கட்டுரைகள்
Published:Updated:

பிரிந்துசெல்கிறார்... ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பைடர் மேன்

சோனி தயாரிக்கும் ஸ்பைடர்மேன் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 5 சதவிகிதம் டிஸ்னி (மார்வெல்) நிறுவனத்துக்குத் தரவேண்டும்.

பிரிந்துசெல்கிறார் ஸ்பைடர்மேன்!

சிவப்பும் நீலமும் கலந்த சிலந்தியின் உடல் போன்ற உடை. முகத்தை மறைக்கும் விநோத முகமூடி. கைகளிலிருந்து சீறிப்பாயும் சிலந்தியின் வலை. நினைத்த உயரத்துக்கு அவனால் சுலபமாகப் போகவும் முடியும், கீழே விழாமல் தன்னைக் காத்துக்கொள்ளவும் முடியும். துரத்தும் ஆபத்தை முன்னமே உணரவும் முடியும். அதீத பலம், சமயோஜிதம், துல்லியம் என சாகசங்களின் மொத்தக் கலவை அவன். சுட்டீஸ்களின் ஃபேவரைட் சூப்பர்ஹீரோ... ஸ்பைடர்மேன் என்கிற பீட்டர் பார்க்கர்.

அவரைப் பற்றிச் சில நாள்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தி, உலக ரசிகர்களிடம் கவலையை உண்டாக்கியது. அது என்ன எனப் பார்க்கும் முன்னர்...

பிரிந்துசெல்கிறார்... ஸ்பைடர் மேன்

பிறந்தான் ஸ்பைடர்மேன்!

கார்ட்டூன் உலகில் நம்மை முதலில் ஈர்ப்பது ஸ்பைடர்மேனின் சாகசங்கள்தான். அப்படியென்ன ஸ்பெஷல்? பிரபலமான மற்ற மார்வெல் காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களின் பின்புலம் மிகவும் பலமாக இருக்கும். அயர்ன்மேன் ஒரு பெரும் பணக்காரர்; நினைத்ததை உடனே செய்யும் அளவுக்குச் சொத்து உண்டு. தோர் ஒரு வேற்றுகிரகவாசி. அசுர பலம் பெற்றிருப்பவர் ஹல்க். வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்தவர் கேப்டன் அமெரிக்கா. ஆனால், ஸ்பைடர்மேன் அப்படியில்லை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவனது குடும்பக் கதையும் நெகிழவைக்கும். இதுவே ஸ்பைடர்மேனுடன் நம்மை நெருக்கமாக்குகிறது.

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்திடம் இப்படியொரு சூப்பர்ஹீரோ கதையை ஸ்டேன் லீ சொன்னபோது, கிடைத்த பதில் என்ன தெரியுமா? “சிலந்தியை எல்லாம் குழந்தைகள் ரசிக்க மாட்டாங்க ஸ்டேன். வேற சொல்லுங்க” என்பதுதான். ஆனால், பின்னர் நடந்தவை உங்களுக்கே தெரியும். காமிக்ஸில் தொடங்கி வீடியோ கேம்ஸ் வரை அசரவைக்கிறான்.

வெள்ளித்திரையில் ஸ்பைடர்மேன்!

2002ஆம் வருடம்... ஸ்பைடர்மேன் வெள்ளித் திரையில் தன் வெற்றி முத்திரையைப் பதித்த வருடம். ‘ஈவில் டெட்’ என்கிற ஹாரர் தொடர் படங்களால் மிரட்டியவர் இயக்குநர் சேம் ரெய்மி. சோனி நிறுவனத்தின் கொலம்பியா பிக்சர்ஸுடன் இணைந்து, ஸ்பைடர்மேனை திரையில் உலாவவிட்டார்.

எதையும் சாதிக்க முடிந்த ஒரு சூப்பர்ஹீரோவாக மட்டுமே காண்பிக்காமல், குடும்பப் பிரச்னைகள், காதல் தோல்வி, நட்பு, பிரிவு எனச் சாதாரண மனிதனாகவும் உலாவவிட்டார். ஸ்பைடர்மேனின் சாகசங்களைப் பெரிதாக்காமல், பீட்டர் பார்க்கர் என்கிற இளைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியே சுழன்றது கேமரா. சேம் ரெய்மிக்கு நன்கு புரிந்திருந்தது. பீட்டர் பார்க்கரை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தாலே, ‘ஸ்பைடர்மேன்’ எனும் சூப்பர்ஹீரோ வெர்ஷனை வரவேற்பார்கள் என்று. படம் வெளியானதும் அது நடந்தது. ஸ்பைடர்மேனின் மிகப்பெரிய வெற்றிக்கு சேம் ரெய்மியின் இந்த மேஜிக் ஃபார்முலா முக்கிய காரணம். மேலும் இரண்டு பாகங்கள் வெளியாகி சுபம் போடப்பட்டது.

பிரிந்துசெல்கிறார்... ஸ்பைடர் மேன்

பிறகு 2012-ம் வருடம், ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ என மீண்டும் ஸ்பைடர்மேனின் சாகசங்களைத் தூசி தட்டியது சோனி. இரண்டு பாகங்கள் வந்த இந்தப் படத்தொடர், முந்தைய ‘ஸ்பைடர்மேன்’ படங்களைப் போல பெரிய வெற்றியைப் பெறவில்லை.

சோனி... டிஸ்னி... ஸ்பைடர்மேன்!

இதில் கவனத்தில்கொள்ளவேண்டிய ஒரு முன்கதை இருக்கிறது. இன்றுமே ஸ்பைடர்மேனின் கதைகள் அனைத்தும் மார்வெல் காமிக்ஸின் கதைகள்தான். ஆனால், அதைப் படமாக்கும் உரிமை சோனி நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது. ஸ்பைடர்மேன் மட்டுமல்ல, அவன் கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே சோனியிடம்தான் காப்புரிமை இருக்கிறது. அதனால், மார்வெல் நிறுவனத்தைத் தன்வசம் வைத்திருக்கும் டிஸ்னி நிறுவனத்தின் தலையீடு கொஞ்சமும் இல்லாமல் ‘வெணம்’ மற்றும் ‘Spider-Man: Into the Spider-Verse’ போன்ற படங்களை சோனி நிறுவனத்தால் எடுக்கமுடிகிறது.

ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் எப்போதுமே தங்க முட்டையிடும் வாத்து. அதைச் சரியாகப் பயன்படுத்தினால், பல மில்லியன்களைத் திரையில் ஈட்டலாம். இதைப் புரிந்துகொண்ட டிஸ்னி நிறுவனம், சோனியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன்படி, டிஸ்னியிடம் இருக்கும் அவெஞ்சர் கதாபாத்திரங்களை சோனியின் ஸ்பைடர்மேன் படங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, தோர் போன்ற ‘அவெஞ்சர்ஸ்’ உலாவும் உலகில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை டிஸ்னி பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரிந்துசெல்கிறார்... ஸ்பைடர் மேன்

இதனால்தான், ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ போன்ற படங்களில் ஸ்பைடர்மேன் சாகசங்கள் புரிந்தான். இன்னும் இளமையான ஸ்பைடர்மேனை காட்டியிருந்தார்கள். சோனி நிறுவனமும் அதே ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை வைத்து, ‘ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்’, ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய தனிப்படங்ளை எடுத்தன. அவற்றில், ‘அயர்ன்மேன்’ போன்ற அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களும் இடம்பெற்றன. ‘அவெஞ்சர்ஸ்’ கதையின் தொடர்ச்சியாகவே ‘ஸ்பைடர்மேன்’ படங்களின் கதைகளும் அமைந்தன. இப்போது அதில்தான் பிரச்னையே!

பிரிந்துசெல்லும் ஸ்பைடர்மேன்!

இப்போதுள்ள ஒப்பந்தத்தின்படி, சோனி தயாரிக்கும் ஸ்பைடர்மேன் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 5 சதவிகிதம் டிஸ்னி (மார்வெல்) நிறுவனத்துக்குத் தரவேண்டும். இந்த ஒப்பந்த விதியை மாற்றி, தடாலடியாக 50 சதவிகிதமாக டிஸ்னி நிறுவனம் கேட்டதாம். அதாவது, சோனியுடன் இணைந்து ஒவ்வொரு ஸ்பைடர்மேன் படத்துக்கும் 50 சதவிகிதம் தயாரிப்பில் டிஸ்னி உதவும். அதற்கு ஈடாக மொத்த வசூலில் 50 சதவிகிதம் சோனி தரவேண்டும் எனக் கேட்டிருக்கிறது டிஸ்னி. இதற்கு சோனி உடன்படவில்லை. தன்னிடம் காப்புரிமை உள்ள கதைக்கு எதற்காக டிஸ்னிக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என்கிறது சோனி. அது மட்டுமல்ல, சோனி என்ற பெரிய நிறுவனம் முழுக்க முழுக்கத் தன்னுடைய பணத்தில் மட்டுமே பல பெரிய பட்ஜெட் ஸ்பைடர்மேன் படங்களைத் தயாரிக்க முடியும். அப்படியிருக்க, எதற்காக டிஸ்னியின் உதவி எனவும் நினைக்கிறது.

சரி, இதனால் என்ன பிரச்னை? சோனியும் ரிஸ்னியும் பிரிந்துவிட்டால், இனிமேல் ஸ்பைடர்மேன் தொடர்பான காட்சிகள் அவெஞ்சர்ஸ் படங்களில் இருக்காது. சோனி தயாரிக்கும் புதிய ஸ்பைடர்மேன் படங்களில் அவெஞ்சர்ஸ் குறித்த வசனங்களும் இடம்பெறாது. எனவே, இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்டு கேம் படங்களில் கலக்கிய ஸ்பைடர்மேன், இனிமேல் தனியாகவே வருவார். இதனால், அடுத்த அயர்ன்மேனாக ஸ்பைடர்மேன் இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

சோனியும் டிஸ்னியும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இப்படி நிகழாமல் தடுக்க வேண்டும். அதற்காகப் பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகத் தெரிகிறது.

நல்லது நடக்கட்டும்!