கழகம், நாசரேத் ரெட்ஸ் கால்பந்து கழகம், காயல்பட்டினம் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் போன்றவை பிரசித்திபெற்ற கால்பந்து அணிகள். இந்த மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை அகில இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம்.

128. ஏஞ்சலா லின்ஸி

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஏஞ்சலா லின்ஸி, நாசரேத் நகரைச் சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.72 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்தார்.

129. கைப்பந்து - முதலூர்

முதலூர் கைப்பந்து அணி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இங்குள்ள தூய மிகாவெல் பள்ளி, கைப்பந்து வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அணி, தமிழ்நாடு போலீஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.எப் கிளப்புகளில் முதலூரைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவில் விளையாடுகிறார்கள்.

அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையம்

130. மணத்தி கணேசன்

திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணத்தி என்ற சிறிய கிராமம், கபடி விளையாட்டுக்குப் பெயர்பெற்றது. இந்தக் கிராமத்திலிருந்து ஏராளமான கபடி வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்திய கபடி அணிக்காக விளையாடிய கணேசன், இந்த ஊரைச் சேர்ந்தவர். மெய்ஞானபுரமும் கபடி விளையாட்டுக்குப் புகழ்பெற்றது.

131. குப்புசாமி நாயுடு நினைவு ஹாக்கி தொடர்

கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் 1944ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1946ஆம் ஆண்டு மாநில அளவிலான முதல் ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. டாக்டர் துரைராஜ் என்பவர் இந்தப் பகுதியில் ஹாக்கி விளையாட்டு வளரத் தொடர்ந்து உதவினார். லக்ஷ்மி மில் உதவியுடன் 1960ஆம் ஆண்டு ஹாக்கி விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை குப்புசாமி நாயுடு நினைவு ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. தேசிய அளவிலான ஹாக்கி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

132. கோவில்பட்டியின் பயிற்சியாளர் தயான்சந்த்

1962ஆம் ஆண்டு, கோவில்பட்டியில் உருவான ஹாக்கி அணிக்கு, தயான்சந்த் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியாளர்கள் மாதையா, ஜார்ஜ் போன்றவர்கள் இந்தப் பகுதியில் ஹாக்கி விளையாட்டு வளர்ச்சிபெற உதவியாக இருந்தனர். மாநில தேசிய அளவிலான ஏராளமான ஹாக்கி வீரர்கள் கோவில்பட்டியிலிருந்து உருவாகியுள்ளனர்.

133. கிரிக்கெட்- தூத்துக்குடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், விளையாடிவரும்`டுயுடி பேட்ரியாட்ஸ்' அணி, தூத்துக்குடியைத் தலைமையிடமாகச் செயல்படுகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் தமிழக அளவில் ஜொலிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு, முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தூத்துக்குடி அணி கோப்பையை வென்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஆல்பர்ட் முரளிதரன் என்பவர் இந்த அணியின் உரிமையாளர்.

134. தூத்துக்குடி வந்த காந்தியடிகள்

சுதந்திரத்துக்காகப் போராடிய வீரம் செறிந்த தூத்துக்குடிக்கு, தேசத் தந்தை காந்தியடிகள் இரண்டு முறை வந்துள்ளார். முதன்முறை வந்தபோது வ.உ.சி சிறையில் இருந்தார். தன் பேச்சின்போது, வ.உ.சி.யின் போராட்டங்களை குறிப்பிட்டு பேசினார். 1927ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக தூத்துக்குடிக்கு வந்த காந்தியடிகள், தியாகி விஸ்வநாத தாஸின் வீரம் செறிந்த தேசப் பக்தி பாடல்களைக் கேட்டு ரசித்தார்.

தீப்பெட்டி தொழில்...
தீப்பெட்டி தொழில்...

135. எட்டப்ப ராஜா

எட்டயபுரத்தை ஆண்ட எட்டப்ப ராஜா, தமிழுக்குத் தொண்டாற்றியவர். இசை மும்மூர்த்திகளின் முத்துசாமி தீட்சிதருக்கு ஆதரவளித்தவர். பாரதியார், உமறுப்புலவர் போன்றவர்களையும் ஆதரித்துள்ளார். பிற்காலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுத்தது வரலாற்றுச் சோகமானது.

136. விளாத்திக்குளம் ஸ்வாமிகள்

இசையில் சிறந்து விளங்கிய நல்லப்பசாமி என்ற விளாத்திக்குளம் ஸ்வாமிகள் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்தான். காடல்குடி ஜமீந்தார் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தரம்பாள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் போன்ற கலைஞர்கள் இவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள்.

137. ஏ.பி.சி.வீரபாகு

தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ஏ.பி.சி.வீரபாகு. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். பின்னர், தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி, வ.உ.சி ஆசிரியர் பள்ளி, ஏ.பி.சி. மகாலக்ஷ்மி கல்லூரிகளை நிறுவி, கல்விச் சேவையில் ஈடுபட்டார்.

138. அ.மாதவையா

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முதல் மூவர் என்று அறியப்படுபவர்கள் வ.வே.சு ஐயர், அ.மாதவையா, பாரதி ஆகியோர். இவர்களில் மாதவையா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறுகதை எழுதுவதில் வல்லவர்.

139. கி.ராஜநாராயணன்

கரிசல் இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் `கோபல்லபுரத்து மக்கள்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. புகழ்பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமியும் இதே ஊரைச் சேர்ந்தவர்தான்.

140. நடிகர் சந்திரபாபு

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தூத்துக்குடியில் பிறந்தவர். அதேபோல பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர்.

சுற்றுலாத்தலங்கள்

141. வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம்

இந்தியாவில் முதல் விடுதலைப் போர் 1857ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னரே பல மன்னர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வந்தனர். அவர்களில் வீரன் அழகுமுத்துக் கோன் (1728-1757) முதன்மையானவர். பெத்தநாயக்கன் கோட்டை என்ற இடத்தில் இவருக்கும் ஆங்கிலேயருக்கும் போர் மூண்டது. வீரத்துடன் போரிட்ட அழகுமுத்துக்கோன் மற்றும் அவரின் தளபதிகள் பீரங்கி குண்டுக்குப் பலியாகினர். கோவில்பட்டியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனுக்கு தமிழக அரசு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபத்தை எழுப்பியுள்ளது.

மீனவர்கள்
மீனவர்கள்

142. வீழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

விஜய நகரப் பேரரசு காலத்தில் ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு குடியேறிய கட்டபொம்மனின் முன்னோர்கள், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைத்து பாளையக்காரர்களாக ஆட்சிசெய்தனர். ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாளையக்காரர்களிடத்தில் வரி வசூலித்துவந்தனர்.வீரபாண்டிய கட்டபொம்மன் வரி செலுத்த மறுத்தார். கட்டபொம்மனுடன் போரிட்டு ஆங்கிலேயப் படை தோற்றது. கலெக்டர் ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனை சமாதானம் பேசவருமாறு அழைத்தார். ராமநாதபுரத்தில் நடந்த சந்திப்பின்போது, கட்டபொம்மனை கைதுசெய்ய, ஜாக்ஸன் துரை முயன்று தோல்வியடைந்தார். 1799ஆம் ஆண்டு, ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவு பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.

143. கம்பீரமாக எழுந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

1974ஆம் ஆண்டு, தமிழக அரசு பழைய கோட்டை போலவே புதியதாக புனரமைத்து கட்டியது. இந்தச் சிறிய ஊர் தூத்துக்குடியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோட்டைக்குள் கட்டபொம்மனின் தெய்வமான ஸ்ரீதேவி ஜக்கம்மாள் கோயிலும் அமைந்துள்ளது. கட்டபொம்மனின் பராக்கிரமங்களை விளக்கும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. கட்டபொம்மனுடன் போரிட்டு இறந்த ஆங்கிலேய வீரர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகளையும் கோட்டையின் அருகே காணமுடியும். தூத்துக்குடியிலிருந்து பேருந்துகள் உள்ளன. தினமும் காலை 8 மணி முதல் மதியம்1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோட்டையை மக்கள் பார்வையிடலாம். சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அருகே ஓய்வு விடுதியும் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில், கட்டபொம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.

144. உமறுப்புலவர் மணிமண்டபம்

உமறுப்புலவர் எட்டயபுர மன்னரின் ஆதரவில் வாழ்ந்தார். இங்கு, உமறுப்புலவர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

145. முத்துசாமி தீட்சிதர் மணிமண்டபம்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், தன் இறுதி நாள்களை எட்டயபுர மன்னர் ஆதரவில் கழித்து இங்கேயே மறைந்தார். இதனால், முத்துசாமி தீட்சிதருக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. முத்துசாமி தீட்சிதரின் சமாதி இங்குள்ளது.

146. சிலை நிறுவிய நடிகர் சிவாஜி

வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். கோவில்பட்டி- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரில், கட்டபொம்மனின் வீரத்தை பறைசாற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இதற்கான செலவுகளை வீரபாண்டிய கட்டபொம்மனாக திரைப்படத்தில் நடித்த சிவாஜி கணேசன் செய்தார்.

147. பாரதிக்கு மணிமண்டபம் அமைத்த கல்கி

தூத்துக்குடியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் சுப்பிரமணிய பாரதி பிறந்த எட்டயபுரம் உள்ளது. இங்கே, பாரதிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் கல்கி இந்தப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பாரதிக்கு மணிமண்டபம் அமைக்க உலகம் முழுக்க வசித்த தமிழர்கள் நிதியளித்தனர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

148. கப்பலோட்டிய தமிழன் நினைவு இல்லம்

ஓட்டப்பிடாரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி வாழ்ந்த இல்லம் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது. இங்குள்ள நூலகத்தில் வ.உ.சி-யின் வாழ்க்கை வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக்கி, `கப்பலோட்டியத் தமிழன்' என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகியுள்ளது.

149. வாஞ்சி மணியாச்சி

சுதேசி கப்பல் நிறுவனம் நடத்தியதற்காக வ.உ,சி., சுப்பிரமணிய சிவா இருவரையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை, சிறையில் அடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரையை, மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். வாஞ்சிநாதன் நினைவாக, மணியாச்சி ரயில் நிலையம் `வாஞ்சி மணியாச்சி' என்று அழைக்கப்படுகிறது.

150. விளாத்திக்குளம் சாமிகள் நினைவிடம்

இசை மேதை ஸ்ரீநல்லப்ப ஸ்வாமிகளுக்கு (1889-1960). இங்கு இவரது சமாதி உள்ளது. கர்னாடக இசையை எந்த குருவிடமும் பயிலாமல், சங்கீத கச்சேரிகளைக் கேட்டு, கிரகித்து கற்றுக்கொண்டார். தன் அற்புத நினைவாற்றலால், பக்தி ரசம் சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றலைக் கொண்டவர். ராக ஆலாபனையில் பேரும் புகழும் பெற்றார்.

151. காயல்பட்டினம் கடற்கரை

காயல்பட்டினத்தின் அழகிய கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு, இந்தக் காயல்பட்டினம் கடற்கரைதான் முக்கிய பொழுதுபோக்கு தளமாக உள்ளது.

152. மணப்பாடு அலைச்சறுக்கு விளையாட்டு

மணப்பாடு அழகிய கடற்கரை கிராமம். கடல் ஒரு பகுதியில் ஆர்ப்பரிக்கும்; மற்றொரு பகுதி அமைதியாக இருக்கும். எனவே, நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற இடம். தமிழக, தேசிய அளவில் கடல் சாகச விளையாட்டுகள் இங்கே நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கோவா என்று அழைக்கப்படும் இங்கே, ஐரோப்பிய கட்டடக் கலையில் கட்டப்பட்ட அழகிய ஆலயங்கள் அமைந்துள்ளன.

153. வல்லநாடு வெளிமான் சரணாலயம்

சுமார் 16.41 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுக்குப் புதர்க்காடுகள் வல்லநாட்டு மலையடிவாரத்தில் உள்ளன. வெளிமான்கள் நிறைந்த பாதுகாக்கப்பட்டப் பகுதி. வெளிமான்கள் அதிவேகத்தில் ஓடும் ஆற்றல் கொண்டவை. புள்ளிமான்களும் ஏராளமாக இங்கே வசிக்கின்றன. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை ஸ்ரீவகுண்டம் தாலுகாவில், இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்களும் காட்டுப்பூனை போன்ற சிறிய விலங்குகளும், ஊர்வனங்களும் இங்கே வசிக்கின்றன.

2000 ஆண்டு பழைமையான வன்னி மரம்
2000 ஆண்டு பழைமையான வன்னி மரம்

154. அலையாத்திக் காடுகள்

ஆற்று நீர் கடலில் சேருமிடத்தில் வளரும் அலையாத்திக் காடுகள், தாமிரபரணி கடலில் கலக்கும் புன்னைக் காயல் பகுதியில் உள்ளது. சுமார் 14 ஹெக்டர் பரப்பளவில் இந்தக் காடுகள் அமைந்துள்ளன.

155. வைப்பாறு

தேனி மாவட்டத்தில் தோன்றி, விருதுநகர் மாவட்டம் வழியாக வரும் வைப்பாறு, விளாத்திக்குளம் அருகே கடலில் கலக்கிறது. மழைக் காலத்தில் மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீர் வரும்.

156. தூத்துக்குடி விமான நிலையம்

தூத்துக்குடியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் வாகைகுளம் என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு அடுத்தபடியாக பரபரப்பான விமான நிலையம். சென்னையிலிருந்து இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் 600 பயணிகளை இந்த விமான நிலையம் கையாள்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வாகைகுளம் விமான நிலையம் வரப்பிரசாதம். இங்கே 75 பயணிகள் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இறங்கமுடியும். எனவே, இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சரக்குகளை கையாளவும் தனி முனையம் ஏற்படுத்தப்படவுள்ளது.

தொழில்கள்

157. சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி

தூத்துக்குடியில் தொழில்முனைவோர் வரிசையில் வ.உ.சிதம்பரனாரே முதன்மையானவர். இவரின், சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிதான், தூத்துக்குடியில் அமைந்த பெரும் தொழிற்சாலைகளுக்கு முன்னோடி. பீச் ரோட்டில் 4ஆம் எண் கட்டத்தில், வ.உ.சிதம்பரனாரின் கப்பல் நிறுவனம் இயங்கியது. எஸ்.எஸ்.கலேயோ, எஸ்.எஸ்.லாவோ என இரண்டு கப்பல்களை தூத்துக்குடியிலிருந்து கொழும்பு நகருக்கு இயக்கினார் சிதம்பரனார்.

158. வ.உ.சி துறைமுகம்

பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில், கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகரம் துறைமுகமாக இருந்தது. 1974ஆம் ஆண்டு, நவீனத் தொழில்நுட்பங்களுடன் துறைமுகம் அமைக்கப்பட்டு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவின் 12 மிகப்பெரிய துறைமுகங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுக்கு 40 மில்லியன் டன் சரக்குகளை கையாள்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம். 1996ஆம் ஆண்டு, இந்தத் துறைமுகத்துக்கு ஐ.எஸ்.ஓ 9002 தர சான்றிதழ் கிடைத்தது. இந்த நகரில் ஏராளமான கப்பல் ஏஜென்ஸிகள் உள்ளன.

159. ஸ்பிக் தொழிற்சாலை

தூத்துக்குடியில் ஸ்பிக் உரத் தொழிற்சாலை 1975ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. சதர்ன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் என்பது பெயரின் விரிவாக்கம். ஸ்பிக் தொழிற்சாலை வருகையால், இங்கே வேலை வாய்ப்பு பெருகியது. ஸ்பிக் நகர் என்ற பெயரில் தனி குடியிருப்பும் உருவானது.

160. டாக் நிறுவனம்

தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் நிறுவனம், அமோனியம் குளோரைடு என்ற வேதிபொருளை உற்பத்தி செய்துவருகிறது.

161. அனல் மின் நிலையம்

தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் அனல் மின் நிலையத்தின் பணி. 400 ஏக்கர் பரப்பளவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்கள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 1,050 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

162. மதுரா கோட்ஸ் மில்

தூத்துக்குடியில் அமைந்த பழைமையான நூற்பாலைகளில், மதுரா கோட்சும் ஒன்று. பீச் ரோட்டில் இயங்கிவரும் இந்த ஆலையில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். கோரா மில்லும் இங்குள்ளது.

163. மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை

தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் நடைபெறுவதால், மீன் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில், புதூர்பாண்டியபுரத்தில் உள்ள நிலா கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகளுக்கு மீன் உணவுகளை ஏற்றுமதி செய்கிறது.

164. ரமேஷ் ஃப்ளவர்ஸ்

ரமேஷ் ஃப்ளவர்ஸ் நிறுவனம் 1982ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. வீட்டு அலங்காரப் பொருள்கள் மற்றும் வாசனைப் பொருள்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. 5 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது 2,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 32 நாடுகளுக்கு இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன.

165. தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்

தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகநேரி செல்லும் சாலையில், சாகுபுரம் என்ற இடத்தில் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) நிறுவனம் அமைந்துள்ளது. சோடா உள்ளிட்ட பல்வேறு ரசாயனப் பொருள்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

166. உடன்குடி அனல் மின் நிலையம்

உடன்குடியில் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன.

167. திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை

திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை, நாசரேத்தில் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த மில் மூடப்பட்டது. ஏராளமானோர் வேலை இழந்தனர்.

168. தீப்பெட்டி தொழிற்சாலை

கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்கிவருகின்றன. லாயல் மற்றும் லக்ஷ்மி நூற்பாலைகள் இயங்கிவருகின்றன.

169. காற்றாலைகள்

தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில்தான் அதிகப்படியான காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை 558 காற்றாலைகள் மூலம், 552.78 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. காற்றாலை மின் உற்பத்தியை 1,300 மெகாவாட்டாக அதிகரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எப்போதும்வென்றான், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் காற்றாலைகள் உள்ளன.

170. அனல் மின் உற்பத்தி

தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தின் மின் தேவையைப் பெருமளவில் பூர்த்திசெய்கிறது.

தமிழ் வளர்த்த வெளிநாட்டவர்கள்

171. கால்டுவெல்

திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. கால்டுவெல் அயர்லாந்தில் பிறந்தார். 24 வயதில் சென்னைக்கு வந்தார். திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தங்கியிருந்து, தமிழுக்குச் சேவை புரிந்தார். ஆங்கில மொழியில் இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மிகச் சிறந்த நூல். இடையன்குடியில் இவருக்கு நினைவு இல்லம் உள்ளது.

172. வீரமா முனிவர்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவரின் இயற்பெயர், கான்ஸ்டைன்டைன் ஜோசப் பெஸ்கி. தமிழ்ப் பற்றினால் வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டார். திருக்குறள், தேவாரம், திருப்புகழ், ஆத்திச்சூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்தவர். பரமார்த்தக் குரு கதையை எழுதியவர். இவர், சிறிது காலம் கயத்தாறில் தங்கியிருந்தார்.

173. ஜி.யு.போப்

கனடாவைச் சேர்ந்த ஜி.யு.போப், தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் வாழ்ந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவாகக் கற்று, 40 ஆண்டுக்காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

ஆளுமைகள்

174. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன்

தினத்தந்தி செய்தித்தாளை ஆரம்பித்த சி.பா.ஆதித்தனார், காயாமொழி என்ற ஊரில் பிறந்தவர். இவர், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இவரின் மூத்த மகன் பா.ராமச்சந்திரன், பத்திரிகை அதிபர்.இரண்டாவது மகனான பா.சிவந்தி ஆதித்தன், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.

175. கே.பி.கந்தசாமி

தினகரன் நாளிதழைத் தொடங்கிய கே.பி.கந்தசாமி தண்டுப்பத்து ஊரைச் சேர்ந்தவர். இவர் தமிழகத்தின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

176. கன்னடப் பத்திரிகையை உருவாக்கிய தமிழர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் பா.சு.மணி. இவர், பெங்களூருவில் `தினச்சுடர்' என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையையும் `சஞ்சேவாணி' என்ற கன்னட மாலை நாளிதழையும் நிறுவியவர். பெங்களூருவின் முதல் தமிழ்ப் பத்திரிகை, `தினச்சுடர்' என்பது குறிப்பிடத்தக்கது.

177. ஷிவ் நாடார்

ஹெச்.சி.எல் நிறுவனத்தை நிறுவிய சிவ நாடார் என்கிற ஷிவ் நாடார், மூலைபொழி கிராமத்தைச் சேர்ந்தவர். தன் அறக்கட்டளை வழியாகப் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

178. சரவண பவன் ராஜகோபால்

ஹோட்டல் சரவண பவனை தொடங்கிய ராஜாகோபால், புன்னை நகரில் பிறந்தவர். பல்வேறு நாடுகளில் சரவணபவன் ஹோட்டல் கிளைகள் உள்ளன.

179. சரவணா ஸ்டோர்ஸ் சகோதரர்கள்

சரவணா ஸ்டோர்ஸை நிறுவிய செல்வரத்தினம், இங்குள்ள பணிக்க நாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர். தன் சகோதரர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோருடன் இணைந்து, சரவணா ஸ்டோர்ந்த் தொடங்கினார்.

180. ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக்

ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர். 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆச்சி மசாலா நிறுவனம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருள்களை கொள்முதல் செய்து வியாபாரத்தைப் பெருக்கியது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு ஆச்சி மசாலா அனுப்பப்படுகிறது.

181. ரமணி சந்திரன்

ரமணி சந்திரன் தமிழின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். இவர், காயாமொழியைச் சேர்ந்தவர். தமிழின் முன்னணி பத்திரிகைகளில் பலவற்றில் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. பெண்வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் எழுத்தாளர்.

182. முத்தாலங்குறிச்சி காமராசு

முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாள்களாக எழுதிவருகிறார். அவருக்கு செய்துங்கநல்லூர் நூலகத்தின் சார்பில், `அகழாய்வு நாயகன்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #13 - தூத்துக்குடி - இன்ஃபோ புக்

183. தூத்துக்குடி பொழுதுபோக்கு இடங்கள்

ரோஸ் பூங்கா, துறைமுக கடற்கரை, முத்து நகர் கடற்கரை, நேரு பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, கக்கன் பூங்கா, முயல் தீவு ஆகியவை உள்ளன.

184. முயல் தீவு

மன்னார் வளைகுடாவில் 21 தீவுகள் உள்ளன. இவை அனைத்துமே பாதுகாக்கப்பட்டவை. மீனவர்கள் தங்கள் வலையை உலர்த்த இந்தத் தீவுகளில் ஒதுங்குகின்றனர். அதில், முயல் தீவு முதன்மையானது.

தூத்துக்குடி அருகே அமைந்துள்ள முயல் தீவு மிகவும் சிறியது. முயல்கள் அதிகம் வசித்ததால் இந்தப் பெயர். பாண்டியன் தீவு, கோபுரத் தீவு என்ற பெயர்களும் உண்டு. தூத்துக்குடியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் முயல் தீவு அமைந்துள்ளது. துறைமுக பொறுப்புக்கழக கட்டுப்பாட்டில் இருந்தாலும், மக்கள் செல்வதற்கு தடையில்லை.

185. லைட் ஹவுஸ்

கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடற்கரைப் பகுதி, கார்மனத்துறை என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போதும் முயல் தீவில்தான் லைட் ஹவுஸ் உள்ளது. இந்த லைட் ஹவுஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பும் இங்கே அமைந்துள்ளது.

186. மீன்பிடித் தொழில்

முயல் தீவில் 150 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்தன. சிறிய குடிசைகள் அமைத்து கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரிய துறைமுகம் அமைக்கப்பட்டபோது, இங்கிருந்த மீனவர்கள் வெளியேற்றப்பட்டு, திரேஸ்புரம் அருகேயுள்ள விவேகானந்தர் நகரில் குடியேற்றப்பட்டனர். சீசன் காலங்களில் இப்போதும் முயல் தீவு சென்று கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். இங்கே கிடைக்கும் மீன்கள் மிகுந்த சுவையாக இருக்கும்.

187. திருவிழாக்கள்

முயல் தீவில் உள்ள கோபுரத்து முனியசாமி கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இங்கே தங்கி கிடாவெட்டு நடத்தி நேர்த்திக்கடன் செய்கிறார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் முயல் தீவில் உற்சாகம் களை கட்டும். கிறிஸ்தவ மக்கள் இங்குள்ள சிலுவையை வணங்கி அசனம் வழங்குகின்றனர்.

கொற்கையின் சிறப்புகள்

188. கொற்கை எங்கே இருக்கிறது?

பழம் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை, ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்துக்கு மூன்று கிலோமீட்டர் கிழக்கிலும், உமரிக்காடு கிராமத்துக்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது. நீர்வளம் மிகுந்த சிற்றூராக உள்ளது. நெல், வாழை, வெற்றிலை பயிர்கள் செழித்து வளர்கின்றன.

189. பாண்டியன் வழிபட்ட கண்ணகி கோயில்

பொற்கை பாண்டியன் வழிபட்ட கண்ணகி கோயில் இப்போது, வெற்றிவேல் அம்மன் என்று அழைக்கப்படுகிறது. மதில்சுவரில் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும், மீன் சின்னம் பொறித்த தூண்களும் வரலாற்று சாட்சியாக உள்ளன.

190. 2000 ஆண்டு பழைமையான வன்னி மரம்

கொற்கையில் 2000 ஆண்டுகள் பழைமையான வன்னி மரம் உள்ளது. மருத்துவக் குணங்கள் நிறைந்த வன்னி மரம், சிவாலயங்களில் காணப்படும். கொற்கையின் தொன்மைக்கும் பழம்பெருமைக்கும் அடையாளமாக இந்த வன்னி மரம் பார்க்கப்படுகிறது.

191. அகஸ்டர் சீஸர் கல்வெட்டில் கொற்கை

ரோமானியர்கள் வியாபாரம் செய்த பகுதிகள் குறித்து ரோமானியப் பேரரசர் அகஸ்டர் சீசர் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார். அந்த கல்வெட்டு, தற்போது ரோம் நகர அருங்காட்சியத்தில் உள்ளது. அதில், கொல்கை என்ற பெயரில் கொற்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோமானியர்கள் தாங்கள் வியாபாரம் செய்த பகுதிகளிலேயே நாணயங்களை அச்சடித்துள்ளனர். கொற்கையில் உள்ள பாண்டிய மன்னர்களின் அச்சகச் சாலையில் அனுமதி பெற்று, ரோமானியப் பேரரசின் நாணயங்களை அச்சடித்தற்கான சான்றுகள் உள்ளன.

192. கொற்கையில் தாமிரபரணி

கி.பி.130 வரை கொற்கை பாண்டியர்களின் தலைநகராக இருந்ததாக, தாலமி என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். தற்போது, தாமிரபரணி நதி கொற்கையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஓடுகிறது. தாலமி தன் குறிப்புகளில், கரியாய் என்றுதான் இங்கு வாழ்ந்த மக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். கரியாய் என்றால், கரையர்கள் (ஆற்றங்கரையில் வசிப்பவர்கள்) என்று அர்த்தம். இப்போதுள்ள நிலபரப்புக்கு 8 அடி ஆழத்தில், பழங்காலக் கொற்கை துறைமுகம் இருந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

193. கொற்கை அருங்காட்சியகம்

தமிழர்களின் பன்னாட்டு உறவு தொன்மையானது என்பதை உணர்த்துவது கொற்கை நகரம். எனவே, கொற்கையில் அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. தற்போது, இங்கிருந்த பண்டைய காலப்பொருள்கள், நெல்லை மற்றும் சென்னைக்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டுவிட்டது. கொற்கையில் அருங்காட்சியகம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

194. நாட்டுப்புறக் கலைகள்

வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், காணியான்கூத்து, களியலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், மேடை ஆடகம், மயிலாட்டம், தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புறப் பாட்டு உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்டத்தின் நாட்டுப்புறக் கலைகள்.

195. நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம்

நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருவதால், அவற்றைக் காப்பாற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 328 பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தூத்துக்குடியில் உள்ளனர்.

கட்டபொம்மன் கோட்டை
கட்டபொம்மன் கோட்டை

196. மாவட்ட அரசு இசைப் பள்ளி

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி, டூவிபுரத்தில் செயல்பட்டுவருகிறது. பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், நாதஸ்வரம், தவில், தேவாரம் பாடுதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

197. ராணுவ கிராமம்

தூத்துக்குடி மாவட்டம், மேலக்கூட்டுடன்காடு கிராமத்தில், சுமார் 1,500 வீடுகள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்துவருகின்றனர். ராணுவ கிராமம் என்ற செல்லப் பெயர் உண்டு.

198. விடைத்தேரை மரம்

திருச்செந்தூர் பகுதியில் விடைத்தேரை என்ற அரியவகை மரங்கள் காணப்படுகின்றன. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த மரங்கள் கறையானால் அரிக்கமுடியாதவை.

199. தருவை மைதானம்

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில், ஜார்ஜ் சாலையில் உள்ள தருவை மைதானத்தில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்துக்கான தளங்கள் உள்ளன. தவிர, ஸ்குவாஷ் பயிற்சி அரங்கம், கபடி, கைப்பந்து களம், தடகளம் பயிற்சி பெறும் தளம், நீச்சல்குளம் ஆகியவை உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த மைதானத்தை நிர்வகித்து வருகிறது. இங்கே, மின்னொளி வாக்கிங் டிராக் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். இரண்டு உள்விளையாட்டு அரங்கங்களும் அமைந்துள்ளன.

200. துடிசியா

தூத்துக்குடி சிறுகுறு தொழில் சங்கம் (துடிசியா), `மேக் இன் தூத்துக்குடி’ என்ற தலைப்பில், தொழிலதிபர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், புதிய தொழில்முனைவோருக்கான தொழில் வாய்ப்புகள், கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.

நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு