Published:Updated:

போலீஸ் கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுப்பு!

போலீஸ் கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுப்பு!
போலீஸ் கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுப்பு!
போலீஸ் கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: சென்னை போலீஷ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கூடங்குளம் விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மக்கள் நடத்திய  போராட்டத்தை ஒடுக்கியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது சென்னை  போலீஸ் கமிஷனராக இருக்கும் ஜார்ஜ். இவர் மீது சென்னை உயர் நீதிமன்றமும்  இப்போது பாய்ச்சல் காட்டி இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதர் என்பவர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அதில், ‘நான் கொடுத்த புகாரை  விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது  என்று கூறி, இரண்டு முறை முடித்து வைத்துவிட்டனர். இந்த வழக்கை விசாரிக்கும்  போலீஸ் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்’ என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘‘குற்றச்சாட்டுக்கு ஆதார ஆவணங்களை  தாக்கல் செய்தும், கோர்ட் இரண்டு முறை உத்தரவிட்டும் தொடர்ந்து சிவில்  சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

##~~##
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர்  செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும், சென்னை போலீஸுக்கும்  கரும்புள்ளியாக அமைந்து விட்டது. போலீஸ் கமிஷனர் (ஜார்ஜ்) என்பவர் போலீஸ்  கமிஷனர்தான். அவர் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி இல்லை.  பொதுமக்களின் குறைகளை கேட்க கமிஷனர் மறுப்பது நியாயம் இல்லை.

கமிஷனராக  பதவி ஏற்ற நாள் முதல், கமிஷனர் ஜார்ஜ் பொதுமக்களை நேரில் சந்திக்காமல் இப்படி  ஒரு சூழ்லை ஏற்படுத்தி உள்ளார். எனவே, இந்த வழக்கின் இப்போதைய நிலை குறித்து  எடுத்துக்கூற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வெள்ளிக்கிழமை (இன்று) இந்த நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் நீதிமன்றம் தொடங்கிய உடன், அரசு தலைமை  வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்குக்  கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்ய முயன்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘‘இந்த வழக்கு இன்றைய தினம் 99-ஆவது  வழக்காக உள்ளது. அப்போது மனு கொடுங்கள்’’ என்றார்.

பின்னர் இந்த வழக்கு மதியம் 12.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது   ‘‘பல்வேறு பணிகள் இருப்பதால், போலீஸ் கமிஷனர் இன்று ஆஜராகவில்லை. மேலும்,  அவர் இந்த வழக்கில் ஆஜராக தேவை இல்லை’’ என்று அரசு வழக்கறிஞர்  நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதைக் கேட்ட நீதிபதி கோபத்துடன், ‘‘ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்  ஆகி விளக்கம் அளிப்பதும், போலீஸ் வேலையில் ஒரு பகுதி. டெல்லியில் இதுபோன்ற  வழக்குகள் வரும்போது போலீஸ் அதிகாரிகள் ஆஜர் ஆகிறார்கள். இங்கு மட்டும் ஏன்  ஆஜர் ஆக முடியாது?’’ என்று கேள்வி எழுப்பியவர், ‘‘வருகிற 17 ஆம் தேதி  வியாழக்கிழமையன்று  போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும்’’  என்று உத்தரவிட்டார்.