Published:Updated:

குழந்தை பெற்றோரிடம் கதை  கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா?! ஓர் அலசல்

கதை
கதை ( pixabay )

நாம் சிறுவயதில் படித்த கதைகளை குழந்தைகளுக்குச் சொல்வோம். வீட்டளவில், குடியிருப்பு அளவில், ஊர் அளவில் என நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு புத்தகமாக விரிவோம். கதை சொல்லியாக மாறுவோம்.

பாட்டி கதைகளாலும் சிறார் கதைப் புத்தகங்களாலும் வளர்ந்த குழந்தைப் பருவம் ஒன்று இருந்தது. இன்று, பாட்டிகள் கதை சொல்வதும் குறைந்துவிட்டது. சிறார் படிக்கும் கதைப் புத்தகங்களும் அருகிவிட்டன. அப்படியானால் கதைகள் எல்லாம் எங்கே போயிற்று? அது, தொழில்நுட்பப் பரிணாமம் பெற்று, இணையம் வழியே விரலின் தீண்டலில், வண்ணங்களுடன் விறுவிறுப்புக் கூட்டி, கண்களுக்கு நிறையவே கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் சரியான நிறைவைக் கொடுக்கின்றனவா?

`அதில் என்ன பிரச்னை? அறிவியலின் முன்னேற்றம் அது. நாம் ஏற்க மறுத்தாலும் அது வளரத்தான் செய்யும். காலத்தின் மாற்றம். அந்த வழியே என் குழந்தையை மகிழ்விக்கிறேன்' என நினைக்கலாம். ஆனால், நாம் பெற்ற கதைகளின் வழிமுறைக்கும் இன்றைய குழந்தைகள் பெற்றுக்கொண்டிருக்கும் வழிமுறைக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது.

kids
kids
pixabay

ஒரு கதைப் புத்தகத்தை குழந்தைகளே படிப்பதற்கும், அதையே அட்டகாசமான அனிமேஷன் வீடியோவாக இணையம் வழியே பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் வீட்டில் சமைத்து ஊட்டிவிடுவதற்கும், உங்கள் குழந்தையே இணையம் வழியே ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்ததை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

பாட்டியோ, நீங்களோ பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்வதற்கும், அவர்களுக்கு ஒரு ஆடியோவைப் போட்டுவிட்டு செல்வதற்குமிடையே என்ன பெரிய வித்தியாசம்?

நம் குழந்தைப் பருவத்தில், வீட்டில் அம்மாவே அரைத்துப் பயன்படுத்திய மசாலா பொருள்களுக்கும், இன்று ரசப்பொடி முதல் மட்டன் சூப் பொடி வரை பாக்கெட்டுகளாக வாங்கி நாம் பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

`வீட்டு முறை சாப்பாடு', `அம்மாவின் அக்கறையுடன் தயாரிக்கப்பட்டது' என்ற வாசகங்களால் நம் இதயங்களைத் தொட்டாலும், நாவில் படும்போது நமக்கே புரியுமே அந்த வித்தியாசம்தான். உங்களிடம் அது வரும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, அவர்கள் சேர்க்கும் ரசாயனத்தின் அளவு வேறுபடலாம். ஆனால், அது இல்லாமல் இருக்குமா?

உணர்ந்து பார்ப்பதற்கும் உயிர்ப்புடனே இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நம் குழந்தை கற்பனையாக உணர்ந்து பார்த்துக்கொள்ளட்டுமா உயிர்ப்புடன் வளரட்டுமா? அது நம் கைகளில்தான் இருக்கிறது.

குழந்தைகளுக்கான புத்தகம் இல்லையே... தனி மனிதனாக என்ன செய்யமுடியும் என்று நினைக்காமல், நாம் ஒவ்வொருவருமே ஒரு புத்தகமாக மாறுவோம். நாம் சிறுவயதில் படித்த கதைகளை அவர்களுக்குச் சொல்வோம். வீட்டளவில், குடியிருப்பு அளவில், ஊர் அளவில் என நம்மால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு புத்தகமாக விரிவோம். கதை சொல்லியாக மாறுவோம்.

kids
kids
pixabay

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, பிள்ளைகளைப் பக்கத்தில் அமரவைத்து, அரவணைத்துக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் யோசித்து, அவர்களை கவரும் வகையில் வித்தியாசமாக செய்ய ஆரம்பித்தால், கதை கேட்கும்/படிக்கும் ஆர்வம் அதிகமாகும்.

* நோட்டுப் புத்தகம் அல்லது வெள்ளைத்தாளில் ஒரு கதையின் சில வரிகளை உங்கள் கையெழுத்தில் எழுதுங்கள். கொஞ்சம் காலி இடம் விடுங்கள். பின்னர், இன்னும் கொஞ்சம் கதை, காலி இடம் என்பதாக இருக்கட்டும். அந்தக் கதையை வாசிக்கச் சொல்லுங்கள். காலி இடம் வரும்போதெல்லாம் கதையை நிறுத்தி, கதைக்குப் பொருத்தமான சின்னச்சின்ன ஓவியங்களை வரையச் சொல்லுங்கள். அந்த ஓவியங்கள் திருத்தமாக இருக்க வேண்டும் என்றில்லை. முட்டை, கோடுகள் என்று இருக்கலாம். அந்த ஓவியங்கள் குறித்து ஜாலியாக உரையாடிவிட்டு கதையைத் தொடரலாம்.

* கையெழுத்துப்பிரதி போல, உங்கள் வீட்டுக்குள்ளேயே அல்லது குடியிருப்புக் குழந்தைகளுக்குள்ளேயே ஒரு சிறார் புத்தகம் தயாரிக்கலாம். 10 வெள்ளைத்தாள்களை இரண்டாக மடித்து, பின் அடித்தால் போதும். அட்டை ஓவியம், உள்ளே கதைகள், ஓவியங்கள், படங்களை ஒட்டுவது என்று செய்யவையுங்கள். ஆரம்பத்தில் நீங்களும் அதில் பங்கேற்று குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டுங்கள். அந்தப் புத்தகத்தை சுற்றுக்கு விடுங்கள்.

* ஜாலியான கதை சொல்லல் போட்டிகள் நடத்தலாம். ஐந்து நிமிட கதை, 10 நிமிட கதை என ஒரு நேரத்தை முடிவுசெய்யுங்கள். சரியாக அந்த நேரத்துக்கான நொடியில் தொடங்கி, இறுதி நொடியில் முடியும் வகையில் கதையைச் சொல்லுங்கள். அதேபோல, குழந்தைகளையும் சொல்லவையுங்கள்.

kids
kids
pixabay

* கதைக்கான தலைப்பு, கதையில் வரும் விலங்குகள் அல்லது பெயர்களை சவாலான விளையாட்டாக ஆரம்பித்து, அதிலிருந்து கதை சொல்வதுபோலவும் செய்யலாம். உதாரணமாக, வெவ்வேறு விலங்குகள், ஊர்கள், பொருள்களின் பெயர்களைத் துண்டுத்தாள்களில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை குலுக்கிப் போட்டு, சில தாள்களை எடுக்க வேண்டும். வந்திருக்கும் பெயர்கள் எல்லாம் நீங்கள் சொல்லப்போகும் கதையில் வர வேண்டும் அல்லது குழந்தைகள் சொல்ல வேண்டும்.

இப்படி, பல்வேறு வகையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு கதைப் புத்தகமாக, கதை சொல்லியாக மாறுங்கள். உங்கள் குழந்தைகள், டிஜிட்டல் கதைகள் என்கிற செவிலித் தாயிடமே முழுக்க முழுக்க வளராமல், உங்களிடமும் வளரட்டும். ஏனெனில், தாய்ப்பாலின் ஆரோக்கியத்தை வேறு எதுவும் ஈடு செய்யாது.

அடுத்த கட்டுரைக்கு