
"நான் ரெடி... நீங்க ரெடியா...!" - நடிகர் விஷாலின் விவசாய புரட்சி
சீமை கருவேல மரத்தை அகற்ற சிதம்பரத்தில் நடிகர் விஷால் களமிறங்கினார். அப்போது அங்கு நின்ற ஜே.பி. மீது ஏறி நின்று விவசாயத்தை பாதுகாக்க சீமை கருவேல மரத்தை வேரோடு அகற்ற வேண்டும் என்று பேசினார்.
சிதம்பரத்தில் துப்பறிவாளன் என்ற படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் சென்றுள்ளார். அப்போது, சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் மீதிகுடி கிராமம் அருகே சரஸ்வதி அம்மாள் நகரில் சீமைக் கருவேல மரம் அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். அதைப்பார்த்த விஷாலும், பிரசன்னாவும் களத்தில் இறங்கி உள்ளனர்.
சீமை கருவேல மரத்தை அகற்ற வந்த ஜே.சி.பி. இயந்திரத்தின் மீது ஏறிய விஷால் பேசத் தொடங்கினார். "கருவேல மரம் அழிப்பதை மாணவர்களால் மட்டும் முடியாது. பொது மக்களும் சேர்ந்து அதை அழிக்க வேண்டும். நான் இங்கு வந்த போது அருள் என்ற மாணவனிடம் உன் லட்சியம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவன், 'கருவேல மரத்தை அழித்தால் விவசாயம் நன்றாக இருக்கும். இதுதான் என் லட்சியம்' என்று சொன்னான். கருவேல மரத்தை வேரோடு பிடுங்க வேண்டும். இந்த நாட்டுக்கு விவசாயிகள் ரொம்பவே முக்கியம். நான் ரெடி... நீங்களும் கருவேல மரத்தை அகற்ற ரெடியா... நான் இங்கு வந்தால் மக்கள் சந்தோஷப்படுவதாக சொன்னார்கள். ஆனால் உண்மையில் நான் இங்கு வந்ததற்கு சந்தோஷப்படுகிறேன். விவசாய நிலத்தில் 'ஹைட்ரோ கார்பன்' எடுப்பதை தடுக்க என்னால் முடிந்தளவு முயற்சி செய்வேன்" என்றார்.
அடுத்து சீமைக் கருவேல மரம் அகற்றப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
எஸ்.மகேஷ்