ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணியிலிருந்தே ஸ்ரீஹரிகோட்டாவில் மக்களின் கண்கள் வான் நோக்கி உயர ஆரம்பித்துவிட்டன. ‘சந்திராயன்-2’ விண்ணில் பறப்பதை பார்க்கப்போகும் உற்சாகம்.

கூடியிருந்த 7,500 பேர்களின் எதிர்பார்ப்புகள், கட்டுப்பாட்டு அறையில் பரபரப்புடன் இருந்த விஞ்ஞானிகள் என அனைவருக்கும் புன்னகை தீப்பிழம்பைக் கக்கியபடி மதியம் 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2.

ஜூலை 15-ம் தேதியே விண்ணைச் சந்தித்திருக்க வேண்டிய சந்திரயான்-2, தொழில்நுட்பக் கோளாறால் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. அன்றைக்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளோடு சேர்ந்து, மக்களுக்கும் ஏமாற்றம்தான். பிரச்னைகளைச் சரிசெய்து, ஜூலை 22ஆம் தேதி சாதித்துவிட்டது இஸ்ரோ.

விண்ணில் ஏவப்பட்டதும் ராக்கெட்டின் செயல்பாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு முழுவதும், கிரையோஜெனிக் இன்ஜின் மீதுதான் இருந்தது. ராக்கெட்டின் மூன்றாம் கட்டமாகச் செயல்படும் அதன் செயல்பாடுதான் மிகவும் முக்கியமானது. ‘பேலோடு’ எனப்படும் சந்திரயான்-2வின் ஒட்டுமொத்தக் கருவிகளையும் அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்த இரண்டு பக்கவாட்டு பூஸ்டர்கள் பிரிந்து விழுந்தன. அதன் பிறகு, கிரையோஜெனிக் இன்ஜின் செயல்படத் தொடங்கியது. விண்ணில் பாய்ந்து சரியாக 16 நிமிடங்கள் 14 நொடிகள் கழித்து, சந்திரயான்-2 விண்கலம் புவியின் நீள்வட்ட சுற்றுப் பாதைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதனையடுத்து சந்திரயான்-2வை ஏவும் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்ட தகவலில், “இந்தியாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள். சந்திரயான்-2 புவி சுற்றுவட்டப் பாதையில் 6,000 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்டிருக்கிறது. கடந்தமுறை ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னை 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. அடுத்த ஒன்றரை நாளில் அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவதற்குத் தயாரானது.

பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள் என அனைவரும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பங்களிப்பை அளித்ததால்தான் இது சாத்தியமானது. அதற்காக, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இன்றைய தினம் இஸ்ரோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒன்று. கிரையோஜெனிக் இன்ஜின் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தியது மற்றொன்று. அதன் காரணமாகத் தேவைப்பட்ட சுற்றுப்பாதை தூரத்தைவிடவும் 6,000 கிலோமீட்டர் அதிகமாகச் சந்திரயான்-2 செலுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான திட்டத்தின்படி சந்திரயான்-2வின் உயரத்தை விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்க முடிவுசெய்திருந்தார்கள். ஆனால், கிரையோஜெனிக் இன்ஜின் சிறப்பாகச் செயல்பட்டு, அந்த வேலையை மிச்சப்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக, சந்திரயான்-2 நிலவில் இறங்கப்போகும் கடைசி15 நிமிடங்கள் இந்தத் திட்டத்தில் மிகச்சவாலான தருணங்களில் ஒன்றாக இருக்கும்” என்றார்.

சந்திராயன் விண்ணில் பாய்ந்த அடுத்த 15 நிமிடங்களில், மக்கள் வானத்தைப் பார்த்தபடியே, மகிழ்ச்சியான முகத்துடன் கலையத் தொடங்கினர். சந்திரயான்-2வின் வெற்றி இன்னும் முழுமையடைந்துவிடவில்லை. அதன் வெற்றிப் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. திட்டமிட்டபடி செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தால்தான், நாம் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியும். அந்த தினத்தை நாம் மட்டுமல்ல, உலகமே எதிர்பாத்து காத்திருக்கிறது.

சந்திரயான் அதைச் சாத்தியப்படுத்தும்!