பொது அறிவு
Published:Updated:

ஆக்கம் 10

ஸ்மார்ட் கண்டுபிடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் கண்டுபிடிப்பு

வாவ் என வியக்கவைக்கும் ஸ்மார்ட் கண்டுபிடிப்புகள் பல தினமும் வந்துகொண்டிருக்கின்றன. அப்படியான 10 ஸ்மார்ட் ஆக்கங்கள்...

1. பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்களது நாக்கில் இருக்கும் உணர்வுச் செல்களின் வழியே, பார்வைக்கான தகவல்களை மூளைக்கு அனுப்பும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BRAINPORT எனும் இந்தக் கருவி, மூளையின் வடிவமைப்பைப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.

2. பாக்டீரியாக்களை அழிக்கும் Cleanse Bot எனும் ரோபோ ஒன்று தொழில்நுட்ப உலகில் புது வரவாக இணைந்துள்ளது. உங்கள் படுக்கையில் நத்தையாக ஊர்ந்துசென்று சுத்தம் செய்யும் இந்த ரோபோ, காற்றில் உள்ள தூசுக்களையும் சுத்தப்படுத்தும் என்கிறார்கள்.

ஆக்கம் 10

3. கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, கடல்நீரைக் குடிநீராக்கும் கருவி ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்தில் சில மாற்றங்கள் செய்து, கறுப்புத் தங்கம் (Black Gold) ஒன்றை உருவாக்கி, இதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

ஆக்கம் 10

4. அமெரிக்காவில் 40 சதவீத மின்சாரம், சோலார் முறையிலே உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் உச்சமாக, சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘சூரிய சாலைகள்’ கண்டறியப்பட்டுள்ளன. நடைபாதைகள், திடல் என எல்லா இடங்களிலும் இந்த முறையைக் கொண்டுவரலாமாம்.

5. நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள், என்னென்ன ஊட்டச்சத்து வகைகள் உள்ளன என்பதை மொபைல் மூலம் நொடியில் தெரிந்துகொள்ள வந்துவிட்டது Tell Spec என்ற கருவி. சாப்பிடும்போது அருகில் வைத்துக்கொண்டால் போதும். என்ன மாதிரி உணவை உட்கொள்கிறோம் என்பதைச் சொல்லிவிடும்.

6. மருத்துவத்தின் புதிய சாதனையாக, மீநுண் துகள்கள் (Nano particles) மூலம், புற்றுநோய்க் கட்டிகளை அகற்ற முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ அலை உதவியால் மீநுண் துகள்களைத் தூண்டி, வெப்பத்தை ஏற்படுத்தி கட்டிகளை அகற்றலாம் என்கிறார்கள்.

ஆக்கம் 10

7. நவீன லேசர் தொழில்நுட்ப உதவியுடன், நுரையீரலைப் பாதுகாக்கும் உறையில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யலாம் என்கிறார்கள் பெர்லின் ஹம்போடு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அடுத்தடுத்த சோதனை முடிவுகளுக்குப் பிறகு, இந்தச் சிகிச்சை முறை, நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆக்கம் 10

8. கேம்ஸ் விளையாட, வாட்ஸ் அப் அனுப்ப மட்டுமல்ல, வீட்டு விளக்கை அணைக்கவும் ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும். ப்ளூடூத் மற்றும் வை-பை மூலம் கட்டுப்படுத்த கூடிய ஸ்மார்ட் விளக்குகள் வந்தாச்சு. விளக்கின் நிறத்தை மாற்றுவது, ஒளையக் குறைப்பது எனப் பல விஷயங்களைச் செய்யலாம்.

9. என்னதான் வாஷிங் மெஷின் இருந்தாலும், துணி துவைப்பது என்பது பெரிய வேலைதான். அதை இன்னும் ஸ்மார்ட்டாக்க வந்துவிட்டது Dolfi என்னும் கருவி. பார்க்க ஒரு சோப்புக் கட்டி போன்றிருக்கும் இதை, துணியுடன் டிடர்ஜென்ட் கலந்து வைத்துவிட்டால் போதும். மீயொலி அலைகளைப் பயன்படுத்தி அழுக்கு அனைத்தையும் நீக்கிவிடும்

10. டிவி ரிமோட்டில் தொடங்கி செல்போன் வரை நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருளில்தான் இப்போதல்லாம் மிக அதிகமாகத் தூசியும் கிருமிகளும் உள்ளன. இதற்குத் தீர்வாக வந்தாச்சு ஸ்மார்ட் கிளீனர். சமையல் பாத்திரங்கள் முதல் எல்லாவற்றையும் புற ஊதாக் கதிர்கள் உதவியுடன் அழிக்க இந்தக் கருவி உதவுகிறது.