சினிமா
தொடர்கள்
Published:Updated:

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

பட்டத்து அரசன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டத்து அரசன் படத்தில்...

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபல கபடி வீரர்களைப் பற்றி விகடனிலேயே ஒரு ஸ்டோரி வந்திருந்துச்சு. அப்ப கபடி வீரர் பொத்தாரியைப் பத்தி எழுதியிருந்தாங்க.

``தஞ்சாவூரைத் தாண்டி இருக்கிற பிறந்த ஊருக்கு, கொஞ்ச நாள் முன்னாடி போயிருந்தேன். அங்கே பெரிய கபடிப் போட்டி நடந்தது. நானே முன்னாடி கபடி பிளேயர்தான். அங்கே பார்த்தால் ஒரு டீம் இறங்குச்சு. அந்த டீம்ல தாத்தா வயசுல, அப்பா வயசுல, மகன் வயசுல, பேரன் வயசுலன்னு ஆள் சேர்ந்து இறங்குறாங்க. இது என்னடா புதுசா இருக்குன்னு ஆச்சரியம் தாங்க முடியலை. விசாரித்தால் அப்படித்தான் குடும்பமே சேர்ந்து ஆடிட்டு இருக்குன்னு சொன்னாங்க. அப்பவே அதில் ஒரு கதை தோணுச்சு. அப்படி வந்ததுதான் இந்தப் ‘பட்டத்து அரசன்.'

மண் சார்ந்த அசல் கதை. அதற்கு முன்னே பின்னே சம்பவங்கள் சேர்த்து யோசித்ததில் மனதைத் தொடுகிற விதமாய் வந்துவிட்டது. ஒரு நல்ல படம் என்பது, பார்க்கிற அனுபவத்தோடு முடிஞ்சிடக் கூடாது. அதைப் பார்த்தவரின் மனதில் தொடர்ந்து வளரணும். இது கபடி விளையாட்டு மட்டுமே சார்ந்த படமல்ல. இதில் குடும்பம் சார்ந்த ஒரு வாழ்க்கையும் அருமையாக அமைஞ்சிருக்கு. ஒரு வண்ணத்துப்பூச்சியை அறிந்துகொள்ள என்ன வழின்னு நினைக்கிறீங்க? அதைப் பின்தொடர்ந்தே போய்க்கிட்டு இருக்க வேண்டியதுதான். எனக்கு இந்தக் கலையும் சினிமாவும் அப்படிப்பட்டதுதான்'' - தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் சற்குணம். பெயர்தான் ‘களவாணி.' ஆனாலும் இன்னமும் பேசப்படுகிற படத்தை எடுத்தவர்.

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

``கபடியும் அதை ஒட்டிய வாழ்க்கையும் எப்படி வந்திருக்கிறது..?’’

‘‘தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபல கபடி வீரர்களைப் பற்றி விகடனிலேயே ஒரு ஸ்டோரி வந்திருந்துச்சு. அப்ப கபடி வீரர் பொத்தாரியைப் பத்தி எழுதியிருந்தாங்க. அவரை அந்த வட்டாரம் முழுக்கத் தெரியும். அவர் ஆக்ரோஷமும் சாமர்த்தியமும் ஸ்டைலும் பின்னி எடுக்கும். ஒரு தடவைகூட அவர் பிடிபட்டதாக வரலாறு இல்லை. அப்படியே துள்ளிக் குதித்து அத்தனை பிடியையும் உடைச்சிட்டு கோட்டைத் தொட்டு விடுவார். அவரைப் பார்க்க ஊருக்குப் போனால் ஒத்தைக் கையோடு நிற்கிறார். என்னன்னு விசாரித்தால், ரயில் விபத்து. அவர் வீட்டில் இருந்த சின்ன வயசு போட்டோவைப் பார்த்தால் அப்படியே ராஜ்கிரண் ஜாடை. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் ராஜ்கிரணுக்கு பொத்தாரின்னு பெயர் வச்சிருக்கேன்.

இப்பவும் பவுடர் பூசிதான் கிராமத்தைக் காட்டுறோம். நிஜ கிராமம் இன்னமும் முழுசாக வந்தபாடில்லை. எனக்கு எப்பவும் படத்தில் மண்ணின் வாசமும், மனிதனின் சாயலும் இருக்கணும். உயிரோடு உணர்வையும் விளையாட்டையும் கூட்டி வச்சு ஒரு படம் பண்ணணும்னு தோன்றிய பிறகுதான் இந்த சினிமாவை எடுத்தேன். ‘பொன்னியின் செல்வன்' மாதிரி பிரமாண்டமான படத்தை எடுத்த லைகா, வெற்றிலைத் தோட்டமும், கபடிக் களமும், ஊர் வாழ்க்கையுமா இந்தப் படத்தையும் தயாரிக்கிறாங்க பாருங்க, இதுல இருக்கு விசேஷம்!''

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

``ராஜ்கிரண், ராதிகான்னு ஆரம்பிச்சு பெரும் பலமாக ஸ்டார்ஸ் இருக்காங்க..?’’

‘‘வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும் ஒரு படத்தை எளிமையாக உண்மையாக எடுக்கிறதும் கஷ்டம். அப்படி உண்மையாக வரணும்னு நினைச்சபோது ராஜ்கிரண், ராதிகா மாதிரியான சீனியர்கள் அதை நல்லா புரிஞ்சுகிட்டாங்க. ராஜ்கிரணெல்லாம் படங்களை உடனே ஒப்புக் கொள்வதில்லை. நமக்கு விஷயம் இருக்கா, எதையாவது புதுசா கொண்டு வர முடியுமான்னு பார்த்துதான் முடிவு பண்றார். ஒன்று சொன்னால் ஆழமா அதைக் காட்டிடுறார். அவரே நடிப்பில் சேலஞ்ச் பண்றார். ராஜ்கிரண் சார், ராதிகா மேடம் என்று லெஜண்ட்களோடு வேலை பார்க்கிறது எவ்வளவு சுலபம்னு புரிஞ்சது.''

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

``தொடர்ந்து உங்கள் படங்களில் அதர்வா இடம் பெறுகிறார்..?’’

‘‘இதில் வெற்றிலைத் தோட்டத்தில் வேலை பார்த்திட்டு, பெரிய குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து அம்மாவோடு இருக்கிற மகன். எனக்கு அதர்வான்னா பிடிக்கும். மீசையும் கம்பீரமும், ரோஷமும் வேகமும் உள்ள ‘சண்டிவீர'னா அவரை மாத்தினேன். இப்ப பாசமும் நேசமும் விவேகமும் உள்ள சின்னத்துரையா இதில் வர்றார். மறுபடியும் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுவார். அதுக்காக அவர் போராடும்போது அவரை வழக்கமானவராக நீங்க எடுத்துக்கக் கூடாது. ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத் கன்னடத்துப் பொண்ணு. நல்லா தமிழ் கத்துக்க முயற்சி பண்ணி அதில் வெற்றியும் பெற்றாங்க. ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி, பால சரவணன்னு நிறைய நடிகர்கள். எனக்குக் கைகொள்ளாமல் நடிகர்கள், சொந்த பந்தம்னு நிறைய கூட்டம் வேணும்.''

கபடிக் களத்தில் ஒரு குடும்ப வாழ்க்கை!

``உங்கள் பாடல்களில் எப்பவும் சுகம் இருக்கும்?’’

‘‘இப்பவும் விடாமல் அதைக் கட்டிக் காத்து வர்றேன். ஜிப்ரான் போட்டுக் கொடுத்த ஆறு பாட்டும் தித்திப்பு. நமக்கு திருப்தி வந்தால் மட்டும் பத்தாதுன்னு அவர் திருப்தியையும் பார்த்துக்கிற மனுஷன். இந்திக்குப் போயிட்டார். இப்ப அஜித்தின் ‘துணிவு' படம்கூட அவர் கைவண்ணம்தான். லோகநாதன் மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல்' செய்த காமிராமேன். தமிழுக்குக் கூட்டி வந்திருக்கேன். வெற்றிலைத் தோட்டத்தையும் தஞ்சை மண்ணையும் கபடியையும் வாழ்க்கையையும் காட்டியிருக்கார். இப்போ சினிமா வெறும் சினிமா மட்டுமல்ல, ஜனங்கள் எதிர்பார்க்கிற சகல அம்சங்களோடு, புதிய கதைக்களமும் அதில் வேணும். ‘பட்டத்து அரசன்’ அப்படி நிறைவடைய வைக்கிறவன்தான்.''