பொது அறிவு
Published:Updated:

ஃ 10

ஆயுத எழுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுத எழுத்து

ஃ என்பது தமிழின் ஆயுத எழுத்து. மன்னராட்சிக் காலத்தில் தமிழர்கள் பல வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் 10...

1. கேடயம்: போரிடும்போது எதிரிகளின் அம்பு, ஈட்டி, கத்தி போன்றவற்றின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்திய ஆயுதம். உலகம் முழுவதுமே கேடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர். கேடயங்களில் தட்டு போன்ற அளவு முதல் முழு ஆளையே மறைத்துக்கொள்வது வரை பல்வேறு அளவுகள் உண்டு.

2. கட்டாரி: H வடிவ கைப்பிடியுடன் இருக்கும் இதை, குத்துவாள் என்றும் சொல்வார்கள். சம்ஸ்கிருத வார்த்தையான ‘கட்டாரா’ என்ற சொல்லிலிருந்து கட்டாரி என்று மருவியது. எதிரையை மிக அருகிலிருந்து தாக்குவதற்குப் பயன்படுத்துவார்கள். இப்போது, வழிபாட்டுச் சடங்குகளில் இடம்பெறுகின்றன.

ஃ 10

3. வளரி: தொலைவில் ஓடும் எதிரியைத் தாக்கிப் பிடிக்கப் பயன்படுத்தும் ஆயுதம். இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகையைச் சேர்ந்தது. ஓடும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்டது.

4. புதை: கோட்டையைச் சுற்றியுள்ள நிலத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தியது உண்டு. அதாவது, கோட்டைக்கு முன்னால் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் புதைமணல். இதில், கால் வைத்தால் உள்ளே அமிழ்ந்து மூழ்கிவிடுவார்கள்.

5. சுருள் பட்டை : வளையக்கூடிய நீண்ட மெல்லிய உலோக ஆயுதம். இதைப் பயன்படுத்த வலிமை மட்டுமன்றி, உடலை வளைக்கும் சாமர்த்தியமும் முக்கியம். இல்லாவிட்டால், பயன்படுத்துபவர் மீதே காயம் ஏற்படுத்திவிடும். தற்போது, தற்காப்பு விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.

6. உடைவாள்: அனைவருக்கும் தெரிந்த நீண்ட கத்தியான இது முக்கியமான போர்க் கருவி. பெரும்பாலும், அனைத்து நாட்டிலுமே பயன்படுத்திய ஆயுதம். இன்று ராணுவ வீரர்கள், அரசாங்க நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில், மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஃ 10

7. தோமரம்: கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே முற்றுகையிட்டுள்ள எதிரியைத் தாக்கப் பயன்படுத்தும் நீளமான ஈட்டி.

8. கதாயுதம்: கதாயுதம் அல்லது கதை என்பது, முன்பாகம் தலைபோன்று உருண்டையாக இருக்கும். அதனுடன் நீளமான கைப்பிடி பகுதி இணைந்திருக்கும். அனுமன் போன்ற சில இந்து கடவுள்களின் கைகளில் இருக்கும் ஆயுதம்.

9. வேல்: பழந்தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஈட்டி போன்ற ஆயுதம். தமிழர் கடவுளான முருகனின் கையில் இருப்பது இதுதான்.

10. கற்பொறி: கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம். இன்றைய பீரங்கிகளின் முன்னோடி என்று சொல்லலாம். எதிரிகள் வந்தால் கல்லை வீசி எறிந்து காயப்படுத்தும்.