
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம், தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே பக்கா பிசினஸ் பேசப்பட்டுவருகிறதாம்.
அஜித் - அட்லி இணையப்போவதாகக் கிளம்பிய செய்தி, திட்டமிட்டுப் பரப்பப்பட்ட ஒன்றாம். ‘துணிவு’ படம் திரையரங்கில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட ஒருவகை உத்திதானாம். ரிலீஸுக்குப் பிறகு அஜித் அமைதியாகிவிட்டார். இயக்குநர் அ.வினோத்தும் கமல் பட வேலைக்குக் கிளம்பிவிட்டார். இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கையெழுத்திட்டிருக்கும் இயக்குநர் அட்லி, விஜய்யை ஓகே செய்யவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ‘அஜித் - அட்லி இணையும் பரபரப்பு கிளம்பினால், விஜய் உடனே அட்லியை வளைத்துப்போட்டுவிடுவார் எனக் கணக்கு போட்டார்களாம். `துணிவு’க்கும் பப்ளிசிட்டி… அட்லிக்கும் ஆதாயம்… எனப் பக்கா பிளான் போட்டுப் பரப்பப்பட்ட வதந்திதான் அது’ என்கிறார்கள்.

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ‘இறைவன்’ படத்தில் இணைகிறார்கள் ஜெயம் ரவியும் நயன்தாராவும். படத்தில் இருவருக்குமான நெருக்கமும் உருக்கமும் அவ்வளவு ஆத்மார்த்தமாக அமைந்திருக்கின்றனவாம். அதனால், படத்தை ஜெயம் ரவியைக் காட்டிலும் நயன்தாராதான் ரொம்பவே ஆவலாக எதிர்பார்க்கிறாராம். படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ சுதன், ஜெயம் ரவி - நயன்தாராவை வைத்து அடுத்த படத்தையும் தொடங்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம், தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே பக்கா பிசினஸ் பேசப்பட்டுவருகிறதாம். இதற்கிடையில், ‘அயலான்’, ‘கூழாங்கல்’ வினோத் இயக்கும் படம் என இரு படங்களின் தயாரிப்புப் பணிகளிலும் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். ‘அயலான்’ ரவிக்குமாரை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கும் முயற்சியும் நடக்கிறதாம்.

ரஜினி - த.செ.ஞானவேல் கைகோக்கும் விஷயத்தை முதலில் நம் ஜூ.வி-தான் சொன்னது. இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, ‘டான்’ சிபி எனப் பலரும் ஓடிக்கொண்டிருந்த ரேஸில் ஞானவேல் பெயர் ஓகேயாகிவிட்டதாம். ‘கெஸ்ட் ரோலில் சூர்யாவைத் தலைகாட்ட வைக்கவும் தயார்’ என ஞானவேல் சொன்ன வார்த்தைதான், ரஜினியைச் சிலிர்க்கவைத்துவிட்டதாம். பிப்ரவரி மாதம் இந்தக் கூட்டணியின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடும் ஐடியாவில் இருக்கிறதாம்!
உஷ்...
தூளான நடிகரை வைத்து ‘குத்துச்சண்டை’ இயக்குநர் ஆரம்பித்திருக்கும் ‘கோல்டு’ சம்பந்தப்பட்ட படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டே போகிறதாம். தயாரிப்புத் தரப்பு கைவிரிக்க, கைக்காசைச் செலவழிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் இயக்குநர். முட்டல் மோதல் சீக்கிரமே வெட்டவெளிச்சத்துக்கு வர வாய்ப்பு இருக்கிறதாம்!