
கடலூர்: நகைக் கொள்ளையர்களை கடலூர் டெல்டா பிரிவு போலீஸார் நேற்று மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நகை கொள்ளை சம்பவங்களை படித்து, வெறுத்து போனவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி. கடலூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை, கொள்ளையர்களை பிடித்து மீட்டிருக்கிறார்கள் கடலூர் மாவட்ட டெல்டா படையினர்.

கடலூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். நகைக்கடைகளுக்காக கோவையில் இருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் கடலூர் வந்திறங்கினார். அப்போது அவரின் கவனத்தைத் திசைதிருப்பி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தது 4.9.12 அன்று. திருப்பாபுலியூர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதியப்பட்டது. அவர்களால் இந்த வழக்கைக் கண்டுபிடிக்க முடியாததால், கடலூர் மாவட்ட டெல்டா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு, தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த செல்வாகாந்தி, மார்ட்டின் என்ற இருவரை பிடித்து 450 கிராம் தங்கத்தை மீட்டிருக்கின்றனர் டெல்டா படையினர்.
முக்கிய கொள்ளையரான பண்ருட்டி சிவமணியை பிடித்தால்தான் மீதமுள்ள ஒரு கிலோ தங்கம் கிடைக்கும் என்கிறார்கள்.
##~~## |