Published:Updated:

நல்லா படிக்கிற நந்தினிக்கு இப்போ என்ன ஆச்சு? - உங்க குழந்தைகளைப் புரிஞ்சுக்கங்க #ChildCare

ஏன் இந்த ஏற்ற, இறக்கம் என வகுப்பு ஆசிரியருக்குப் புரியலை. கூப்பிட்டுக் கேட்டாலும் சரியான பதில் இல்லை. நந்தினியின் அம்மாவை வரவெச்சும் பேசியாச்சு. இவங்களுக்கு எல்லாம் புரியாத, கவனிக்க மறந்த ஒரு விஷயம் நாலு மாசத்துக்கு முன்னாடி நடந்துச்சு.

ழாம் வகுப்புப் படிக்கும் நந்தினி, சமீபமாக ஆசிரியர்களுக்குப் புதிராக இருந்தாள். அவளோட ரிப்போர்ட் கார்டு குழப்பி அடிச்சது. முதல் மாசத்துல முதல் ரேங்க் எடுத்தவள், அடுத்த மாசத்தில் பன்னிரண்டாவது ரேங்க். திடீர்னு பெயிலாகியும் இருந்தாள். அடுத்த மாசமே சர்ர்ர்ர்... என முன்னேறி மூணாவது ரேங்க்.

ஏன் இந்த ஏற்ற இறக்கம் என வகுப்பு ஆசிரியருக்குப் புரியலை. கூப்பிட்டுக் கேட்டாலும் சரியான பதில் இல்லை. நந்தினியின் அம்மாவை வரவெச்சும் பேசியாச்சு. இவங்களுக்கு எல்லாம் புரியாத, கவனிக்க மறந்த ஒரு விஷயம் நாலு மாசத்துக்கு முன்னாடி நடந்துச்சு.

நந்தினி
நந்தினி
pixabay

ஒருநாள் ஸ்கூல் முடிச்சுட்டு உற்சாகமாக வீட்டுக்கு வந்த நந்தினி, ``அம்மா இங்கே பாரு. த்ரோபால் விளையாட்டிலும் இந்தமுறை நான்தான் ஃபர்ஸ்ட்''னு சொல்லிக்கிட்டே அந்த சர்ட்டிபிகேட்டை நீட்டினாள்.

``அப்படியா சரி... அங்கே வை. அப்புறமா பார்க்கிறேன்''னு சொல்லிட்டு நகர்ந்துட்டாங்க நந்தினியின் அம்மா. நந்தினி முகம் சுண்டிப்போனதையும் கவனிக்கலை.

அன்றைக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே சரியா இல்லை. ``என்ன ஆச்சும்மா?'' ``என்ன ஆச்சுப்பா?''னு தனித் தனியா கேட்டதுக்கு ரெண்டு பேருமே, ``ஒண்ணுமில்லே''னு சொல்லிட்டாங்க.

தொலைக்காட்சி ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் வெச்ச அந்தச் சான்றிதழ், அடுத்த நாள் காலை வரைக்கும் அந்த இடத்திலேயே இருந்துச்சு. அப்பாவும் கவனிக்கலை. அப்புறமா அதை எடுத்து ஃபைல் பண்ணிட்டா நந்தினி.

ஸ்கூலுக்குப் போயும் யாருடனும் சரியாகப் பேசலை. நந்தினியின் பெஸ்ட் ஃப்ரண்ட் ஷெனானி மட்டுமே கவனிச்சு, ``ஏன் சோகமா இருக்கே''னு கேட்டாள்.

நந்தினி விஷயத்தைச் சொல்ல, ``எங்க வீட்டுக்கு வா நந்தினி. எங்க அப்பா, அம்மா எப்பவும் என்கிட்டே கோவிச்சுக்கிட்டதில்லே. பெயிலானாலும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவாங்க'' என்றாள்.

kids
kids
pixabay

அன்றைக்குச் சாயந்திரம் ஷெனானி வீட்டுக்குப் போனாள் நந்தினி. அந்த அப்பாவும் அம்மாவும் அவ்வளவு கலகலப்பா பேசறதைப் பார்த்து, `நம்ம அப்பா, அம்மா மட்டும் ஏன் இப்படி இல்லே'னு சோகமாயிட்டாள். தன் அப்பா, அம்மாவிடம் முன்பு மாதிரி பேசறதையும் குறைச்சுட்டா.

ப்படி இருக்கிறப்போதான் யதேச்சையா ஷெனானி அம்மாவும் நந்தினி அம்மாவும் கடை வீதியில சந்திச்சுக்கிட்டாங்க. பேசிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சாங்க. அம்மாக்கள் ஒண்ணு சேர்ந்துட்டா, உள்ளூர் கதை முதல் உலக அரசியல் வரை பேச ஆரம்பிச்சுடுவாங்கதானே... அப்படித்தான் நந்தினி கதையும் வந்துச்சு.

அப்போ ஷெனானி அம்மா, அந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, ``கேட்டால் தப்பா நினைச்சுக்காதீங்க. அன்னைக்கு ஏன் நந்தினியின் சர்ட்டிபிகேட்டைப் பார்க்கலை. நீங்களும் அவரும் ஏன் சரியா பேசலை?''னு கேட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நந்தினி அம்மாவுக்கு அப்போதான் விஷயம் புரிய ஆரம்பிச்சது. ``அன்னைக்கு காலையில் எனக்கும் அவருக்கும் பிறந்த வீடு சம்பந்தமா ஒரு சண்டை. அந்தக் கோபத்துல இருந்தேன். அதனால, அப்படி நடந்துக்கிட்டேன். நந்தினி கேட்டப்பவும் அவளுக்குப் புரியாதுன்னு சொல்லலை. அதுவா அவளை இந்த அளவுக்குப் பாதிச்சிருக்கு''னு நம்பமுடியாம ஆச்சர்யப்பட்டாங்க.

``ஆமா... நமக்கே தெரியாமல் நாம செய்யற சின்ன அலட்சியம், குழந்தைகள் மனசை ரொம்ப பாதிக்கும். அதிலும் நந்தினி மாதிரி வயசுல இருக்கிற குழந்தைகளுக்கு, தான் பெரிய ஆளாகிட்டு வர்றோம்னு தோணும். அப்பா, அம்மா அவங்க பிரச்னை பற்றி நம்மகிட்ட சொல்லமாட்டேங்கறங்க என்ற எண்ணம், அவளோட மனசை ஆழமா பாதிச்சிருக்கு. நாம மட்டும் ஏன் நம்ம பிரச்னை பற்றிச் சொல்லணும் அப்படின்னு ஒரு வீம்பான முடிவை எடுத்துட்டாள் போலிருக்கு. அதுதான் இப்படி நடந்துக்கிறாள்னு நினைக்கிறேன்.''

kids
kids
pixabay

ஷெனானி அம்மா இப்படிச் சொன்னதும், நந்தினி அம்மா யோசிச்சாங்க. ``இப்போதான் என்னோட தப்பே புரியுது. ஒரு மாசம் மார்க் அதிகமா எடுக்கிறதும் அடுத்த மாசமே குறையறதும் பிரச்னை அவள் மேலேன்னு நினைச்சேன். இப்போதான் எங்க மேலே இருக்கிறது தெரியுது''னு வருத்தப்பட்டாங்க.

அன்றைக்கு சாயந்திரம் ஸ்கூல்விட்டு வந்த நந்தினியிடம் அம்மா, ``அன்னிக்கு அப்பாவுக்கு எனக்கும் சின்ன சண்டை நந்தினி. அதான், உன்கிட்ட சரியாகப் பேசலை''னு சொன்னாங்க. அதோடு அவளுக்குப் புரிகிற வகையில் என்ன பிரச்னை எனவும் சொன்னாங்க.

நந்தினி ரொம்ப சந்தோஷமாகிட்டா. ``ஸாரிம்மா... இனிமே நானும் இப்படி நடந்துக்க மாட்டேன். இனிமே நல்லா படிச்சு எப்பவும் ஒரே மாதிரி அசத்தறேன் பாருங்க''னு சொல்லி, அம்மாவை கட்டிப்பிடிச்சுக்கிட்டாள் நந்தினி.

வளரிளம் பருவத்தில் இருக்கிற குழந்தைகளைக் கையாளும் நேர்த்தியை மட்டும் பல பெற்றோர்கள் சரியாகப் புரிஞ்சுக்கிறதே இல்லை. அந்த வயசுல தானும் பெரியவங்களாகிட்டு இருக்கோம், தனக்கு எல்லாம் புரியும்; சரிபண்ணத் தெரியும்'னு நினைப்பாங்க. விவாதம் செய்வாங்க.

kids
kids
pixabay

அதைப் புரிஞ்சுக்காமல், ``வாய்க்கு வாய் பேசறா'', ``பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கிறான்'' என நாம கோபப்படறோம். அந்தக் கோபத்தில் சரியாகக் கையாளத் தெரியாமல், பிள்ளைகளிடம் இடைவெளியை ஏற்படுத்திக்கிறோம்.

அதுக்கா, பெரியவங்க தங்களின் பிரச்னையை அப்படியே சொல்லணும்னு இல்லே. அதை எந்த அளவுக்குப் புரியும் வகையில் சொல்லணுமோ, அந்த அளவுக்குச் சொல்லணும். அம்மா அப்பாவுக்கும் தனக்கும் இடையில் எந்த ரகசியமும் இல்லைனு ஒரு குழந்தை உணர ஆரம்பிச்சுட்டாலே, தன்னுடைய விஷயங்களையும் ரகசியப்படுத்த மாட்டாங்க.

அதோடு, பெரியவங்களான நமக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும், குழந்தைகளின் சின்ன சின்ன சந்தோஷங்களைத் தள்ளிப்போடாமல் உடனே கவனிச்சு பாராட்டுங்க. சின்ன கவனக்குறைவு உங்க வீட்டிலும் ஒரு நந்தினியை உருவாக்கிடும் ஜாக்கிரதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு