பொது அறிவு
Published:Updated:

அண்டம் 10

அண்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்டம்

நாம் கற்பனை செய்வதைவிடப் பல்லாயிரம் ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருப்பது அண்டம் என்கிற பால்வெளி. அதில், 10 ஆச்சர்யங்கள்...

1. காற்று மற்றும் நீர் இல்லாத காரணத்தால், நிலாவில் ஒரு தடம் 100 மில்லியன் வருடங்களுக்கு அப்படியே இருக்குமாம். எனவே, நீல் ஆம்ஸ்ட்ராங் பதித்த கால் தடம் அழியாச் சுவடாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அண்டம் 10

2. சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட பிற கோள்களின் மொத்த எடையும், சூரியனின் எடைக்குச் சமம். பூமியைவிடச் சூரியன் 330,000 மடங்கு அதிக எடை உடையது.

3. தொலைநோக்கி உதவியில்லாமல் கணிதச் சமன்பாடுகள் வழியாகவே சூரியக் குடும்பத்தின் ஒரு கோளைக் கண்டறிந்தனர். அதுதான், நெப்டியூன். இதை, யுரேனஸ் இருப்பிடத்தைத் தொடர்ந்து இன்னொரு கோள் இருக்கும் என்கிற அடிப்படையில் கண்டறிந்தனர்.

அண்டம் 10

4. பூமியைத் தவிர, சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களுக்கும் கடவுள்களின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. Earth எனும் பெயரானது, Ertha/erde எனும் ஜெர்மனி மற்றும் ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்டது. இதற்கு, ‘நிலம்’ என்று பொருள்.

5. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளைவிட, இரண்டாவதாக இருக்கும் வெள்ளியே மிக அதிக வெப்பம்கொண்டது. காரணம், புதனைவிட அதிக அடர்த்தியான சுற்றுப்புறம் வெள்ளியில் இருப்பதால், காரியம் உள்ளிட்ட உலோகங்களை உருக்கும் அளவுக்கு மிக அதிக வெப்பம் (468°C) வெள்ளியில் நிலவுகிறது.

6. விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் அழுதால், கண்ணீர் தரையில் விழாது. ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், அவர்களின் கண்ணீர் மிதந்தபடியே இருக்கும்.

7. விண்வெளியில் சத்தம் எதுவும் கேட்காது. ஏனென்றால், ஒலி அலைகள் பரவ விண்வெளியில் காற்றைப் போன்ற ஊடகம் கிடையாது. மிக அமைதியான சூழலை விண்வெளியில் உணரமுடியும்.

அண்டம் 10

8. சூரியக் குடும்பம், பால்வழி அண்டத்தின் மையத்தை மணிக்கு 8,20,000 கி.மீ வேகத்தில் சுற்றிவருகிறது. இவ்வளவு வேகமாகச் சுற்றினாலும் பால்வழி அண்டத்தை முழுமையாகச் சுற்றிவர 230 மில்லியன் வருடங்கள் ஆகின்றன.

அண்டம் 10

9. சர்வதேச விண்வெளி நிலையம், பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. இதுவரை 18 நாடுகளைச் சேர்ந்த 280 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

10. நாம் எரிபொருளாகப் பயன்படுத்தும் மீத்தேன், ஒரு துணைக்கோளில் பெருங்கடலாகக் காணப்படுகிறது. அதுதான் சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான, டைட்டன். பூமியைப் போலவே ஆறு, ஏரி, கடல் ஆகிய அனைத்தும் உடையது டைட்டன். பூமியில் தண்ணீர் என்பது டைட்டனில் மீத்தேன்.