Published:Updated:

சிரிப்புடன் ஒரு செல்ஃபி!

நகரத்தின் முக்கிய சாலைகளில் அதுவும் ஒன்று. 80 அடி ரோடு என்பார்கள். காலையில் 8 மணிக்கு மேல் பரபரப்பாகிவிடும் அந்தச் சாலை இரவு வரை தனது பரபரப்பை தக்கவைத்திருக்கும்.

பிரீமியம் ஸ்டோரி

து கொஞ்சம் பரபரப்பு அடங்கிய நண்பகலை நெருங்கும் 11 மணி. அரசப்பன் தன் மனைவி அஞ்சுகத்துடன் ஸ்கூட்டியில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தார்.

அரசப்பன் அரிசி வியாபாரம் செய்துவருபவர். வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர். புன்னகைதான் அவருடைய டிரேட் மார்க். ஒரே மகன் இனியவன், பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கிறான். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் மாமா வாங்கிக்கொடுத்துவிட்ட ‘செல்'லும் கையுமாக காணப்படுவான்.

அது அரசப்பனுக்கு எரிச்சலை அளிக்கும். ‘‘இந்த உலகத்தைவிட்டு விலகிச்செல்கிறாய்’’ என்பார். ‘‘இல்லைப்பா... உபயோகமாத்தான் பார்க்கிறேன்’’ என்பான் இனியவன். ‘‘இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை’’ என்று விலகிவிடுவார்.

சிரிப்புடன் ஒரு செல்ஃபி!

இப்போது ஒரு விசேஷத்துக்காகச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். சீரான வேகத்தில்தான் ஓட்டிக்கொண்டிருந்தார். வேகத்தடை ஒன்றில் டூவீலர் ஏறி இறங்கியபோது, அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. கண் இமைக்கும் பொழுதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அஞ்சுகம் கீழே விழுந்துவிட்டார்.

‘‘அஞ்சுகம்... என்ன ஆச்சு?’’ எனப் பதறி, ‘பிரேக்' போட்டு நிறுத்தினார். தார்ச்சாலையில் பேச்சற்று விழுந்து கிடந்தார் அஞ்சுகம். அந்தப் பக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தினார் அரசப்பன்.

‘‘பதறாதீங்க சார். அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. கீழே விழுந்த அதிர்ச்சியில்தான் மயக்கம் ஆகியிருப்பாங்க’’ என்று ஆறுதல் சொன்னார் ஆட்டோக்காரர்.

அருகேயிருந்த பல்நோக்கு மருத்துவமனை ஒன்றில், கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அரண்மனை போன்று பல அடுக்குகளில் உயர்ந்தோங்கி நின்றது அந்த மருத்துவமனை. செமி ஐ.சி.யூ.வில் ‘அட்மிட்' செய்யப்பட்டார் அஞ்சுகம். தலைமை மருத்துவர் வந்தார்.

‘‘டாக்டர், எப்படியாவது என் மனைவியைக் காப்பாற்றுங்க’’ என்று கண்ணீர் மல்கக் கெஞ்சினார் அரசப்பன்.

‘‘நிலைமை கொஞ்சம் சீரியஸாகத்தான் தெரியுது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துடுவோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுவோம். பணம் கட்டிடுங்க’’ என்றார் டாக்டர்.

அரசப்பனிடம் கைவசம் நான்காயிரம் ரூபாய்தான் இருந்தது. எனவே, தனது நண்பர் லியாகத் அலிக்கு செல்ஃபோன் மூலம் பேசினார். அவர் பத்தாவது நிமிடத்தில் வந்துவிட்டார்.

மதியம் ஒரு மணி. தலைமை மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு வேறு ஒரு சிறப்பு மருத்துவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பிறகு, அந்த ரிப்போர்ட்டை பேஷன்ட்டுக்குப் பின்னால் இருந்த ஷெல்ஃபில் வைத்துவிட்டு வெளியே வந்தார். அரசப்பனும் லியாகத் அலிகானும் டாக்டரைப் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் சென்றதும், அம்மா இருந்த அறைக்குள் நுழைந்தான் இனியவன். அரசப்பன்தான் தகவல் சொல்லி ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லியிருந்தார். இனியவன் வழக்கம்போல செல்போனுடன் வந்திருந்தான். அதற்காக அப்பாவிடம் பேச்சும் வாங்கினான். அம்மாவைப் பார்த்துவிட்டுத் தலைமை மருத்துவர் அறை நோக்கிச் சென்றான்.

‘‘மிஸ்டர் அரசப்பன், உங்க மனைவிக்குப் பின்மண்டையில பலமா அடிபட்டிருக்கு. உடனடியாக ஒரு ஆபரேஷன் பண்ணியாகணும். அதுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்’’ என்று டாக்டர் விளக்கிக்கொண்டிருந்தார்.

இனியவன் அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்தான். பேசிமுடித்து அரசப்பனும் நண்பரும் வெளியே வந்தனர்.

‘‘டேய் இனியா, என்னடா செய்யறே?’’

‘‘டாக்டர் நேம் போர்டை செல்லுல போட்டோ எடுத்துட்டிருக்கேன்’’ என்றான்.

‘‘இதெல்லாம் என்ன பழக்கம். இந்த நேரத்திலும் உன் விளையாட்டுப் புத்தி போகலியே’’ என்றார்.

இனியவன் ஏதோ சொல்ல நினைத்து அமைதியாக நின்றான்.

‘‘அரசப்பன், பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீங்க. நான் புரட்டித் தரேன். தங்கச்சி பொழைச்சு வந்தால் போதும்’’ என்று லியாகத் உணர்ச்சியுடன் சொன்னார்.

சிரிப்புடன் ஒரு செல்ஃபி!

‘‘மாமா, அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது. அம்மா ஆபரேஷன் இல்லாமலேயே நல்லாயிடுவாங்க’’ என்று இனியவன் இயல்பாகக் கூறினான்.

அப்போதும் அவன் கையிலிருந்த செல்போனைத் தடவிக்கொண்டுதான் இருந்தான்.

‘‘பார்த்தீங்களா இந்த நேரத்திலும் போன்லதான் விளையாடிட்டிருக்கான். பொறுப்பே இல்லை’’ என்று விரக்தியில் புலம்பினார் அரசப்பன்.

‘‘பொறுப்போடுதான் அப்பா பேசறேன். மாமா, முதல்ல அம்மாவை இந்த ஆஸ்பத்திரியிலேயிருந்து டிஸ்சார்ஜ் பண்றதுக்கான வழியைப் பாருங்க’’ என்றான்.

‘‘இனியா, இது விளையாட்டு விஷயமில்லே...’’

‘‘நான் விளையாடலை மாமா. அம்மாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப்ல மதுரையில் இருக்கும் மாமாவுக்கு அனுப்பினேன். அவர் நண்பர் மூலமாக ஒரு பெரிய டாக்டருக்கு அனுப்பியிருக்கார். ஸ்கேன் பற்றி கேட்டிருக்கார்...’’

‘‘அடடா.. அந்த டாக்டர் என்ன சொன்னாராம்?’’

‘‘பேஷன்ட்டுக்கு அதிர்ச்சியில்தான் பேச்சு வரலை. கண் திறக்கலை. மற்றபடி தலையில லேசான அடிதான் இருக்கும். அந்த ஆஸ்பத்திரியில பணத்துக்காக ஏமாத்தறாங்க. அவங்களை மதுரைக்கு அழைச்சுட்டு வாங்க. சுலபமா சரிபண்ணிடலாம்னு டாக்டர் சொன்னதா மெசேஜ் வந்திருக்கு’’ என்றான் இனியவன்.

அரசப்பன் உடனே அஞ்சுகத்தின் அண்ணனைத் தொடர்புகொண்டு பேசினார். உண்மைதான். தான்கூட பதற்றத்தில் யாரிடமும் பேசாமல் இருந்துவிட்டபோது, இனியவன் எவ்வளவு புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறான் என்று நினைத்தார்.

பின்னர், ‘எங்களால அவ்வளவு பணம் கட்டி வைத்தியம் பார்க்க முடியாது’ என்று சொல்லிவிட்டு, அந்த மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார். ஆம்புலன்ஸிலேயே மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே இருபதாயிரம் ரூபாயிலேயே இனியவனின் அம்மா குணமடைந்தார்கள்.

மகனை அன்புடன் அணைத்துக்கொண்டார் அரசப்பன். மூவருமாகச் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு