Published:Updated:

`பள்ளிகளில் போதைப்பொருள்; யார் பொறுப்பு?!’- ஆசிரியர்களுக்குக் காரைக்கால் ஆட்சியரின் அட்வைஸ்

 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா

பள்ளியிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எனத் தனித்தனியாக கழிவறைகள் இருக்கின்றன. இது சரியல்ல. எல்லோரும் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்தினால்தான் அதனுடைய தூய்மை என்னவென்பது தெரியும்.

காரைக்கால் மாவட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்துவதைக் கண்காணிக்காத பள்ளி நிர்வாகங்களைக் கடுமையாகச் சாடி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

புதுச்சேரி குழந்தைகள் ஆணையம் சார்பில் பரிஷகா பர்வ மற்றும் குழந்தைகள் உரிமைகள் என்ற திட்டத்தின் கீழ் காரைக்காலில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜாவின் வெளிப்படையான பேச்சு ஆசிரியர்கள் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

கலெக்டர் விக்ராந்த் ராஜா, ``தற்போதைய நிலையில் மாணவர்கள் கல்வி பயிலும் போது, அவர்களுக்கு சவால்கள் அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு எல்லோருக்கும் இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் படிப்பு, அவர்கள் எடுக்கின்ற மதிப்பெண், என்பதை மட்டுமே பார்த்து ஊக்கப்படுத்துகின்றனர். இது ஒருவகையில் சரி என்றாலும் கூட, மாணவர்களிடம் புதைந்திருக்கும் மாற்றுத்திறன்களை மேம்படுத்தவும், அதை ஊக்கப்படுத்தவும் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதில்லை. எனவே, பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை வளர்க்க உறுதி செய்ய வேண்டும்.

 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா

குறிப்பாக மாணவர்கள் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களைப் பள்ளிகளில் பயன்படுத்துவதாக அதிக அளவில் புகார் வருகிறது. வீடுகளில் தவறு இழக்காத மாணவர்கள் பள்ளிக்கு வந்து தவறு செய்கிறார்கள் என்றால் அந்தப் பள்ளியில் கண்காணிப்பும் கட்டமைப்பும் சரியில்லை என்றுதான் பொருளாகும். எனவே, மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்த தெளிவான சிந்தனையைப் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். கடந்த சில நாள்களுக்கு முன் காரைக்கால் கடற்கரையில் தூய்மை குறித்து மாணவர்களையே விழிப்புணர்வு ஓவியப் போட்டி ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் பெரும்பாலான பள்ளிகள் சார்பில் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதைப் பள்ளி நிர்வாகம் அலட்சியப்படுத்தியிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்கு இல்லை. வரும் காலங்களில் மாவட்ட நிர்வாக உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளில் கழிவறைகள் தூய்மையாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

போதைப் பொருள்கள்
போதைப் பொருள்கள்

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எனத் தனித்தனியாகக் கழிவறைகள் இருக்கின்றன. இது சரியல்ல. எல்லோரும் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்தினால்தான் அதனுடைய தூய்மை என்னவென்பது தெரியும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல முறையில் உருவாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். இதை ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து கொண்டு பணியாற்ற வேண்டும் " என்று கலெக்டர் விக்ராந்த் ராஜா பேசினார்

அடுத்த கட்டுரைக்கு