Published:Updated:

"இந்தியா எப்போது வல்லரசாகும்?" - 'நீயா நானா' கோபிநாத் பதில்

கோபிநாத்
கோபிநாத்

நீங்க பொறுப்புணர்வோடு ஒரு தகவலை கவனிக்கணும். உண்மையா, பொய்யா என ஆராய்ந்த பிறகே சொல்லணும். ஏன்னா, நாட்டின் உயரிய பதவில இருப்பவர்களிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு இருக்கு.

'இவ்வளவு இளம் வயது பத்திரிகையாளர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை பெருமிதமாக கருதுகிறேன்" என நெகிழ்ந்தார், விஜய் டிவியின் 'நீயா நானா' கோபிநாத்.

'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம் 2019' நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவரிடம், எங்களின் முதல் நிருபர் பணியைத் தொடங்கினோம். அவற்றில் சில...

"நீங்க எடுத்த முதல் பேட்டி எது?"

"இந்தியா எப்போது வல்லரசாகும்?" - 'நீயா நானா' கோபிநாத் பதில்

"என் ஆரம்பகால அனுபவங்கள், கூட்டத்துடன் கூட்டமாக நின்று, வருகிற விஐபிகளிடம் கேள்வி கேட்பதுதான். அப்படித்தான், விமான நிலையத்துக்கு வெளியே வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்டேன். அது முக்கியமான கேள்வி என்பதால், அவரும் பதில் சொன்னார். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது!"

"உங்களின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் உங்க காதில் வைத்திருக்கும் மைக்ல, டைரக்டர் சொல்றதைச் செய்வீங்களாமே..."

"ஒரு நிகழ்ச்சி என்பது கூட்டு முயற்சிதான். கலந்துகொண்டு பேசுபவர்கள், இயக்குநர், தொழில்நுட்பக் குழு, இப்படிப் பலரின் உழைப்பு இருக்கு. நான் அங்கே தொகுப்பாளர். ஒரு தொகுப்பாளர் இத்தனைக்கும் ஈடுகொடுத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும். கேமரா கோணங்கள் எப்படி இருக்கு, லைட்டிங் எப்படி இருக்கு எனப் பார்த்து செயல்படணும். திடீர்னு ஏற்படும் தொழில்நுட்ப கோளாற்றைச் சமாளிச்சு, மத்தவங்க சோர்ந்துடாமல் பார்த்துக்கணும். நாம் கவனிக்காத விஷயத்தை இயக்குநர் சொல்வார். அதற்கேற்ப செயல்படணும்."

"இந்தத் துறையில் ஜெயிக்க என்ன செய்யணும்?"

"உலகத்தைக் கூர்ந்து கவனிங்க. உண்மை எது பொய் எதுன்னு ஆராய கத்துக்கோங்க. இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனப் பல இடங்களிலிருந்து செய்திகள் வந்து குவியுது. நீங்க பொறுப்புணர்வோடு ஒரு தகவலை கவனிக்கணும். உண்மையா, பொய்யா என ஆராய்ந்த பிறகே சொல்லணும். ஏன்னா, நாட்டின் உயரிய பதவில இருப்பவர்களிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு இருக்கு. அந்த உரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்தணும். செய்தியைச் சுவாரஸ்யமாகக் கொடுக்கணுமேன்னு கற்பனையாகவோ, தவறாகவோ கொடுக்கக் கூடாது. உண்மையைச் சுவாரஸ்யமாக கொடுக்கணும்."

கோபிநாத்
கோபிநாத்

"உங்களுக்கு ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன்னு யாரைச் சொல்வீங்க?"

"இந்திய அளவில் நிறைய பேர் இருக்காங்க. ஆனாலும், ரவி பெர்னாட் சார் மிக முக்கியமானவர். எங்க தலைமுறையில் பலருக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். தவிர, பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் என் ஆசிரியர்கள், பெற்றோர் என நிறைய பேர் எனக்குத் தூண்டுகோலாக இருந்திருக்காங்க."

"இந்தியா எப்போது வல்லரசாகும்?"

"வல்லரசு என்பது என்ன? பெரிய பெரிய ஆயுதங்களையும் அணுகுண்டையும் வெச்சிருந்தா வல்லரசா? உண்மையில், அந்த நாடுதான் பெரிய கடன்கார நாடாக இருக்கும். அறிவை வைத்திருப்பதுதான் வல்லரசு நாடு என்றால், இந்தியா எப்போதோ வல்லரசு ஆகிவிட்டது. நம் இளைஞர்களிடம் அவ்வளவு ஆற்றலும் ஆக்கமும் இருக்கிறது."

அமைதியாக கடலை ரசிக்கணும். அதில் உள்ள உயிரினங்கள் பற்றி யோசிக்கணும்

"இன்றைக்கு ஸ்மார்ட்போன், கேஜட்ஸ் என நிறைய பேர் அடிமையாகி இருக்காங்களே... அதிலிருந்து எப்படி மீள்வது?

"கடற்கரைக்கு முதல்முறையாகப் போகிறவர்கள் உற்சாகமாக கத்துவாங்க. மண்ணை வாரி இறைப்பாங்க. ஆனா, பத்தாவது முறையாகப் போகும்போதும் அதையே செய்யறது அர்த்தமில்லை. அமைதியாக கடலை ரசிக்கணும். அதில் உள்ள உயிரினங்கள் பற்றி யோசிக்கணும். அப்படித்தான், ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போது அதில் உள்ள கேம்ஸ், விஷயங்கள் என பார்த்துக்கிட்டே இருக்கத்தோணும். ஆனா, அதிலேயே மூழ்கிடாமல், அந்தத் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயத்துக்குப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கணும். அப்படி நீங்க ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி உயரங்களைத் தொடுங்க. ஆல் தி பெஸ்ட்!"

முழுமையான பேட்டியை சுட்டி விகடன் இதழில் வாசிக்கலாம். ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு