Published:Updated:

``ஒரு லட்ச ரூபாய் இருந்தா என் பொண்ணுக்கு காது கேட்டிரும்!'' - உருகும் தஞ்சாவூர் செந்தமிழ்செல்வி

கே.குணசீலன்
ம.அரவிந்த்

"நான் பேசப்போவதை என் மகள் விரைவில் கேட்கப் போகிறாள்."

பிரபாஸ்ரீக்கு செய்யப்பட்ட சோதனை
பிரபாஸ்ரீக்கு செய்யப்பட்ட சோதனை ( ம.அரவிந்த் )

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகளுக்குக் காது கேட்கும் கருவி பொருத்த முடியாமல் வறுமையில் தவித்து வந்த ஏழைத் தாயின் துயரத்தை வாசன் அறக்கட்டளையும், வாசகர்களும் இணைந்து போக்கியிருக்கிறார்கள். நான் பேசுவதை என் மகள் கேட்கப் போகிறாள் என மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக உருகி வருகிறார் அந்தத் தாய்.

செந்தமிழ்ச்செல்வி மகள்களுடன்...
செந்தமிழ்ச்செல்வி மகள்களுடன்...

தஞ்சாவூர் சூரக்கோட்டை அருகே உள்ள சைதாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி. இவர் கணவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் பிரபாஸ்ரீக்கு ஐந்து வயது. தந்தையைப் போலவே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி, இளைய மகள் கிருத்திகாஸ்ரீ.

செந்தமிழ்ச்செல்வி தன் மகள் பிரபாஸ்ரீயை பள்ளியில் சேர்ப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் காது கேட்கும் கருவி கேட்டு அலைந்துகொண்டிருந்தார். இது குறித்து, ''நான் பேசுறது அவளுக்கு எப்போ கேட்குமோ'' - பரிதவிக்கும் ஒரு தாய்' என்ற தலைப்பில் விகடனில் சில நாள்களுக்கு முன்பு எழுதியிருந்தோம். இதைப் படித்த வாசகர்கள் பலர், உருகிப் போய் உடனே விகடன் அலுவலகத்திற்கு போன் செய்து பிரபாஸ்ரீக்கு காது கேட்கும் கருவி பொருத்துவதற்கு தாங்கள் உதவுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வாசன் அறக்கட்டளை சார்பிலும் வாசகர்களின் பங்களிப்புடனும் பிரபாஸ்ரீக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

பிரபாஸ்ரீக்கு செய்யப்பட்ட சோதனை
பிரபாஸ்ரீக்கு செய்யப்பட்ட சோதனை

உடனே செந்தமிழ்ச்செல்வி, துரை, பிரபாஸ்ரீ மற்றும் உதவிக்கு அவர்களின் உறவினர் ஒருவர் என அனைவரையும் ரயில் மூலம் சென்னைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் வந்திறங்கியதும் தங்குவதற்கான அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. பயணம் மற்றும் உணவிற்கான செலவுகள் அனைத்தும் வாசன் அறக்கட்டளை மூலம் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அஸ்த்ரா என்ற பிரபலமான காது கேளாதவர்களுக்கான சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூத்த மருத்துவரின் மேற்பார்வையில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகப் பரிசோதனைகள் பிரபாஶ்ரீக்கு நடைபெற்றன.

அப்போது பிரபாவிற்கு வலது காது சுத்தமாகவும், இடது காது ஓரளவிற்கும் கேட்பதும் கண்டறியப்பட்டது. இரண்டு காதுகளிலும் காது கேட்கும் கருவி பொருத்த வேண்டும். எந்த மாதிரியான காது கேட்கும் கருவி பொருத்த வேண்டும் என்பதையும் பரிந்துரை செய்தார் மருத்துவர். இந்த சோதனைகளுக்காக எந்தத் தொகையும் மருத்துவர் வாங்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ்
பிரபாஸ்

பரிசோதனை முடிந்தவுடன், காது கேட்கும் கருவி வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதற்கு வாசகர்கள் உதவ நினைத்தாலும் உதவலாம். இந்தக் கருவி வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதன் பிறகு, சோகமே உருவாக இருந்த செந்தமிழ்ச்செல்வியின் முகத்தில் சிரிப்பலை படர ஆரம்பித்தது. பிரபாஶ்ரீக்கு கருவி பொருத்தப்பட வேண்டும் என்பதால், மீண்டு அடுத்த வாரம் வரவேண்டும் என்ற கோரிக்கையோடு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து செந்தமிழ்ச்செல்வியிடம் பேசினோம். ''என் கணவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் என்னை ரொம்பவே அன்பாகக் கவனிச்சுக்கிட்டார். குடும்பத்தில் போதிய வருமானம் இல்லை என்பதால் எப்போதும் எங்களை வறுமை துரத்திக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் மாற்றுதிறனாளியாக இருக்கும் என் கணவர் படும் துயரத்தை நேரில் பார்த்தவள் என்பதால் எங்களுக்குப் பிறக்க போகும் குழந்தைகள் என் கணவர் போல் இல்லாமல் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. என் கோரிக்கை எதுவும் கடவுளுக்குக் கேட்கவில்லைபோல... என் மூத்த மகள் பிரபாஸ்ரீ தந்தையைப் போலவே காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தாள். நிலைகுலைந்து போனேன். நான் பேசுறது அவளுக்கு எப்போ கேட்கும்னு ஏங்காத நாளே இல்லை.

மகளுடன் செந்தமிழ்ச்செல்வி
மகளுடன் செந்தமிழ்ச்செல்வி

காது கேட்கும் கருவி பொருத்தினால் அவள் பேசுவாள்னு மருத்துவர்கள் சொன்னதும் நான் ஏறி இறங்காத ஊரும் இல்லை, அரசாங்க அலுவலகமும் இல்லை. ஒரு தாயாக நான் அடைந்த பரிதவிப்பை உணர்ந்த விகடன், இதற்கான முயற்சியைச் செய்திருக்கிறது. எங்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் வரவழைத்து, பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்கள். கருவி பொருத்த ஒருலட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இதைப் படிக்கும் வாசகர்களால் என் குழந்தையின் வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

எப்படியாவது அவள் என்னை அம்மா என்று அழைத்துவிட வேண்டும், அதைக் கேட்க நான் இன்னும் எத்தனை பிரச்னைகளை வேண்டுமானாலும் சகித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். அவள் காது கேட்கும் நாள்தான் எனக்கான விடிவுகாலம்!'' என்று தழுதழுத்தார் செந்தமிழ்செல்வி.

பிரபா ஶ்ரீக்கு உதவ நினைக்கும் வாசகர்களின் கவனத்துக்கு...

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `FOR PRABHASRI’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்: HDFC 0000004, ஐ.டி.சி. மையம் கிளை, சென்னை - 600 002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோட் : IDIB000C032, ஸ்விப்ட் கோட் : IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600 008) மூலம் அனுப்பலாம்.

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர் மற்றும் காசோலை அல்லது டி.டி வாயிலாக உதவ நினைப்போர், `வாசன் அறக்கட்டளை' ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.